Published : 21 Mar 2020 07:28 PM
Last Updated : 21 Mar 2020 07:28 PM
'நாளைய பொழுது நம்மோடு... நலமாய் நடப்போம் பின்னோடு!’
கெட்டதிலும் நல்லது என்று சொல்லுவார்கள். யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு தருணத்திலும் அப்படியான கெட்டதான சூழ்நிலைகளைக் கொண்டு, அவற்றையெல்லாம் கடந்து, அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வந்திருப்பதை புரிந்துணர முடியும். அப்படியாக இப்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் எனும் மிக மோசமான சூழலில் இருந்து, நல்ல நல்ல விஷயங்களை மேற்கொள்வதால் மட்டுமே கரோனா அரக்கனில் இருந்து நாம் தற்காத்துக்கொள்ளமுடியும். அந்தத் தற்காப்பு, நம்மை மட்டுமின்றி நம் குடும்பத்தையும் நம் சந்ததியையும் இன்னும் காக்கும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
புயலும் வெள்ளமும் வந்தது. மின்சாரம் மீண்டும் வர, பத்துநாட்களான நிலையில், டிவி இல்லாமல், செல்போன் நோண்டாமல் மனம் விட்டுப் பேசிய பொழுதுகள் ரசமானவை. புயல் சூழ் உலகாக இருந்த போது நமக்குக் கிடைத்த இன்னொரு விஷயம்... அமைதியான வாழ்க்கை. இப்போது கரோனா வைரஸ். மீண்டும் புத்துணர்ச்சி உலகுக்குச் செல்ல நமக்கொரு அற்புத வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்வோம். பண்பட்டு நிற்போம். இவை நமக்கான நொடிப்பொழுதுகள்.
‘கரோனா’ நம்மூர் லோக்கல் ரவுடியோ தாதாவோ அல்ல. கண்ணுக்குத் தெரிகிற எதிரி அல்ல. அணுவளவும் கண்ணில் படாத கொடூர பூதம். ‘நீயா நானா.. ஒரு கை பாத்துடுறேன்’ என்கிற வீராப்பு பப்பெல்லாம் இங்கே வேகாது. நம்முடைய பலவீனத்தை உணர்ந்து ஒத்துக்கொள்ளும் அதே வேளையில், எதிரி பலத்தையும் அறிந்து வைத்துக்கொண்டு ‘அலர்ட்’டாக இருக்கவேண்டும்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பார்கள். நாம் ஒருவரையொருவர் கைகுலுக்கிக் கொண்டதெல்லாம் வெளிநாட்டினரால் வந்த வினை. இப்போது கைகுலுக்கல் கூடவே கூடாது என்கிறது விஞ்ஞானம். காரணம்... வெளிநாட்டு ‘கரோனா’.
கடந்த பத்து நாட்களாக பசங்களுக்கு விடுமுறை. நான்கைந்து நாட்களாக ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ என்று வீட்டிலிருந்தே வேலை பார்க்கச் சொல்லிவிட்டது நிர்வாகம். ’22ம் தேதி அன்று யாரும், வெளியே செல்லவேண்டாம். காலை 7 முதல் இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருங்கள்’ என்று ஒட்டுமொத்த இந்தியாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே, ‘ஞாயிறு போற்றுதும்’ என்று இந்த ஞாயிற்றுக்கிழமையை, பயனுள்ள நாளாக்குவோம். அது நம் கையில்தான் இருக்கிறது.
பரபர வேகமான வாழ்க்கையில், கணவனை மனைவியோ, மனைவியைக் கணவனோ புரிந்துகொள்ளக்கூட இல்லாமல், ஓடிக்கொண்டே இருக்கிறோம். அப்படியிருக்க, செல்லம் கொடுக்கும் அம்மா என்றும் கேட்டதை உடனே வாங்கித் தரும் அப்பா என்றும் மட்டுமே நினைத்திருக்கிற நம் குழந்தைகளுடனும் வாழ்க்கைத் துணைவியுடனுமாகக் கழிப்போம்; களிப்போம். நாளைய ஞாயிற்றுக்கிழமையில் என்னவெல்லாம் செய்யலாம்?
காலை 5.30 - 6 ; ஒரு கோப்பை அன்பு!
‘ஞாயிற்றுக்கிழமைதானே. இன்னிக்கி ரொம்பநேரம் தூங்கலாம்’ என்பதில் இருந்து எழுவோம். நம் அப்பாக்களுக்கும் தாத்தாக்களுக்கும் எல்லாநாளும் ஒரேநாள்தான். சூரியன் உதிப்பதற்குள் எழுவதுதான் அவர்களின் வாடிக்கை. உதிக்கும் சூரியனைப் பார்ப்பதில் இருந்தே நமக்குள் புத்துணர்ச்சியும் சொல்லத்தெரியாத நம்பிக்கையும் நமக்குள் பூத்துவிடும். இதை நாமும் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் உணர்த்துவோம்.
எழுந்து, பல்தேய்த்து, சுவாமி படத்துக்கு முன் நின்று வேண்டிக்கொண்டு, நெற்றியில் இட்டுக்கொண்டு, காபிக்கு தாத்தாவுடனும் அப்பாவுடனும் காத்திருந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறதா உங்களுக்கு? அப்படி கூடியமர்ந்து, அருந்துகிற ஒரு கோப்பைத் தேநீரோ காபியோ... இனம் புரியாத மணத்தை, மனதில் கொடுக்கும். ‘வாயேன்... ஒரு டீ சாப்பிடலாம்’ என்று தொடங்குகிற நட்பும் பேச்சும், நம் வீட்டிலும் இன்றைக்கு இருக்கட்டும். என்றைக்கும் தொடரட்டும்.
6 முதல் 7 ; ஒருநிலைப்படுத்த தியானம்; ஒருமைப்படுத்த விளையாட்டு
குடும்பத்துடன் அமர்ந்து, நேராக நிமிர்ந்து, ஒரு பத்துநிமிடம் கண்கள் மூடிய தியானம்... நம் அகக்கண் திறக்கும். உறவின் உயிர்ப்பை உயிர் வரை சென்று தொடும். ஐம்பது ப்ளஸ்காரர்களும் அரைக்கால் சட்டை போட்டுக்கொள்ளும் காலமிது. இந்தநாளில்... இந்தநாளிலிருந்து குழந்தைகளுடன் நாமும் அரைநிஜார்க்காரர்களாவோம். ‘ஷட்டில்’ முதலான விளையாட்டுகள், உடலுக்கும் ஃப்ரெஷ். மனசுக்கும் ஜில்.
7 - 8 ; உஷ்ணம் போக்கும் காலை நீராடல்
பொதுவாகவே ஞாயிறன்று நாம் என்ன செய்வோம்? லேட்டாக எழுந்து, லேட்டாக பல் துலக்கி, லேட்டாகச் சாப்பிட்டு, லேட்டாகக் குளித்து, ஒரு தூக்கம். பிறகு மூன்று மணிக்கு மதிய உணவு. மீண்டுமொரு தூக்கம். மாலையில் குளியல் என்றிருப்போம். மற்ற நாளெல்லாம் அலுவலகத்துக்கு ஓடுவதற்காகவும் பள்ளிக்குச் செல்ல அவசரக்குளியல். இன்று நின்று, நிதானித்து குளிப்போம். உஷ்ணம் தீரக் குளிப்போம்.
8 - 8.30 ; பூஜை, வழிபாடு, பிரார்த்தனை
வீட்டுப் பூஜையறை சுவாமிகளோ... தெருப்பிள்ளையாரோ... ஒரு சல்யூட் போட்டுவிட்டு ஓடுவோம். இன்றைக்கு, சுவாமிப் படங்களுக்கு மகன் பூக்களை வைக்கட்டும். மகள் ஊதுபத்தியையும் சாம்பிராணியையும் ஏற்றட்டும். மனைவி, சுவாமிப்படங்களுக்கு சந்தனக் குங்குமமிடட்டும். மந்திரங்களையும் பாசுரங்களையும் தேவார திருவாசகப் பாடல்களையும் சொல்லிக்கொடுங்கள். எல்லோரும் சொல்ல, இந்த உலக நலனுக்கான பிரார்த்தனை நம் வீட்டிலிருந்தே தொடங்கட்டும்.
8.30 - 9.30 ; சமையலுக்கு உதவுங்கள் ஆண்களே! பக்குவம் பெறுவோம்!
சமைப்பதை ருசித்துச் சாப்பிடுகிற சமைக்கத் தெரிந்த கணவனும் கூட வரம். இந்தநாளில், ஆண்கள் சமையல்கட்டுக்குள் நுழைந்து சமைத்துத்தான் பார்ப்போமே. மனைவி ‘கைடு’பண்ண, குழந்தைகளின் விருப்ப உணவை, தந்தை சமைக்க... அந்த உணவு, ஆயிரம் அம்மாக்களின் பக்குவ ருசியுடன் பாச மணம் கமழும்.
கை குலுக்கவேண்டும் என்றில்லை. குழந்தைகளின் கன்னம் கிள்ளவேண்டும் என்பதில்லை. தோள் தட்டியோ முதுகு தடவியோ உச்சிமுகர்ந்தோ... தொட்டுத்தான் பிரியத்தையும் அன்பையும் பாராட்டையும் காட்டவேண்டும் என்பதில்லை.
10 - 11 ; வளர்ந்த கதை சொல்லுங்கள்
தாத்தா என்ன செய்தார், உங்கள் அப்பாவை எப்படி ஆளாக்கினார், உங்கள் பூர்வீகம் என்ன, குலதெய்வம் எங்கே, கஷ்டப்பட்ட நிலையில் இருந்த போது யாரெல்லாம் கைதூக்கிவிட்டார்கள், உங்களின் படிப்பு எங்கே, படிப்பில் எப்படி, ஆசிரியர்கள் யார் யார், நினைத்த வாழ்க்கை, கிடைத்த வேலை, மனைவியைப் பெண் பார்த்த சூழல், உங்கள் வாழ்க்கையில் முதல் சம்பளம், செய்த செலவு, வேகவேகமாகத் தோற்றது, கொஞ்சம் கொஞ்சமாக ஜெயித்தது என்று சொல்லுங்கள்.
அப்பாவிடம், சித்தப்பா பெரியப்பாவிடம், மாமாக்களிடம் பக்கத்துவீட்டுக்காரர்களிடம் பால்ய நண்பர்களிடமான அந்தக்காலங்களை கதையாகச் சொல்லுங்கள். குட்டிக்குட்டிச் சம்பவங்களாகச் சொல்லுங்கள். அந்தச் சம்பவத்தால் கற்ற பாடங்களைச் சொல்லுங்கள். போரடிக்காமல் சொல்லுங்கள்.
அடுத்து... ‘தொடரும்’ போட்டுவிட்டு மதிய உணவுக்கான வேலைகளைத் தொடங்குங்கள்.
நடுவே, குழந்தைகளுடன் கேரம் விளையாடுவதோ செஸ் விளையாடுவதோ உங்கள் விருப்பம்; உங்கள் சாய்ஸ்.
11 - 12 ; சுத்தம் என்பது நமக்கு
நாள் முழுக்க, வாரம் முழுக்க, வருடம் முழுக்க உழைத்துக்கொண்டிருக்கிற கேஷூவல், மெடிக்கல், வீக்லி ஆஃப் இல்லாத மனைவியருக்கு ஓய்வு கொடுக்கிற நாளாக ஆக்குங்கள். குழந்தைகளுடன் வீட்டைச் சுத்தப்படுத்தும் பணியில் இறங்குங்கள். கழிவறையைக் க்ளீன் செய்யுங்கள். கழிவறைச் சுத்தமே சுகாதார வித்து என்பதைச் சொல்லிக்கொடுங்கள்.
ஃபிரிட்ஜை கழுவுங்கள். பீரோவில் இருந்து எல்லாத் துணிகளையும் எடுத்து வெளியே வையுங்கள். துடைத்து, பேப்பர் மாற்றி, துணிகளை மடித்து, அழகாக அடுக்கிவையுங்கள். அந்துருண்டை வையுங்கள். அந்துருண்டையின் மகத்துவம் சொல்லிக்கொடுங்கள்.
12 - 1 ; குடும்பமாய் சமையல்; குடும்பமாய் சாப்பாடு
ஆளுக்கொரு வேலை செய்து, சமைப்பது தனி சுகம். காய்கறிகளை கழுவச் சொல்லிக்கொடுங்கள். காய்கறிகளின் ஒவ்வொரு சத்துகளையும் சொல்லிக்கொடுங்கள். கீரைகளின் வகைகள் சொல்லுங்கள். அவை தரும் பலன்களைச் சொல்லுங்கள். உணவில், காய்கறிகள் முக்கால், சாதம் கால் என்பதை நீங்கள் பழக்கமாக்கிக் கொண்டால்தான் குழந்தைகளும் பழக்கத்துக்கு வருவார்கள்.
ஹாலுக்கு சமைத்ததை எடுத்துவந்து, சப்பளங்கால் போட்டு சாப்பிடுங்கள். குடும்பத்துடன் சாப்பிடுங்கள். உங்களின் பால்யத்தில் அம்மாவோ பாட்டியோ அத்தையோ, கையில் சாதம் உருட்டித் தந்ததைச் சொல்லுங்கள். அப்பா உணவெடுத்துச் செல்லும் தூக்குச்சட்டி, நீங்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸ் என சொல்லுங்கள். உணவு ருசியை விட அலாதியானது வாழ்க்கை. அதை ருசிக்க ருசிக்கச் சொல்லுதலே பாடம்.
1.30 - 3 ; கொஞ்சமே கொஞ்சம் ஓய்வு
இந்த ஓய்வு அவசியம். மகனிடம் மகளிடம் நீங்கள் சொன்ன விஷயங்களை அவர்கள் அசைபோடுகிற தருணமாகவும் அந்த ரெஸ்ட் அவர்களுக்குக் கொடுக்கட்டும். ஓய்வெல்லாம் நமக்குத்தான். குழந்தைகளை குழந்தைகளாகவே விடுங்கள்.
3.30 - 4 ; ஒரு டீயைப் போடுவோம்!
பிஸ்கட் அல்லது ரஸ்க் அல்லது ஏதேனும் சுண்டல் வகை. ஒரு கப் டீ அல்லது காபி. ‘அப்புறம் நான் காலேஜ்ல படிக்கும்போது என்னாச்சுன்னா..’ என்று ப்ளாஷ்பேக்கை சொல்லி அறுவைப்பட்டம் வாங்காதீர்கள். ‘அப்புறம் என்னப்பா ஆச்சு, அம்மா நீ எங்கேம்மா படிச்சே?’ என்று குழந்தைகள் க்யூரியாஸிட்டியுடன் கேட்கத் தூண்டுங்கள். ‘சொல்றேன்... சொல்றேன்’ என்று டிரெய்லர், டீஸரைப் போடுங்கள்.
4 - 5 ; விளையாடுவோம்
சின்னதாக விளையாடலாம். முடிந்தால் குழந்தைகளுடன் விளையாடலாம். அல்லது விளையாடுவதைப் பார்த்து ரசிக்கலாம்.
5 - 5.15 ; கைதட்டல்தான் தேங்க்ஸ்
உலகின் அனைத்து மருத்துவர்களுக்காகவும் சேவையாளர்களுக்காகவும் செவிலியர்களுக்காகவும் கைதட்டுவோம். கைதட்டி நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம். இது ‘கரோனா’வை எதிர்த்து நம்மை வாழச் செய்பவர்களுக்கான நன்றி. இந்த உணர்வு, நம் சந்ததிக்குப் பரவும். உதவிக்கு நன்றி சொல்லணும் என்கிற நல்லுணர்வு பெருகும்.
5.30 - 6.30 ; கூட்டிப்பெருக்கி, விளக்கேற்றி...
மாலையில் வீட்டை கூட்டி சுத்தம் செய்யுங்கள். முடிந்தால் ஒரு குளியல். விளக்கேற்றுங்கள். மீண்டும் குடும்பத்துடன் பிரார்த்தனை. கூட்டுப் பிரார்த்தனை. உலக நலனுக்காக பிரார்த்திப்போம்.
6.30 - 7 ; உறவுகள் அறிமுகம்
ஆல்பம், வீடியோ என்றிருக்குமே. எப்போதாவது நம் வீட்டுக்கு வருகிற உறவுக்காரர்களுக்கு அதைக் காட்டிப் பேசுவதெல்லாம் இருக்கட்டும். நம் உறவுகளை நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவேண்டாமா. பள்ளி, விளையாட்டுப் போட்டியில் பரிசு, ஆண்டுவிழா புகைப்படங்கள், குற்றாலம் சுற்றுலா, கொடைக்கானல் டிரிப், ஏரியா ஸ்டூடியோவில் எடுத்த புகைப்படம், ஹால் டிக்கெட்டுக்கு எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என காட்டி விளக்குங்கள்.
அப்பாதான், குழந்தைகளின் முதல் ரோல்மாடல். நீங்கள் உண்மையிலேயே ரோல்மாடலாக விஸ்வரூபமெடுக்கும் தருணம் அது. அடுத்து, திருமண வீடியோ. கல்யாண பந்தத்தின் பெருமையையும் உறவுகளின் அவசியத்தையும் பிள்ளைகள் உணரும் இனிய வேளையாக சம்பவங்களை நினைவுகூருங்கள்.
7 - 8 ; நைட் உணவு லைட்டாகவே!
இரவு உணவு எளிய உணவாகவே இருக்கட்டும். எளிதில் ஜீரணமாகிற உணவாகவே இருக்கட்டும். அந்த உணவின் தன்மையைச் சொல்லிக்கொடுங்கள். மீண்டும் கூட்டாகச் சேர்ந்து சமைக்கலாம். கூட்டாக அமர்ந்து சாப்பிடலாம்.
8 - 9 ; படித்த புத்தகம், பிடித்த சினிமா, வாழும் வாழ்க்கை
பால்யத்தில் இருந்து இன்று வரை உங்களைப் புடம் போட்ட புத்தகங்களை, எழுத்தாளர்களை அறிமுகம் செய்யுங்கள். அந்த எழுத்து ஏற்படுத்திய தாக்கம் சொல்லுங்கள். புத்தகம், மனதை செம்மையாக்கிய மாயத்தை விவரியுங்கள்.
கருப்பு வெள்ளை சினிமா, டூரிங் டாக்கீஸ், கடலைமிட்டாய், முறுக்கு, டிக்கெட் க்யூ, ஹவுஸ்புல் போர்டு, ஆல் இண்டியா ரேடியோ, விவிதபாரதி, டி.எம்.எஸ். பாட்டு, இளையராஜா இசை, பிடித்த பாடல்கள் என்று சொல்லுங்கள். பாடும் திறனிருந்தால் பாடிக்கூடக் காட்டுங்கள். மனைவியின் பால்யத்தையும் சொல்லச் சொல்லுங்கள். சொல்லப்போனால், உங்களுக்கே அதுவொரு அனுபவப்புதுமைதான் போங்கள்!
விட்டுக்கொடுத்த வாழ்க்கை, மனைவியின் ப்ளஸ், சேமித்த புத்திசாலித்தனம், ஏமாந்தது, ஏமாற்றியவர்கள், பொறாமையைத் தாண்டி அடைந்த வெற்றி என உங்கள் வாழ்க்கையைச் சொல்லச் சொல்ல, உங்கள் குழந்தைகளுக்கு மிகப்பெரிய சாதனையாளராக நீங்கள் திகழ்வீர்கள்.
9 - 9.30 ; கனவு கேளுங்கள்; காது கொடுங்கள்
குழந்தைகளின் ஆசைகள் என்னென்ன, எதிர்காலம் குறித்த கனவு என்ன? அவர்களிடம் கேளுங்கள். அவர்களுக்கு காதையும் மனசையும் கொடுங்கள். சின்னதும் பெரிதுமாக அவர்கள் மனம் திறந்து சொல்வதையெல்லாம் கேளுங்கள். மனதாரக் கேளுங்கள். கேட்டால் சொல்வதும் சொல்வதைக் கேட்பதும் மனித சந்தோஷங்களின் உச்ச சம்பவங்கள். பிறகென்ன... எல்லோருக்கும் நல்லிரவு. குட்நைட்.
‘நாம கேட்டோம், பசங்க பட்டுபட்டுன்னு சொல்லிட்டாங்களே’ என்று நீங்கள் நெகிழ்வீர்கள்.
’நாம சொல்றதையெல்லாம் எவ்ளோ ஆத்மார்த்தமா கேக்கறாங்க’ என்று குழந்தைகள் மகிழ்வார்கள்.
நாளைய ஞாயிறை வழக்க ஞாயிறாக, சண்டே ஹாலிடே என்பதாக, தூக்கம் உணவு, உணவு தூக்கம் என்பதாக ஆக்கிக்கொள்ளாமல், பயனுள்ள வாழ்வாக, வாழ்வின் டிரெய்லராக, வாழ்ந்துதான் பாருங்களேன்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT