Published : 12 Aug 2015 10:26 AM
Last Updated : 12 Aug 2015 10:26 AM

எர்வின் ஷ்ரோடிங்கர் 10

நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய இயற்பியலாளரும், குவான்டம் இயற்பியலின் முன்னோடியுமான எர்வின் ஷ்ரோடிங்கர் (Erwin Schrodinger) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

l ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் (1887) பிறந்தார். தந்தை தாவரவியல் ஆராய்ச்சியாளர். இத்தாலிய பாணி ஓவியம் வரைவதில் நிபுணர். சிறுவன் எர்வின் வீட்டிலேயே ஆங்கிலம், ஜெர்மன் மொழி கற்றான்.

l வியன்னா பல்கலைக்கழகத்தில் பயின்று 1910-ல் முனைவர் பட்டம் பெற்றார். அங்கேயே இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர் பதவியை ஏற்றார். முதல் உலகப் போரின்போது, ராணுவத்தில் பணியாற்றினார். பண்டைய இலக்கிய, இலக்கணங்களிலும் ஆர்வம் கொண்டவர். ஜெனா, ஸ்டுட்கார்ட், பிரஸ்லாவ் கல்லூரிகளில் பணிபுரிந்தார். பிறகு, ஜூரிச் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார்.

l கோட்பாட்டு இயற்பியலில் ஆராய்ச்சிகள் செய்து பல கட்டுரைகளை வெளியிட்டார். தனது ஆசிரியர் ஃபிரென்ஸ் எக்ஸ்னருடன் இணைந்து பணியாற்றினார். அதிர்வலைகள் கோட்பாடு, பிரவ்னியன் இயக்கம், கணிதப் புள்ளியியல், அணுவியல் கோட்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தார்.

l ஷ்ரோடிங்கர் அலை சமன்பாட்டை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளை 1926-ல் தொடங்கினார். அணுவில் உள்ள பொருட்களின் அலைப்பண்பு இயக்கத்தை விளக்கும் அடிப்படைச் சமன்பாட்டை நிறுவினார். நியூட்டனின் விதிகளுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றதாக ஷ்ரோடிங்கர் சமன்பாடு கருதப்படுகிறது. இதற்காக பிரிட்டிஷ் இயற்பியலாளர் பால் டிராக்குடன் சேர்த்து இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1933-ல் வழங்கப்பட்டது.

l எலெக்ட்ரான் குவான்டம் நிலையில் துகள்களாகவும், அலைகளாகவும் இரண்டுவிதமாக இயங்கும். சூப்பர்பொசிஷன் எனப்படும் இந்நிலையை இவர், எளிமையான ‘கேட் (பூனை) தியரி’ மூலம் விளக்கினார்.

l ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்த பிறகு ஜெர்மனியில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். ஆஸ்திரியா, பெல்ஜியம், ரோமில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் 7 ஆண்டுகள் பணிபுரிந்தார். பிறகு இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஃபெலோஷிப் பெற்று பணிபுரிந்தார்.

l அயர்லாந்தின் டப்ளின் நகரில் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் ஆஃப் டப்ளின் என்று புதிதாக தொடங்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இணைந்தார். அங்கு இயற்பியல் உயர்கல்வித் துறை இயக்குநராக பொறுப்பேற்றார். 1955-ல் ஓய்வு பெறும் வரை அங்கு பணிபுரிந்தார்.

l புவிஈர்ப்பு விசை, மின்காந்தத் தன்மை குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இயற்பியல், தத்துவம், வரலாற்று அறிவியல் குறித்தும் ஆராய்ச்சி செய்தார். தன் ஆராய்ச்சிகள் பற்றி பல கட்டுரைகளை வெளியிட்டார்.

l இவர் சிறந்த தத்துவவாதியும்கூட. பண்டைய கிரேக்க அறிவியல் தத்துவங்கள் குறித்து தான் செய்த ஆராய்ச்சிகளை ‘நேச்சர் அண்ட் தி கிரீக்ஸ்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். ‘வாட் ஈஸ் லைஃப்’, ‘மை வ்யூ ஆஃப் தி வேர்ல்டு’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

l அறிவியலில் ஏறக்குறைய அனைத்து பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவரும், பன்முகத் திறன் கொண்ட அறிவியலாளருமான எர்வின் ஷ்ரோடிங்கர் 74 வயதில் (1961) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x