Published : 01 Apr 2020 11:28 AM
Last Updated : 01 Apr 2020 11:28 AM

ஏப்ரல் 1: முட்டாள்கள் தினம் உருவானது எப்படி?- சுவாரசிய வரலாறு

உலக அளவில் மகளிர் தினம், நண்பர்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், குழந்தைகள் தினம், தொழிலாளர்கள் தினம் என்று மக்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன்வருவதில்லை.

அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் 'முட்டாள்தனமான அறிவாளிகளின் தினம்' என்று இன்றைய தினத்தைக் கூறினாலும் பிழையாகாது. ஆம்..நாமெல்லாம் பள்ளிப் பருவத்தில்..சக நண்பர்களிடம், வீட்டில் உள்ளவர்களிடம் அன்று ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது.

அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் மறக்க முடியாது. உன் சட்டையிலே என்ன கற ? உன் பின்னே பாம்பு..? என்று ஆரம்பித்து பல ஏமாற்றுக் கேள்விகளை நண்பர்களிடம் சொல்லி...ஏமாற்றி விளையாடி இருப்போம்.. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும். ஏமாற்றுவதையும் ஏமாறுவதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளும் ஒரு தினம்..

உலகம் முழுவதும் பலரைக் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் இன்றைய தினம், எப்படி உருவானது? அதன் வரலாற்றுப் பின்னணியில் பல கதைகள் உண்டு. 1500-களில் ஐரோப்பியர்கள் கடைப்பிடித்த ஒரு பழக்கமாக ஏப்ரல் 1 கூறப்படுகிறது.

அப்போது, அந்த நாளின் பெயர் ஏப்ரல் மீன்கள் தினம். ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஃபிரான்ஸ்ஸில் உள்ள ஆறுகளிலும் நீரோடைகளிலும் நிறைய மீன்கள் இருக்குமாம். அதனால் அந்தச் சமயத்தில் மீன்பிடிப்பது மிகவும் சுலபம். ஆகையால் மீன்கள் ஏமாறும் தினமாக ஏப்ரல் 1 கருதப்பட்டது.

காலப்போக்கில் மனிதர்களை ஏமாற்றும் தினமாக அது மாற்றம் கண்டதாம். ஏப்ரல் 1-ம் தேதி, முட்டாள்கள் தினம் என ஆனது.

புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1-ம் தேதிதான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதன வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், பிரான்ஸ் தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து ஒரு வார காலம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகிறார். திருவிழாவைப் போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்த ஒரு வாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் முதலாம் தேதி பெருவிருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.1562-ம் ஆண்டில் போப் கிரிகோரி புதிய ஆண்டுத் தொடக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் தொடக்க நாளாக ஜனவரி 1-ம் தேதியை அறிமுகம் செய்து வைத்தார்.

இனிமேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டிதான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர். இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

அன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம்.

ஆகவே இம்மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் தேதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள். எவ்வாறாயினும் பிரான்ஸ் 1852-ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660-ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700-ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக்கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள், இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

என்றாலும் 1582-ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508-ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539-ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466-ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது. ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.

இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர். இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாகத் தொடர்ந்திருக்கிறது எனலாம். ஜனவரி மாதம் 1-ம் தேதியைப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக் கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர். இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர்.

இத்தகைய கேலிக்கூத்துகள் சுற்றிச் சுழன்று பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் 'ஏப்ரல் பூல்' விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது நண்பர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் 'ஏப்ரல் மீன்' என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

1986-ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, 'ஏப்ரல் பூல்ஸ் டே' திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாகத் தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீரநடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.. ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டுக்குள்ளேயே குழந்தைகளுடன் ஏப்ரல் ஃபூல்... யாரிடமும் ஏமாறாமல் விளையாடுங்கள்...!

-கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x