Last Updated : 31 May, 2014 10:05 AM

 

Published : 31 May 2014 10:05 AM
Last Updated : 31 May 2014 10:05 AM

மயானத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன?

இறப்பு நிகழ்ந்தவுடன் மயான பொறுப்பாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். புதைப்பதாக இருந்தால் ஒரு சில மணி நேரங்கள் முன்பு கூறினால்தான் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.

மயானப் பொறுப்பாளரிடம் ஏதேனும் ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டுமா?

ஆம். மருத்துவமனையில் கொடுக்கப்பட்டிருக்கும் இறப்பை உறுதிப்படுத்தும் படிவம் IV அல்லது IV-ஏ-வை மயானப் பொறுப்பாளரிடம் காண்பிக்க வேண்டும். அவர் அதன் தகவல்களை பதிவு செய்துகொண்டு உரிய ஏற்பாடுகளை செய்வார்.

உடலை தகனம் செய்ததற்கான சான்று கிடைக்குமா?

உடலை மயானத்துக்கு கொண்டு வரும் மயானப் பொறுப்பாளர் இறப்பு அறிக்கை (death report) எனப்படும் படிவம்-II-யை உடன் வந்திருப்பவரிடம் தருவார். அதில் உரிய தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்தால், உடலை தகனம் செய்த சான்றாக அது அமையும்.

எந்த மயானத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமா?

எந்த ஊரில், எந்த இடத்தில் இருக்கும் மயானத்தையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மத அடிப்படையில் மயானங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால், பொதுவாக அந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் அவரவர் மயானத்தில்தான் தகனம் அல்லது அடக்கம் செய்வார்கள்.

இறப்புச் சான்றிதழ் பெறவோ, மயானங்களை பயன்படுத்தவோ கட்டணம் செலுத்த வேண்டுமா?

சென்னை மாநகராட்சியில் கட்டணம் இல்லை. மற்ற இடங்களில் சிறிய தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம்.

தகனம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் எழுப்ப முடியுமா?

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் எழுப்ப முடியும். ஆனால் அதற்கு ஏற்ற இடம் இருக்க வேண்டும். எனவே, மயானத்தின் இடத்தைப் பொறுத்தும், சில இடங்களில் இதற்கு அனுமதி உண்டு, சில இடங்களில் இல்லை. அதனை மயானப் பொறுப்பாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

நினைவுச் சின்னம் எழுப்ப இடம் இருக்கிறது என்றால், யாரை அணுக வேண்டும்?

நினைவுச் சின்னம் எழுப்ப போதிய இடம் இருக்கிறது என்று மயானப் பொறுப்பாளரிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு, மாநகராட்சிகளில் ஆணையரிடமும், ஊராட்சிகளில் நிர்வாக இயக்குநர் அல்லது சுகாதார ஆய்வாளரிடம் எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும்.

மயானத்தில் கொடுக்கப்படும் படிவம்-II-ல் பூர்த்தி செய்ய வேண்டிய தகவல்கள் என்னென்ன?

படிவம் II-ல் இரு பிரிவுகள் இருக்கும். முதல் பிரிவில் இறந்த தேதி, பெயர், பாலினம், தாயின் பெயர், தந்தை அல்லது கணவரது பெயர், வயது, முகவரி, நிரந்தர முகவரி, இறந்த இடம், மயானப் பொறுப்பாளரிடம் தகவல் தரும் நபரின் பெயர் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டாம் பிரிவில் இறந்தவரின் முகவரி, மதம், பணி விவரங்கள், இறப்பிற்கான காரணம், இதற்கு முன் இருந்த வியாதிகள், பெண்ணாக இருந்தால் கருவுற்றிருந்தாரா, ஆணாக இருந்தால் புகை, மது ஆகிய பழக்கங்கள் இருக்கின்றனவா ஆகிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x