Published : 15 Feb 2020 05:03 PM
Last Updated : 15 Feb 2020 05:03 PM
அண்மையில் நான் படித்து அதிர்ந்த ஒரு கவிதையை 'இந்து தமிழ்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒருநாள் மழை மாலை. முகநூலில் மேய்ந்து கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு கவிதை பார்வையில் இடறியது. இடறிய அக்கவிதை என்னுள் ஆழமாக சில உணர்வு மலர்களை உதிர்த்துச் சென்றது.
அந்தக் கவிதை ஓராயிரம் கேள்விகளை என்னுள் எழுப்பின.
அந்தக் கவிதையின் சூடு ஆறுவதற்குள் அந்த அசத்தல் கவிதையை எழுதியிருந்த அன்புச் சகோதரி, கவிஞர் பாரதி பத்மாவதியை அலைபேசியில் அழைத்தேன்.
''உங்கள் அசத்தல் கவிதை எழுப்பிய அதிர்வலைகள் இன்னும் பல்லாயிரம் வாசகர்களின் மனத்திலும் மையம் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் இந்தக் கவிதையை நான் எங்கள் ‘இந்து தமிழ்’இணையத்தில் பயன்படுத்திக் கொள்ளலாமா?” என்று அனுமதி கேட்டேன்.
''தாராளமாப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணா…” என பாரதி பத்மாவதி பச்சைக்கொடி காட்ட அரங்கேறியது அந்த அதிர்வுக் கவிதை.
கேட்டு வாங்கி… அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்தக் கவிதையைப் பிரசுரிக்க என்ன காரணம் என்பதை…
கீழே உள்ள கொடுஞ்செய்தியையும், அதற்குரிய புகைப்படத்தையும் பார்த்து… மனம் கசிந்துவிட்டு…
நான் குறிப்பிடும் கவிஞர் பாரதி பத்மாவதியின் கவிதையை நீங்கள் வாசிக்கும் தருணத்தில் மெ…ல்… ல உணர்வீர்கள்.
செய்தி இதுதான்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகில் உள்ளது நடூர். இங்கு சக்ரவர்த்தி துகில் மாளிகை என்ற பெயரில் துணிக்கடையை சிவசுப்ரமணியம் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டைச் சுற்றிலும் 20 அடி உயரத்துக்குத் தீண்டாமைச் சுவரைக் கட்டி வைத்திருந்தார். கருங்கல்லால் கட்டப்பட்ட அந்த தீண்டாமைச் சுவர் பராமரிப்பின்மை காரணமாகக் கடந்த டிசம்பர் 3-ம் தேதி பெய்த மழையின்போது அதிகாலை 5.30 மணிக்கு அருகில் இருந்த குடியிருப்பின் மீது இடிந்து விழுந்தது.
இதில் மூன்று வீடுகள் முழுமையாக நசுங்கி அதில் வசித்த பெண்கள் உட்பட 17 பேரும் உடல் சிதைந்து இறந்தனர். 17 பேரில் இரண்டு பேர் குழந்தைகள் என்பது கண்ணீர்க் கணக்கு. இதுதான் துயர் மிகுந்த அந்தச் செய்தி.
இனி… இந்தக் கவிதையை வாசியுங்கள்:
ஒரு சுவர்
*******
உடுப்புக் களைந்துதான் குளித்தோம்
வரவேற்பறைக்கு
வடக்கு மூலையில்
பாதுகாத்துப் பிரித்தது
குளியறையை ஒரு சுவர் .
நான்கு தலைமுறை
தாம்பத்தியத்தை நிகழ்த்தி
பிள்ளைப் பெற்றுக் கிடந்ததும்
தெருவோர தெற்கு மூலையில்தான்.
படுக்கையறையை
வகுத்தளித்தது ஒரு சுவர்.
காசநோய் கண்டு
இருமல் இயந்திரமாய் மாறியிருந்த
தாத்தாவின் அறையையும்
தலையெழுத்தென புலம்பித் தீர்த்த
பாட்டியிருந்த அறையையும்
இரண்டாய்
வகுத்தளித்ததும்
ஒரு சுவர் .
உழைத்துக் களைத்து
ஓய்வெடுக்கும் அறையும்
உணவு சமைக்கும் அறையையும்
உண்டபின் செரித்து, பின்
கழிக்கும் அறைகளையும்
நம்பிக்கையாய்
பிரித்தளித்ததும்
ஒரு சுவர்.
சுவரில் வர்ணம் பூசுவதுண்டு
வர்ணத்திற்காய் எழுப்பிய
சுவருமுண்டோ?
உடைந்து சரிந்து
எல்லா நம்பிக்கைகளையும் கொன்று
எரியூட்டிய
ஒரு கைக்கூலியுமானது
ஒரு சுவர் !
- பாரதி பத்மாவதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT