Published : 05 Feb 2020 02:03 PM
Last Updated : 05 Feb 2020 02:03 PM
சர்வதேச புற்றுநோய் தினம் நேற்று (பிப்ரவரி 4) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று ஒரே நாளில், புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், பேரணிகள், ஆலோசனைகள் என எல்லாம் நிறைவாகவே வழங்கப்பட்டன. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்களின் கதைகள் சாட்சிகளாக ஆவணப்படுத்தப்பட்டன. இவை எல்லாம் மிக மிக அவசியம்.
ஆனால், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்காக ஒருவகை சிகிச்சை இருக்கிறது. அதுதான் மரண வலி தணிப்புச் சிகிச்சை (பேலியேட்டிவ் கேர்). இத்தகைய சிகிச்சை மீது இன்னும் அதிக ஒளி பாயவில்லை என்பதாலேயே இந்தச் சிகிச்சையின் உன்னதமும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது.
அப்பேற்பட்ட உன்னத சிகிச்சையைச் செய்து வருகிறது மதுரையில் உள்ள நேத்ராவதி வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை மையம்.
அந்த மையத்தில் மொத்தம் 7 மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் பொது மருத்துவரான டாக்டர் பாலகுரு 'இந்து தமிழ்' இணையதளத்துக்காகப் பேசினார்.
"மரணம் நம் கண் முன் தெரியும்போது எஞ்சியுள்ள நாட்களைக் கடக்க அன்பும், அரவணைப்பும் தவிர வேறு என்ன தேவைப்படப்போகிறது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நாங்கள் செய்வதும் ஒரு கட்டிப்பிடி வைத்தியம் தான்.. எங்களுக்கு எல்லோருமே ஜாகிர்தான்" என்று ஆரம்பித்தார். ( வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் வரும் புற்றுநோயாளியின் பெயர் ஜாகிர் )
பேலியேட்டிவ் கேர் என்றால் என்ன?
இதைத்தான் முதலில் மக்களுக்கு விளக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் நாங்கள் நடத்துவது ஆதரவற்றோர், முதியோருக்கான இல்லம் என்றே பலரும் கருதுகின்றனர். சிலர் எங்களிடம் வந்து இங்கேதான் இத்தனை முதியவர்கள் இருக்கின்றனரே நாங்கள் அழைத்து வருபவர்களை மட்டும் ஏன் சேர்த்துக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒருசிலர் ஆவேசமாக சண்டையிடுவதும் உண்டு.
பிறப்பு எப்படி இனிமையானதாக இருக்கிறதோ, பிறப்புக்கு எப்படி கவனிப்புகளும் சிகிச்சைகளும் இருக்கின்றனவோ அதேபோல் ஒரு மனிதரின் இறப்பும் அப்படி இருக்க வேண்டும். அப்படி, மரணத்தின் வாசலில் நிற்பவர்களுக்கு அன்பும், அரவணைப்பும் தரும் சிகிச்சைக்குப் பெயர் தான் பேலியேட்டிவ் கேர் (மரண வலி தணிப்புச் சிகிச்சை).
அன்பும், அரவணைப்பும் என்றால் கருணைக் கொலை போலவா? என்றும் சிலர் கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு வலி நிவாரண மருந்துகளை மட்டும் கொடுப்போம்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு புற்றுநோயாளிக்கு திடீரென காய்ச்சல் அதிகரிக்கும். அப்போது அவருக்கு காய்ச்சல் மாத்திரைகள் கொடுப்போம். வாந்தி அதிகமானால் ஒரு எமிசெட் மாத்திரை தருவோம். வலியைக் குறைக்க மார்ஃபின் கொடுக்கிறோம். இப்படி அறிகுறிகளுக்கு ஏற்ப வலி நிவாரணிகளை வழங்குவோம். இதை ஆங்கிலத்தில் சிம்ப்டமேட்டிக் ட்ரீட்மென்ட் (Symptomatic treatment) என்பர். இனி சிகிச்சையால் எந்தப் பலனும் இல்லை என்ற நிலையில், ஒரு குடும்பத்தினர் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் குறிப்பிட்ட நோயாளியின் சிகிச்சைக்கு செலவழிக்கச் செய்வது மற்ற அனைவரின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிடுகிறது.
அதனால், இறக்கும் நிலையில் உள்ள நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து, உளவியல் ரீதியாக கவனித்துக்கொள்வதை பேலியேட்டிவ் கேரில் செய்கிறோம்.
இவர் 6 வாரங்களில் இறந்துவிடுவார் என்று அரசு மருத்துவமனையால் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு புற்றுநோயாளி எங்கள் மையத்தில் 8 மாதங்கள் வரை இருந்தார். அவருக்கு வலி நிவாரண சிகிச்சைகள் மட்டுமே செய்தோம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவர் இப்படியே குறைந்தபட்ச மருந்துகளுடன் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளாவது இருந்துவிட மாட்டோமா என்று விரும்பினார்.
உங்கள் மையத்தில் இருப்பவர் இறந்தபின் என்ன நடைமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள்?
பேலியேட்டிவ் கேரில் இருக்கும் ஒரு நபர் இறந்தவுடன் அவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து உடலை ஒப்படைப்போம். ஒருவேளை ஆதரவற்ற நபர் என்றால், அவரைப் பற்றிய விவரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டு காவல்துறையின் அனுமதி பெற்று இறுதிச்சடங்கை நாங்களே செய்வோம்.
முதியோர் இல்லத்தை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். ஆனால், பேலியேட்டிவ் கேர் மையத்தை மருத்துவர்கள் மட்டுமே நடத்த இயலும்.
பேலியேட்டிவ் கேர் ஆரம்பிக்க வேண்டும் என்றால் இந்தியன் அசோஷியேஷன் ஆஃப் பேலியேட்டிவ் கேர் அனுமதி பெற வேண்டும், அதேபோல் வேர்ல்டு அசோஷியேஷன் ஆஃப் பேலியேட்டிவ் கேர்-ல் பதிவு செய்ய வேண்டும். அண்மையில், தமிழ்நாடு பேலியேட்டிவ் கேர் அசோஷியேஷன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கும் நேத்ராவதி மையத்தைப் பதிவு செய்துள்ளோம்.
ஆகையால் இங்கே இறப்பவர்கள் பற்றி முழு ஆவணத்தையும் பாதுகாக்கிறோம்.
நீங்கள் இந்த மையத்தை ஆரம்பித்ததின் பின்னணி என்ன?
நானும் எனது நண்பர்கள் 7 பேரும் கிராமம் கிராமமாகச் சென்று மருத்துவ விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்படி ஒரு கிராம விசிட்டின்போது. ஒரு வீட்டில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் இருப்பதாகக் கூறினார்கள். அவரைச் சென்று பார்த்தோம். அவருடைய மனைவியிடம் ஏன் அவரை மருத்துவமனையில் வைக்காமல் வீட்டில் வைத்துள்ளீர்கள் என்றோம்.
அதற்கு அவர், "ஐயா.. மருத்துவர்கள் இனி காப்பாத்துறது கஷ்டம்னுட்டாங்க.. எனக்கு ரெண்டு பிள்ளைங்க.. இதுகளுக்கும் சேர்த்து நான் தான் வேலை பார்க்கணும். நான் வேலைக்கு போனாத்தான் பசியாத்தலாம். இதுல ஆஸ்பத்திரில இவரப் போட்டுட்டு நான் கூடவே இருந்தா என்ன செய்ய முடியும். மனசு கேட்கல தான் ஆனாலும் வழியில்லையே" என்றார்.
அப்போதுதான் எங்களுக்கு நாம் ஏன் பேலியேட்டிவ் கேர் மையம் தொடங்கக் கூடாது என்று தோன்றியது.
2014 முதல் நேத்ராவதியில் பேலியேட்டிவ் கேர் அளிக்கப்படுகிறது. அதற்கு முன்னர் இருந்தே ஆதரவற்ற தெருவில் விடப்பட்ட முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறோம். இறக்கும் போது எந்த ஓர் உயிரும் எனக்காக யாரும் இல்லையே என்ற ஏக்கத்துடன் இறந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே இதை நாங்கள் செய்து வருகிறோம்.
சிகிச்சைக்கான நபரை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்..
சில நேரங்களில் அரசு மருத்துவமனையிலிருந்து பரிந்துரைக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். சில நேரங்களில் எங்கள் மையத்தைத் தேடி அழைத்து வருகின்றனர். அப்படி எங்களால் குறைந்தபட்சம் பராமரிப்புப் பணம் செலுத்த இயலும் என்றும், வீட்டில் வைத்துப் பார்க்க ஆள் இல்லை என்று கூறுபவர்களையும் அனுமதிக்கிறோம். பெரும்பாலும் ஆதரவற்ற எளியவர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறோம். புற்றுநோயோ இல்லை அதைவிட பெரிய நோயோ வசதியுள்ளவர்களை அசைத்து தான் பார்க்கும். ஆனால் எளியோரை அடியோடு புரட்டிப் போட்டுவிடும். அதனால், நேத்ராவதி ஆதரவற்ற, ஏழை எளியோருக்கான பேலியேட்டிவ் கேர் மையமாக இருக்கிறது.
இந்தப் பயணத்தில் உங்களை மிகவும் பாதித்த சம்பவம்?
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னதாக எங்கள் மையத்துக்கு வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை அனுப்பி வைத்தனர். அவர் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். அவர் வாயில் திறந்த புண் இருந்தது. நீங்கள் சிகரெட் அட்டைகளில் பார்த்திருப்பீர்களே அது போன்ற புண். பொதுவாக புற்றுநோய்க் கட்டிகள் / புண்கள் திறந்த புண்ணாக மாறும் போது அதிலிருந்து துர்நாற்றம் வீசும். அரை கிலோ மீட்டம் தூரம் வரை அந்த வாடை அடிக்கும். எங்கள் மையத்தில் அந்தப் பெண்ணை நாங்கள் அனுமதித்தோம். ஆனால் எங்களது மையம் திறந்த வார்டு என்பதால் மற்ற நோயாளிகள் அசவுகரியத்தைத் தெரிவித்தனர். வேறு வழியின்றி அவரை அவருடைய உறவினர்களுடன் அனுப்பிவைத்தோம். ஒருவேளை எங்கள் மையத்தில் இத்தகைய நோயாளிகளுக்கான தனிமை வார்டு வசதி இருந்தால் அவர்களின் மரணத்தையும் கவுரவப்படுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கம் எழுந்தது. அந்தச் சம்பவம் எங்கள் அனைவரின் மனதையும் பாதித்தது.
சர்வதேச புற்றுநோய் தினத்தில் (பிப் 4) நீங்கள் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
மக்கள் வாழ்க்கையை நெருக்கடியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவரைப் பார்த்து தனது வாழ்க்கைக்கான அளவுகோல்களை நிர்ணயிக்கிறார்கள்.
சிறு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், என் நண்பர் வீடு வாங்கிவிட்டார், நான் வீடு வாங்க வேண்டும் என்று தகுதிக்கு மீறி கடன் வாங்குகிறார்கள். பின்னர், மன அழுத்தம் அப்புறம் நோய்கள் என நிம்மதியை இழக்கிறார்கள். வாழ்க்கையை எளிமையாக வைத்துக் கொள்ளுங்கள். நிம்மதியைக் காட்டிலும் ஆகச் சிறந்த சொத்து எதுவாகவும் இருக்க இயலாது. எளிமையான நிம்மதியான வாழ்க்கையில் நிறைவைப் பெறுவதோடு நிறைய உதவிகளையும் செய்யுங்கள். புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு வாழ்வியல் முறை மிக மிக முக்கியக் காரணியாக இருப்பதால் உங்கள் வாழ்வியல் முறையைப் பண்படுத்துங்கள். இறுதி நாட்களில் தவறுக்கு வருந்துவதைவிட இருக்கும்போது ஒழுக்கமாக இருங்கள் என்கிறார் மருத்துவர் பாலகுரு.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT