Published : 01 Apr 2020 03:54 PM
Last Updated : 01 Apr 2020 03:54 PM

வைரஸ் படங்கள் - 4: கண்டேஜியன்- நிகழ்காலத்தின் பிரதியெடுக்கப்பட்ட கடந்த காலம்!

2020-ம் ஆண்டு பிறக்கும்போது புது வருடக் கொண்டாட்டத்தில் குதூகலத்துடன் களிப்புற்றிருந்த நாம் யாரும் இரண்டே மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். ஆனால், ஒரு வைரஸ் உலகம் முழுக்கப் பரவினால் என்னவாகும் என்பதை 2011-ம் ஆண்டே கணித்து எடுக்கப்பட்ட படம்தான் ‘கண்டேஜியன்’.

இத்திரைப்படம், 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை பரவிய சார்ஸ் வைரஸையும், 2009-ம் ஆண்டு கதிகலங்க வைத்த ஸ்வைன் ஃப்ளூ ஆகிய இரண்டு வைரஸ் பரவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஒருவேளை ஆட்கொல்லி வைரஸ் ஒன்று உலகம் முழுக்க அதிவேகமாகப் பரவினால் என்னவாகும் என்று கொஞ்சம் கற்பனை கலந்து எடுக்கப்பட்டது.

இன்று அந்த கற்பனைகள் நிஜமாகிக் கொண்டுள்ளன. ‘ஓஷன்’ஸ் லெவென்’, ‘தி குட் ஜெர்மன்’ போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய இத்திரைப்படம் அறிவியல் துல்லியத்துக்காக வெளிவந்த புதிதில் அறிவியல் வல்லுநர்களால் பாராட்டப்பட்டது. கரோனா வைரஸ் தொற்றின் அபாயம் உலகெங்கிலும் பரவத் தொடங்கிய அதேசமயம் ஒன்பது வருடங்களுக்கு முன்பு வந்த இத்திரைப்படத்தைப் பற்றிய பேச்சும் பரவலாகத் தொடங்கியது. இத்திரைப்படம், நிகழ்காலத்தின் பிரதியெடுக்கப்பட்ட கடந்த காலம்.

பரவும் பதற்றம்

சீனாவில் இருந்து தன் அலுவல் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் பெத் எம்மாஃப், வீடு திரும்பிய சில நாட்களில் மயங்கி விழுவார். பதறி அடித்துக்கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்ப்பார் அவரது கணவர் மிட்ச். சிகிச்சை பலனின்றி பெத் இறந்துவிடுவார். அதிர்ந்து போகும் மிட்ச் வீடு திரும்புவதற்குள் அவரது மகனும் மயக்கமுற்று வீட்டிலேயே இறந்துவிடுவான். இந்தச் சம்பவங்கள் நடக்கும்போதே சீனாவிலும் சிலர் இப்படி மரணிக்க ஆரம்பிப்பார்கள். விஷயத்தின் தீவிரத்தை உணரும் உலக சுகாதார அமைப்பு களத்தில் இறங்கும்.

பெத் தான் முதலில் பாதிக்கப்பட்டவர் என்பதை அறியும் அறிஞர் குழு, அவரின் ஊருக்கு ஒரு மருத்துவக் குழுவையும், இந்த வைரஸ் தோன்றிய மூலத்தைக் கண்டுபிடிக்க சீனாவுக்கு ஒரு குழுவையும் உலக சுகாதார நிறுவனம் அனுப்பி வைக்கும். இந்த வைரஸ் ஒரு பயோ ஆயுதமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமே இந்த நடவடிக்கைகளின் பின்னணியாக இருக்கும். திறமை வாய்ந்த மருத்துவ அறிஞரான எல்லிஸ் என்பவரின் உதவியையும் அறிஞர் குழு நாடும்.

இதற்கு இடையில் இந்த வைரஸ் சமாச்சாரமே கார்ப்பரேட்டுகளின் சதி. இதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சையுள்ளது. எனக்கு நானே அந்த சிகிச்சை எடுத்து வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டேன் என்று இணையம் மூலம் குழப்பம் ஏற்படுத்தும் ஆலன் எனப்படும் சர்ச்சை ஆசாமியின் குளறுபடிகள் மருத்துவர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். ஒரு பதற்றமான சூழ்நிலையின் பல அடுக்குகளை அலசும் விதத்தில் இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கும்.

இறுதியாக வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா இல்லையா என்பது விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கும்.

மேலே குறிப்பிட்ட பல விஷயங்களும், மேலும் இத்திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்பதை இணையத்தையும், தொலைக்காட்சி செய்திகளையும் கூர்ந்து கவனித்தால் புலப்படும். மேலும், தற்போது இருக்கும் பதற்றமான சூழ்நிலை எப்படி எல்லாம் கைமீறிப் போகக்கூடும் என்பதும் இத்திரைப்படத்தில் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இத்திரைப்படம் இயக்குநர்கள், திரைக்கதையாளர்கள் ஆக விரும்புவோருக்கு ஓர் சிறந்த பாடமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. பொதுவாகவே இயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க்கின் படங்களில் ஒரே திரைக்கதையின் பயணத்தில் பல்வேறு கதைகள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி கதைக்கரு என்ற மையப்புள்ளியை பூர்த்தியடையச் செய்யும். இந்த வகையான கதை சொல்லலுக்கு அதிக மெனக்கிடலும் உழைப்பும் தேவை. சினிமா கனவில் இருப்பவர்களுக்குப் பல கற்பனை கதவுகளைத் திறந்து விடவல்லது இத்திரைப்படம். கதை என்பது வெளியில் இல்லை. அது நம்மிடம் இருக்கிறது. நம்மைச் சுற்றி இருக்கிறது. இந்த வரிகளின் ஆழம் இத்திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது விளங்கும்.

-க.விக்னேஷ்வரன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x