Last Updated : 24 Feb, 2020 10:37 AM

1  

Published : 24 Feb 2020 10:37 AM
Last Updated : 24 Feb 2020 10:37 AM

சிவகங்கை அருகே 131 ஆண்டுகள் பழமையான ஜமீந்தார் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை

சிவகங்கை அருகே 131 ஆண்டுகள் பழமையான ஜமீந்தார் கால கல்வெட்டை கொல்லங்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநரும் தொல்லியல் ஆய்வாளருமான புலவர் கா.காளிராசா கண்டுபிடித்துள்ளார்.

சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டி கிராமத்திற்கு முன்னதாக களத்தூர் விலக்கில் அமைந்துள்ளது பாண்டியாபுரம்.

இங்கு கண்மாய்ப் பகுதியில் உள்ள முனிக்கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்று கள ஆய்வு செய்துள்ளார் புலவர் கா.காளிராசா.

அப்போது அந்தக் கல்வெட்டு 131 ஆண்டுகள் பழமையான ஜமீந்தார் கால கல்வெட்டு என்பது தெரியவந்தது.

இது குறித்து புலவர் கா.காளிராசா, "சிவகங்கைப் பகுதியை ரராமநாதபுரம் சேதுபதி மன்னர்களிடமிருந்து தனிப்பகுதியாகப் பெற்று 1729-ம் ஆண்டிலிருந்து மன்னர் சசிவர்ணர் ஆண்டு வந்தார்.சிவகங்கையின் கடைசி மன்னரான வேங்கை பெரிய உடைய ராஜாவிற்குப் பிறகு 1801-லிருந்து ஜமீன்தார் ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. அதில் 1883-லிருந்து 1898 வரை மூன்றாவது கௌரி வல்லப உடையன ராஜா ஆட்சி செய்து வந்ததாக பட்டியல் வழி அறிய முடிகிறது. அவரது மகனான மகமு சுந்தர பாண்டியனால் இக்கல்வெட்டு வெட்டிவைக்கப் பெற்றிருக்கலாம்" என்று கூறினார்.

கல்வெட்டுச் செய்தி:

இக்கல்வெட்டில் 16 வரிகள் நெருக்கமாக எழுதப்பெற்றுள்ளன. படுக்கை வசமாக கல்வெட்டு தரையில் கிடக்கிறது, கல்வெட்டுச் செய்தியாவது 1888-ல் சூன் மாதம் 6ஆம் நாள் சருவதாரி ஆண்டு வைகாசி மாதம் 21 ம் நாள் வெள்ளிக்கிழமை ஜமீன்தார் அரண்மனைச்சாமியாகிய கௌரி வல்லபத் தேவர் ஸ்ரீ கோட்டை நாச்சியாராகிய மெலிறமினை மகமு நாச்சியாரவர்கள் பெற்ற மகமு சுந்தர பாண்டியத் தேவரவர்கள் இந்த கண்மாயும் மடையும் முனியப்ப சாமி கோவிலும் கட்டி மகமு சுந்தர பாண்டியாபுரம் கிராமம் என்று பெயருமிட்டு இருக்கிறது. என எழுதப் பெற்றுள்ளது.

தாய் பெயரை முன் சூட்டியவர்.

பொதுவாக அனைவரும் தந்தையின் பெயரை முன் சூட்டிக் கொள்வர், ஆனால் இவரோ தன்னை மகமு சுந்தர பாண்டியன் எனக் கூறிக்கொள்வதின் வழி தாயின் பெயரை முன் சூட்டி தாய்க்கு பெருமை சேர்க்கிறார்.

சிவகங்கை பெருமாள் கோவிலும் மகமு சுந்தர பாண்டியரும். சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மகமு சுந்தர பாண்டியருக்கும் அவரது தாய் மகமு நாச்சியாருக்கும் சிலை உள்ளது, 350 ஆண்டுகளுக்கு முன்பு இக் கோவில் கட்டப் பெற்றதாக செய்தி வழங்குகிறது. மேலும் மகமு சுந்தர பாண்டியரின் நினைவாக அவரது அன்னையால் இக்கோவில் கட்டப்பெற்றதாகவும் செய்தி வழங்குகிறது. இக்கல்வெட்டின் வழி இவர் காலம் 131 ஆண்டுகளுக்கு முன்பு என்பது தெளிவாகிறது.

இக்கோவிலில் 13 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் இருப்பதை இந்திய தொல்லியல் துறை பதிவு செய்துள்ளனர், இக்கோவிலில் கடந்த குடமுழுக்கின் போது அகற்றப்பெற்று கேட்பாரற்றுக்கிடந்த 13-ம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுகள் சிவகங்கை அருங்காட்சியத்தில் வைக்கப் பெற்றுள்ளது. சிவகங்கை நகர் 1733-ல் அமையப் பெற்றாலும் 13-ம் நூற்றாண்டிலே இக்கோவில் இருந்ததை அறிய முடிகிறது.

இக்கோவில் மகமு சுந்தர பாண்டியர் காலத்தில் பழுதுநீக்கி குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x