Last Updated : 14 Aug, 2015 01:55 PM

 

Published : 14 Aug 2015 01:55 PM
Last Updated : 14 Aug 2015 01:55 PM

யூடியூப் பகிர்வு: 6 நிமிட குறும்படத்தில் சுதந்திரத்தின் மகத்துவம்

ஒவ்வோர் ஆண்டும் வருகிறது ஆகஸ்ட் 15. அன்று மட்டும் மிடுக்காக நாம் குத்திக் கொள்கிறோம் தேசியக் கொடியை, 'நம் இதயத்துக்கு பக்கத்தில்'. ஆனால், என்றாவது யோசித்திருக்கிறோமா, சுதந்திரம் கிடைக்காமலே போயிருந்தால் என்னவாகியிருக்கும். இன்னமும் ஆங்கிலேயரிடமே கட்டுண்டு இருந்திருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று?

6 நிமிடங்கள் ஒதுக்கி மனோஜ் பாஜ்பாய், ரவீனா டான்டன் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தைப் பாருங்கள். நிழலின் அருமை வெயிலில் காயும் போதுதான் தெரியும் என்பதைப் போல சுதந்திரத்தின் மகிமையும் ஒருவேளை நாம் அடிமையாக இருந்திருந்தால் என்று எண்ண அலைகளை சற்று கரடுமுரடான யோசனைக்கு திசை திருப்பிவிட்டு யோசித்துப் பார்க்க வைக்கிறது இக் குறும்படம்.

சொந்த மண்ணில் அந்நியனுக்கு தலை வணங்கி நிற்கும் தர்ம சங்கடமான சூழ்நிலை எவ்வளவு கொடூரமானது.

ஓர் இனிய இரவில், இருசக்கர வாகனத்தில் மெலிதாக ஏதோ பாடிக் கொண்டு கணவருடனான அந்த பயணத்தை சிலாகித்துக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண். சட்டென மாறிய சூழலில் ஒரு விபத்து ஏற்படுகிறது. விபத்து ஏற்படுத்திய காரின் 'கொய்ங்' என்ற ஓசை அடங்கியவுடன் கேட்ட முதல் வார்த்தை... அருகே இருக்கும் நட்சத்திர ஓட்டலுக்குள் மனைவியை தூக்கிக் கொண்டு செல்கிறார் அந்த நபர்...

என்ன நடந்திருக்கும்? நடக்கும்? நீங்களே பாருங்கள்...