Last Updated : 28 Jan, 2020 02:43 PM

2  

Published : 28 Jan 2020 02:43 PM
Last Updated : 28 Jan 2020 02:43 PM

மனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா? ஏமாற்றமா?

அழுக்கான தேகம், கறை படிந்த பற்கள், திருத்தாத கேசம் தாங்கிய சிரம், சவரம் செய்துகொள்ளாத முகம், காற்றில் கரைந்து கொண்டிருக்கும் தொடர்பில்லாப் பேச்சு, ஏதேதோ சேமிக்கப்பட்டு புடைத்துக் கொண்டிருக்கும் கிழிந்த பை என இவற்றில் சில அடையாளங்களோடு அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களோடு சாலையோரங்களில் மன நோயாளிகளை நாம் அன்றாடம் கடந்து செல்ல நேரிடுகிறது.

ஆனால், அவர்களைப் பார்த்து பரிதாபப்படுபவர்கள் நம்மில் மிக மிகக் குறைவானவர்களே. காரணம், மனநோயாளிகள் தெருவில் திரிவது இயல்பே என்ற கருத்தை பெரும்பாலானோர் தங்கள் பொதுப்புத்தியில் நிலைநிறுத்தியிருப்பதே.

காய்ச்சல் தொடங்கி கேன்சர் வரை சிறப்பு சிகிச்சைக்கு மருத்துவமனைகளும், துறை நிபுணர்களும் எளிதில் கிடைத்து விடுகின்றனர். புற நோய்வாய்ப்பட்டவர்களின் சொந்தமும், பந்தமும், நட்பும் மருத்துவமனைக்கே வந்து நலம் விசாரித்துச் செல்வதும் இயல்பானதாக இருக்கிறது.

அதே நபருக்கு மனநோய் வந்தால்!? அது முதலில் யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தக் குடும்பமும் அதற்காக மெனக்கிடல் செய்கிறது. ஓரளவுக்கு வசதியானவர்கள் என்றால் காதும்காதும் வைத்தாற்போல் வெளியூரில் உள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறுகின்றனர்.

அதுவே அடித்தட்டு மக்களுக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு எந்தத் தீர்வும் கிடைப்பதில்லை.

உலக சுகாதார நிறுவனத்தின் அக்டோபர் 2019 ஆய்வறிக்கையின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7.5% பேர் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2020 இறுதிக்குள் இது 20% ஆகும் என்ற எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளது. எச்சரிக்கை பலமாக இருக்கும் அதே வேளையில் இத்தனை பேருக்கு சிகிச்சை அளிக்க இங்கு வெறும் 4000 மனநல மருத்துவர்கள் மட்டுமே இருக்கின்றனர் என்ற நிதர்சனத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

மனநோய்கள் சார்ந்த இத்தகைய புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்க என்னென்ன வகையான மனநோய்கள் இருக்கின்றன, மனநோய்களுக்கான சிகிச்சை குறித்து அறியாத தகவல்கள், பொதுவெளியில் மனநோயாளிகள் சந்திக்கும் இன்னல்கள், சமூகம் சுமத்தும் நெருக்கடி, சினிமா போன்ற வலிமையான ஊடகம் மனநோயாளிகளைச் சித்தரிக்கும் விதம் என சில, பல தலைப்புகளை இந்தத் தொடரில் அலசவுள்ளோம்.

வெகுஜனங்களுக்கு நெருக்கமான சினிமாவில் இதனைத் தொடங்குவது அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கான எதிர்பார்ப்பைக் கூட்டக்கூடும் என்பதால் அங்கிருந்தே ஆரம்பிப்போம்.

சினிமா உலகம் பேச விரும்பும் கதைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைச் சுற்றி பின்னப்படும் கதைக்கு மவுசு அதிகம். அதிலும் தமிழ் சினிமாவில் இந்த ஜானருக்கு சற்று கூடுதலாகவே சந்தை இருக்கிறது.

'சிவப்பு ரோஜாக்கள்', 'நூறாவது நாள்', 'மூன்றாம் பிறை', 'அஞ்சலி', 'புதுப்புது அர்த்தங்கள்', 'சந்திரமுகி', 'அந்நியன்', 'தெனாலி', 'ஆளவந்தான்', 'குணா', 'குடைக்குள் மழை', 'காதல் கொண்டேன்', 'மயக்கம் என்ன', 'மந்திரப் புன்னகை', '3', 'நடுநிசி நாய்கள்', 'சூதுகவ்வும்', 'ராட்சசன்', 'நேர்கொண்ட பார்வை' எனப் பல படங்களைப் பட்டியிலிடலாம். சாதாரண மன அழுத்தம் தொடங்கி மனச் சிதைவு வரை தமிழ் சினிமா தொட்டுச் சென்றுள்ளது. இன்னமும் அந்த ட்ரெண்ட் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு சமீபத்திய வெளியீடு சைக்கோ ஓர் உதாரணம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழ் சினிமாவில் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் எப்படி அணுகப்பட்டிருக்கின்றன என்பதை அலசுவதுதான். மனநோயாளிகள் மீதான சமூக நெருக்கடியை இந்த வலிமையான ஊடகம் உடைத்திருக்கிறதா? இல்லை அதை இன்னும் சிக்கலாக்கியிருக்கிறதா என்பதையே பேசவிருக்கிறோம்.

எங்கே சறுக்கியது சினிமா?

மனநலப் பாதிப்புகளை பல்வேறு கோணங்களில் அணுகியிருந்தாலும் அதைக் காட்சிப்படுத்தும் விதத்திலும் மனநோயாளிகள் சித்தரிக்கப்பட்ட விதத்திலும்தான் தமிழ் சினிமா சறுக்கியிருக்கிறது என்கிறார் சென்னையில் உள்ள மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான டாக்டர் ஆர்.மங்களா.

அந்தப் பாதையைப் பிடித்துக் கொண்டு மேற்கொண்ட தேடலில் நாம் முதலில் எடுத்துக்கொள்வது 'சந்திரமுகி' திரைப்படம். மலையாளத்தில் வெளியான 'மணிச்சித்திரத்தாழ்' படத்தின் தமிழ் ரீமேக் தான் 'சந்திரமுகி'. சூப்பர் ஸ்டாருக்கான எலமென்ட்ஸுடன் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் சந்திரமுகி என்ற கதாபாத்திரம் தொடர்பறு அடையாளப் பாதிப்பு (dissociative identity disorder) என்ற வகைக்குள் அடங்கும் பல்வகை ஆளுமை நோயால் (multiple personality disorder) பாதிக்கப்பட்டிருப்பார். கங்காவாக வரும் ஜோதிகாவுக்கு பள்ளிப் பருவத்தில் சொந்த வாழ்வில் ஏற்பட்ட தாக்கம் மன அழுத்தமாக மாறி அது கவனிக்கப்படாமல் முறையான சிகிச்சைக்கு உட்படுத்தப்படாமல் விட்டதால் அடுத்தடுத்த படிநிலைகளைக் கடந்து முற்றிய மனநோயாக மாறியிருப்பதைக் கூறியிருப்பார்கள்.

எல்லா மனநலப் பாதிப்புக்கும் சிகிச்சை இருக்கிறது. மனநோய் கண்டறியப்படும் காலத்தைப் பொறுத்தும் அதற்கான தொடர் சிகிச்சையைப் பொறுத்தும் குணம் பெறுதல் அமைகிறது என்பதை மனநல மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சந்திரமுகியில் மருத்துவராக வரும் ரஜினிகாந்த், கங்காவுக்கு மனநல சிகிச்சையை அளித்தாலும் கூடவே மாந்த்ரீகத்துக்கும் நிகரான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். மனநோயை மந்திரத்தால் அல்ல மாத்திரை மருந்துகளால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்பது மருத்துவர்கள் ஆணித்தரமாக சொல்லும் கருத்து.

சினிமாவில், அதுவும் ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் வாயிலிருந்து வரும் வசனத்துக்கு வலிமை அதிகம். ஏற்கெனவே இந்தியாவில் மனநோயை ஒட்டி நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. கோடங்கி அடிப்பது, சவுக்கால் அடிப்பது, ஆணியில் தலைமுடியை அடித்துவைப்பது போன்றவற்றிலிருந்து விடுபட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழலில், சவுக்கால் அடித்து கங்காவை சக்கரத்துக்குள் உட்காரவைத்து பூஜை செய்வதால் மனநோயைக் குணமாக்க முடியும் என்று அழுத்தமாகக் கூறியிருப்பது மூட நம்பிக்கையை மேலும் வளர்ப்பதாகவே அமைந்தது.

அதேபோல், சந்திரமுகியைப் போல மனநோய் கொண்டவர்கள் வேறு ஒரு மொழியை சகஜமாகப் பேசுவது சாத்தியமற்றது எனக் கூறுகின்றனர் மனநல மருத்துவர்கள். வேறு மொழி என்றில்லாம் புரியாத சில உளறல்கள் மட்டுமே அவர்களுக்கு சாத்தியம். இந்தப் புள்ளியில்தான் சந்திரமுகி சறுக்கியது.

"கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான். வெளியே மிருகம் உள்ளே கடவுள், விளங்க முடியா கவிதை நான்" என எல்லோரையும் முணுமுணுக்கவைத்த திரைப்படம் 'ஆளவந்தான்'. ஸ்கீசோஃப்ரீனியா (Schizoprenia) எனப்படும் மனச்சிதைவு நோயைப் பற்றி அத்திரைப்படம் பேசியது.

'சிவப்பு ரோஜாக்கள்', 'சிப்பிக்குள் முத்து', 'மூன்றாம் பிறை', 'தெனாலி', 'குணா' என கமல்ஹாசன் தனது படங்களில் பல்வேறு மனநோய்களைப் பற்றி பேசியிருந்தாலும் மனச்சிதைவு பற்றிய இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக இருந்தது.

மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கொடூர கொலைகாரர்கள் என்ற பிம்பத்தை இத்திரைப்படம் ஏற்படுத்தியிருந்தது.

மனச்சிதைவு நோய் தொடர்பான இப்படத்தை அலசுவதற்கு முன்னதாக மனச்சிதைவு நோய் பற்றிய சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்வோம்.

மூளையில் உள்ள ரசாயன மாற்றங்களாலேயே மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது. அதனால், இதை நரம்பு மண்டல வளர்ச்சிக் குறைபாடு (Neurodevelopmental disorder) என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நோய் மரபு வழியாகவும் ஏற்படலாம். கஞ்சா, போதை வஸ்துக்களை நீண்ட காலமாக உபயோகிப்பவர்களுக்கு இந்த நோய் தாக்க அதிகமான வாய்ப்புள்ளது. மற்ற மனநோய்களைப் போல் சிறுவயது மனபாதிப்பும் இந்த நோய் வருவதற்கான காரணியாக இருக்கலாம். நீண்ட நாள் மன அழுத்தத்தால் கூட மனச்சிதைவு ஏற்படலாம். ஏன் சில நேரங்களில் காரணமே இல்லாமலும் மனச்சிதைவு ஏற்படலாம். அதேபோல், எந்த ஒரு மனநோய்க்கும் ஆண், பெண் பேதமில்லை. அதனால் மனச்சிதைவு நோய் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

மனச்சிதைவு நோய் ஏற்பட்டவர்களுக்கு காதில் யாரோ பேசுவது போன்ற குரல் கேட்டல், ஏதோ உருவங்கள் தெரிதல் (உதாரணத்துக்கு தொலைக்காட்சியில் தெரியும் உருவம் தன்னுடன் பேசுவதுபோல் கற்பனை செய்து கொள்ளுதல்), யாரோ தனக்குக் கட்டளையிடுவது போன்ற எண்ணம், தனிமை, வெறுமை, இயல்பான நடவடிக்கைகளிலும் ஈடுபாடு இன்மை, தன்னை யாரோ தாக்க நினைப்பதாக சந்தேகம், குடும்பத்தினர் மீதே சந்தேகம், தெளிவற்ற சிந்தனை, பேச்சில் குழப்பம், குடும்பத்தினருடன் சண்டையிடுதல், வீட்டை விட்டே வெளியேறி எங்கோ சுற்றித் திரிவது என பல்வேறு பாதிக்கப்பட்டவர்கள் உள்ளாகின்றனர். ஆனால், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் மனச்சிதைவு நோய் உள்ளவர்கள் உரிய சிகிச்சையோடு இயல்பு வாழ்க்கையைத் தொடர இயலும். ஆனால், வெகு நீண்ட காலம் ஏன் வாழ்நாள் முழுவதும் கூட மருத்துவ உதவி தேவைப்படும். மருந்துகளைப் பாதியில் நிறுத்துவது மிகப் பெரிய கேடாக அமையும்.

முதலில் மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட அனைவருமே வன்முறையாகச் செயல்படுவதில்லை. ஆனால், நாள்பட்ட மனச்சிதைவு நோயாளிகள் வன்முறையில் ஈடுபடலாம். அவர்கள் தன் மீதே வன்முறையை நிகழ்த்தக்கூடும். மனச்சிதைவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எவ்வளவு அவசியமானதோ, அதேபோல் அதற்கு சிகிச்சையும் அவர்களுக்கு மறுவாழ்வும் அளிப்பது அவசியம்.

'ஆளவந்தான்' திரைப்படத்தில் மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு காதில் குரல் கேட்பது, காட்சிகள் விரிவது, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் கூட திட்டமிட்டு ராணுவத் தடைகளையும் தகர்த்து அவர் கொலை செய்ய முற்படும் காட்சிகள் யதார்த்ததுக்குப் புறம்பானதாகவே இருக்கும்.

மனச்சிதைவால் பாதிக்கப்பட்டு தனது அன்றாட வேலைகளைச் செய்யவே திணறும் அத்தகைய மனநோயாளிகளால், திட்டமிட்டுக் கொலைகளை நடத்துவது என்பது இயலாத காரியம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். மனநோயை மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலம் அவர்களின் மீதான சமூக நெருக்கடி இன்னும் அதிகரிக்குமே தவிர குறையாது என்ற வருத்தத்தையும் அவர்கள் பதிவு செய்யத் தவறவில்லை.

சினிமா காட்டிய தவறான சித்தரிப்புகள் சிலவற்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். 'தெனாலி'யில் வருவது போல் ஒரே நபருக்கு அத்தனை பயமும் சேர்ந்து வருவது கிடையாது. Phobia - phobic disoreder எனப்படும் இவ்வகை அச்ச உணர்வு ஏதோ ஒன்றின் மேல் ஏற்படலாம். சிலருக்கு உயரத்தைப் பார்த்தால், சிலருக்கு நெருப்பைப் பார்த்தால், சிலருக்கு விமானத்தில் பறந்தால் என ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். ஆனால், 'தெனாலி' எல்லா ஃபோபியாக்களும் ஒரே நபருக்கே வந்திருப்பதுபோல் சித்தரித்திருக்கும்.

பல ஆளுமைக் கோளாறு (Multiple Personality Disorder) என்ற மனநோய் ஆட்கொண்ட நபரின் கதைதான் 'அந்நியன்'. அம்பி அந்நியனாக அவனது பால்ய பருவத்தில் அவனது கண் முன்னே நேர்ந்த தங்கையின் மரணம். அலட்சியத்தால் நேர்ந்த அந்த மரணம் ஆழ் மனதில் பதிந்துவிட பின்னாளில் அலட்சியம் காட்டும் அனைவரின் மீதும் கொலைவெறியைத் தூண்டுவதாக கதைக் களம் அமைக்கப்பட்டிருக்கும். வணிக ரீதியாக வெற்றியடைச் செய்ய மேற்கொண்ட மெனக்கிடலில் உண்மையில் பல்வகை ஆளுமை நோயாளியால் இப்படி நொடிக்கு நொடி தனக்குள் இருக்கும் ஆளுமைகளை வெளிக்கொணர முடியாது என்பதைச் சொல்லத் தவறிவிட்டது. மேலும் ஒட்டுமொத்த காவல்துறைக்குமே சவால்விடும் அளவுக்கு திட்டம் தீட்டும் மனநிலை நிச்சயமாக அந்த நோயாளிகளுக்கு இருக்காது என்பதையும் சொல்ல வேண்டும். ஆனால், இத்தகைய மனநோயாளிகளை முறையான சிகிச்சைக்கு உட்படுத்தினால் நிச்சயமாக குணப்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பொருத்த முடியும்.

ஆனால், மனச்சிதைவு ஏற்படுத்தும் குழப்பமான மனநிலையையும், இயலாமையையும் பார்த்திபனின் 'குடைக்குள் மழை' சற்று நேர்த்தியாகவே தொட்டுச் சென்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இத்திரைப்படம், தன் மீது அழகான பெண் ஒருவர் கொள்ளும் தீராக் காதலும் பின்னர் அந்தக் காதல் பொய் என்பது தெரிந்து கொண்டு தவிப்பதும் தன் தாய் இறந்ததைக் கூட உணராமல் காதலிக்காக உருகுவதும் டெல்யூஸனல் ஸ்கீஸோஃப்ரீனியாவை வழக்கமான வன்முறைத் திணிப்புகள் இல்லாமல் சொல்லியிருக்கும். அதனாலேயே படத்தின் முடிவில் வழக்கமாக மனநோயாளியின் மீது ஏற்படும் வெறுப்பைத் தவிர்த்து பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

உண்மையில் சினிமா போன்ற வலிமையான ஊடகங்கள் செய்ய வேண்டியவை இதையே. மனநோயாளிகளை மேலும் வெறுத்து ஒதுக்கச் செய்யாமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்தால் சீராகி விடுவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கும் வாழத் தகுதி இருக்கிறது என்ற புரிதலையும் ஏற்படுத்த வேண்டும். இன்னும் சொல்லப் போனால் பரிதாபத்தை அனுதாபத்தைவிட அவர்களையும் அனுசரித்துச் செல்லும் சமூகமாக மாற்ற வேண்டும்.

இதற்கு நிகரான பாராட்டை கரு.பழனியப்பனின் 'மந்திரப்புன்னகை' திரைப்படத்திற்கும் கொடுக்கலாம். பழனியப்பனே இயக்கி, நடித்த இந்தப் படமும் மனச்சிதைவு நோயைத்தான் பேசுகிறது. மனச்சிதைவு நோய் ஏற்பட்டவர் மீது காதல் கொள்ளும் நாயகி அவரது பிரச்சினையைத் தெரிந்துகொண்டு அவரை சிகிச்சைக்கு உட்படுத்துகிறார். மனச்சிதைவு ஏற்பட்டவரை சிகிச்சைக்கு உட்படச் சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், சிகிச்சைக்கு உட்படுத்தினால் அவர்களை இயல்பு நிலைக்கு மீட்டுக் கொண்டுவரலாம் என்ற மிகப்பெரிய யதார்த்தத்தை உணர்த்தியிருக்கும்.

இந்த வரிசையில் 'மனசுக்குள் மத்தாப்பு' திரைப்படத்தைப் பற்றி பேசாமல் கடந்துவிட முடியாது. அத்திரைப்படத்தில் தனது காதலியை மின் விபத்துக்கு கண் முன்னே பறிகொடுத்த நாயகன் மனநிலை பாதிக்கப்பட்டு பழைய நினைவுகளை இழக்கிறார். ஒரு மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்படும் அவர் அங்கு அளிக்கப்படும் ஷாக் ட்ரீட்மென்ட் (Electroconvulsive therapy (ECT) ) கண்டு அச்சப்படுகிறார். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் அவருடைய மனநிலையைச் சரிசெய்வதற்கான மருந்து மாத்திரைகளோடு அவர் மீது அன்பு காட்டுவது அவரை வெளியில் அழைத்துச் செல்வது போன்றவற்றைச் செய்கிறார். நாயகன் குணமாகிறார். இந்தப் படத்தில் மனநல சிகிச்சையின் பகுதியாக காட்டப்படும் ஷாக் ட்ரீட்மென்ட் பொதுவெளியில் ஒரு பீதியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சிகிச்சைக்கு பயந்தே மனநல மருத்துவமனைகளை அணுகாமல் தவிர்ப்பவர்களும் உண்டு. உண்மையில் மனநோயாளிகள் அனைவருக்குமே ஷாக் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அப்படியே அளிக்கப்பட்டாலும்கூட அவர்களுக்கு எலும்புமுறிவோ இல்லை காயமோ ஏற்பட்டுவிடாத அளவுக்கு முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு பாதுகாப்பான முறையிலேயே அளிக்கப்படும்.

இன்னும் சில திரைப்படங்களைப் பற்றி ஓரிரு வரியில் சொல்லிச் செல்லலாம்.

தனுஷின் 'மயக்கம்' என்ன திரைப்படம் போதைவஸ்து பிரயோகத்தால் (Substance Abuse) ஏற்படும் மனச்சிதைவு பற்றியும் அப்படத்தின் நாயாகி யாழினி காட்டும் பொறுமை பற்றியும் பேசுகிறது. மனநோயாளிகள் குணம் பெற மாத்திரைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் உறவுகள் காட்டும் அன்பும் பொறுமையும் முக்கியம். அந்தப் பொறுமை சில நேரங்களில் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு முட்டாள்தனமாகக் கூடத் தெரியலாம். ஆனால், அப்படிப்பட்ட பொறுமைதான் குடிநோயிலிருந்தும் அதன் நிமித்தம் ஏற்பட்ட மனச்சிதைவிலிருந்து தனுஷை மீட்கும்.

கவுதம் மேனனின் 'நடுநிசி நாய்கள்' திரைப்படமும் சிறு வயதில் தனது தந்தையால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் பின்னாளில் மனச்சிதைவுக்கு ஆளாகி, கொலைகளைச் செய்வது பற்றிய கதை. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுவனை பக்கத்து வீட்டுப் பெண் மீட்க அச்சிறுவனோ அவரையே பின்னாளில் கொலை செய்வார். எந்த ஒரு குழந்தைக்கும் நேரக் கூடாத கொடுமையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனை மனநல சிகிச்சைக்கு உட்படுத்தாமல் தனது அன்பால் மட்டுமே குணப்படுத்த நினைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதற்கு இந்தக் கதை ஓர் உதாரணம். ஆனால், ஒரே ஒரு ஆறுதல் படத்தின் முடிவில் அந்த இளைஞர் மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்படுவார்.

'சைக்கோ' அன்பை போதிக்கிறதா?

இத்தனைத் திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்க அதில் மிஷ்கினின் 'சைக்கோ' திரைப்படமும் இணைந்துள்ளது. இந்தப் படம் கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் இளைஞர் என்ன மாதிரியான மனநோயினால் பாதிக்கப்பட்டார் என்பதைப் பற்றி தெளிவான விளக்கம் ஏதும் இல்லாவிட்டாலும் சிறுவயதில் தாய், தந்தை அரவணைப்பு இல்லாமல் காப்பகத்தில் வளர்ந்த சிறுவனுக்கு அவனது ஆசிரியர் அளித்த தண்டனையே, அவர் ஏற்படுத்திய அவமான அடையாளமே மனச்சிதைவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தாயுள்ளத்தோடு அந்தக் கொலைகாரனுக்கு இறங்குவது போன்ற காட்சி மனநோயாளிகள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதை போதிப்பதாக எடுத்துக் கொண்டாலும் இதுபோன்ற தீவிர மனச்சிதைவுக்கு ஆளானவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது மிகமிக அவசியம் என்பதால் மன்னிப்பை விட மருந்தே முக்கியம் என்பதை உணர வேண்டும் என மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்துக் கொண்டே அவர்களை அன்பின் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

மனநல ஆலோசகரின் பார்வையில்...

சினிமாவில் மனநோய்கள் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் இளையராஜாவிடம் கேட்டோம்.

''மனநலம் சார்ந்த பாதிப்புகளைக் கதையாக்கும்போது வணிக ரீதியான விஷயங்களைப் புகுத்தாமல் படம் எடுக்கவே முடியாது. திரைப்பட இயக்குநர்களிடம் இந்த மனநோயாளியை ஏன் இப்படிச் சித்தரித்தீர்கள் என்று கேட்டாலும் மிக எளிமையாக கமர்ஷியல் எலமென்ட் வேண்டுமே என்று சொல்லி முடித்துவிடுவார்கள். இல்லை இது கற்பனைக் கதை என்பார்கள்.

முதலில் சினிமாவில் காட்டப்படுவதுபோல், எந்த ஒரு மனநோயாளியாலும் மனச்சிதைவு ஏற்பட்ட நோயாளியாக இருந்தாலும்கூட அவர்களால் திட்டமிட்டு ஒரே பாணியில் கொலைகளை அரங்கேற்ற முடியாது. ஆனால் மனநோயாளிகள் கொலை செய்யவேமாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. அந்தக் கொலைக்கு எந்த ஒரு காரணமும், பின்னணியும் இருக்காது என்பதே உண்மை. அப்படிப்பட்ட மனச்சிதைவை நாங்கள் 'கேன்சர் ஆஃப் மைண்ட்' என்று கூறுகிறோம்.

மனச்சிதைவு நோயாளிகளை சிகிச்சைக்கு சம்மதிக்க வைப்பதே மிகவும் கடினம். சில நேரங்களில் அவர்களுக்கு மயக்கம் ஏற்படுத்தும் மருந்தை அளித்து மருத்துவமனைக்குக் கொண்டு வருவதும் உண்டு. அவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்னரே அன்பும் போதனையும் எடுபடும்.

கூட்டுக்குடும்பம் எனும் வரம்..

இந்தியாவில் மனச்சிதைவு ஏற்பட்ட நோயாளிகளில் 40% பேரை இயல்புக்கு மீட்டெடுப்பது சாத்தியமாகிறது. இதற்குக் காரணம் இங்கிருக்கும் கூட்டுக் குடும்ப அமைப்பு. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு நல்ல பலன் இருக்கிறது. குடும்ப அமைப்புகள் ஏன் அவசியம் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

கூகுள் வேண்டாமே...

முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மன அழுத்தம் தொடங்கி மனச்சிதைவு வரை எல்லா மனநோய்களையும் குணப்படுத்த இயலும். அதனால் சினிமாவில் பார்க்கும் மனநோய்க் காரணிகள் உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ இருக்கும் சிற்சில அறிகுறிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். சினிமாவை நிச்சயமாக சோதனைக் கருவியாகப் (டயக்னாஸ்டிக் டூலாக) பயன்படுத்த முடியாது. பயன்படுத்தவும் கூடாது. அதுமட்டுமல்லாமல் கூகுளில் மனநோய் குறித்து அறிகுறிகளைத் தேடி தாமாகவே சரி செய்ய இயலுமா என முயலாதீர்கள். அது மனநலப் பாதிப்பை இன்னும் ஆழமாக்குமே தவிர எந்த வகையிலும் உதவாது.

மனநலம் சார்ந்த திரைப்படங்களை மனநோயாளிகள் மீதான சமூக நெருக்கடியைக் குறைக்கும் அளவில் எடுங்கள் என்று திரைத்துறைக்கு கோரிக்கை வைப்பதைக் காட்டிலும் அத்தகையத் திரைப்படங்களை பொழுதுபோக்குக்காக மட்டுமே பாருங்கள் அதிலிருந்து எந்த ஒரு குறிப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றே நான் பரிந்துரைப்பேன்'' என்கிறார் மனநல ஆலோசகர் இளையராஜா.

குற்றம் வேறு; பித்துநிலை வேறு...

இதுவரை பெரும்பாலான தமிழ் சினிமாக்கள் குற்றவாளிகளையும் மனநோயாளிகளையும் குழப்பி வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். குற்றவாளிகள் எல்லோரும் மனநோயாளிகள் அல்லது மனநோயாளிகள் எல்லோரும் குற்றவாளிகள் என்று சித்தரித்திருக்கிறது. பித்துநிலைக்கும் குற்றத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஏற்கெனவே சமூகத்தில் ஒரு குற்றவாளி திருந்த நினைத்தாலும் அவனுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கும் மனநிலையே இருக்கிறது. அதேபோல், மனநோயாளிகள் அனைவரையும் எப்போது வேண்டுமானாலும் குற்றம் செய்ய வாய்ப்புள்ளவர்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறது இச்சமூகம். இத்தகைய மோசமான கட்டமைப்பை உடைக்க முடியாவிட்டாலும் கூட பரவாயில்லை. அதை மேலும் வலுப்படுத்தி நியாயம் செய்யாமல் சினிமா எனும் வலிமையான ஊடகம் செயல்பட்டாலே போதுமானதாக இருக்கும்.

சினிமாவில் சித்தரிக்கப்பட்ட மனநோய்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் ஆலோசித்த நிலையில் புகையிலை, மது, போதைவஸ்துகளால் சீரழிந்து மனநோய்களுக்கு ஆளாகும் இளைய தலைமுறையினர் குறித்தும் அவர்களை மீட்பது குறித்தும் அறிவோம்.

தொடர்புக்கு:
bharathi.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x