Published : 21 Feb 2020 12:35 PM
Last Updated : 21 Feb 2020 12:35 PM
பிப்.21- உலகத் தாய்மொழி நாள்
1952-ம் ஆண்டு இதே பிப்ரவரி 21 அன்று, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
2000 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பிப்ரவரி 21-ம் தேதி "பன்னாட்டுத் தாய்மொழி நாள்" ஆகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகத் தாய்மொழி நாள் இந்தியாவிற்கு ஒரு மாபெரும் வரலாற்று உண்மையை நினைவுபடுத்துகிறது.
மதத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டின் அரசு, எந்த மதத்தைப் பின்பற்றுகிறதோ, அதே மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு அந்த அரசால் எந்தத் துன்புறுத்தலும் நிகழாது என்று கூறுபவர்களுக்கு வரலாறு தரும் பதில்தான் பிப்ரவரி 21, உலகத் தாய்மொழி நாள்.
இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் நாடு, தங்கள் தாய்மொழியில் கல்வி வேண்டும் என்று கேட்டதற்காக இஸ்லாம் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இஸ்லாம் மதத்தைப் பின்பற்றிய நான்கு மாணவர்களைக் கொலை செய்தது. அரசை விமர்சிப்பவர்கள் அதே மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அரசின் நியாயமற்ற செயலைக் கண்டித்ததால் துன்பத்திற்கு ஆளானார்கள் என்பதுதான் வரலாறு.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு துன்பம் நிகழுமா? நிகழாதா? என்று கூற இயலாது. ஆனால் நியாயத்திற்காகப் போராடியவர்கள் வரலாறு நெடுகத் துன்பம் அனுபவித்ததைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த வரலாற்றை உணர்ந்துதான் இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்ற கோட்பாட்டை முன்வைக்கிறது. அரசு அனைவரையும் சமமாகக் கருத வேண்டும். மதத்தை வைத்து மக்களைப் பாகுபடுத்தக் கூடாது.
மொழி அழிந்தால் மக்களின் பண்பாட்டு அடையாளம் அழியும். பண்பாட்டு அடையாளம் இல்லாத மக்கள், வரலாறு அற்றவர்களாகப் போவார்கள்.
தன்மானத்துடன் வாழ, நாம் நம் தாய்மொழி காப்போம்.
தாய் மொழியே பயிற்று மொழி. தாய் மொழியே ஆட்சி மொழி. தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்குவோம்.
தமிழ் மொழிக்காக இன்னுயிர் தந்த தியாகிகள் உள்ளிட்ட மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.
-பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT