Published : 19 Jun 2015 11:05 AM
Last Updated : 19 Jun 2015 11:05 AM
ஒருவன் ஒரு கொலை செய்கிறான். வழக்கு விசாரணைக்காக நீதிமன் றத்துக்கு அவன் வரும்போது அவன் மீது பூக்கள் அள்ளி வீசுகிறார்கள். பல இளம்பெண்கள் அவனை திருமணம் செய்ய தயார் என்கிறார்கள். என்ன, கற்பனையான சினிமா காட்சிகள் போல இருக்கிறதா? இவை அத்தனையும் நிஜத்தில் நடந்தவை!
ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது?
1959-ம் வருடம் நடந்த சம்பவம் அது. கவாஸ் மானெக் ஷா நானாவதி இந்திய கடற்படையில் கமாண்டராக இருந்தவன். கம்பீரமான அழகான தோற்றம். அவன் இங்கிலாந்தில் இருந்த போது சில்வியா என்கிற ஆங்கிலப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டான். பிறகு, பம்பாயில் வேலை. உல்லாசமான வாழ்க்கை. அழகான 3 குழந்தைகள்!
ஒருமுறை நானாவதி வேலை தொடர் பாக மைசூர் சென்று திரும்பினான். வீட்டில் ஏதோ அசாதாரணமாக உணர்ந் தான். சில்வியாவிடம் வழக்கமான உற் சாகம் இல்லை. அழுத அடையாளங் களுடன் வாட்டமான முகம்.
விசாரித்தான். சில்வியா வெடித்து அழுதாள். மெதுவாக சொன்னாள், “நான் உங்களுக்கு துரோகம் செய்துவிட் டேன்…’’ நானாவதி அதிர்ந்தான்.
சில்வியாவின் தனிமையை நானாவதி யின் 15 வருட நண்பனும், தொழிலதிபனு மான அகூஜா பயன்படுத்திக் கொண்ட தாகவும், கொஞ்சம் கொஞ்சமாக அவனு டைய காதல் வலையில் விழுந்துவிட்ட தாகவும் அவள் சொன்னாள்.
தன் காதல் மனைவியின் இரண்டாவது காதலை, அதுவும் அவள் வாயாலேயே கேட்டதும் நொந்துபோன நானாவதி, “நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்…’’ என்றான். சில்வியா துடித் தாள். “நான் செய்த தப்புக்கு நீங்கள் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்?’’ என்று அவனை சமாதானம் செய்தாள்.
நானாவதி சூழ்நிலையை மாற்றுவதற் காக சில்வியாவையும், குழந்தைகளை யும் அழைத்துக்கொண்டு ஒரு சினிமா வுக்கு சென்றான். படம் தொடங்கியதும், தனக்கு ஒரு வேலை இருப்பதாகவும், படம் முடிந்ததும் வந்து அழைத்துப் போகிறேன் என்று சொல்லி தியேட்டரில் இருந்து தனியாகப் புறப்பட்டான்.
தன் அலுவலகத்துக்கு வந்தான். சொந்த பாதுகாப்புக்காக என்று குறிப் பிட்டு ஆயுத அறையில் இருந்து ஒரு துப்பாக்கியும், தோட்டாக்களும் வாங்கிக் கொண்டுப் புறப்பட்டு அகூஜாவின் வீட்டுக்கு வந்தான்.
அகூஜா தன் அறையில் இருப்பதாக கதவைத் திறந்த வேலைக்காரி சொன் னாள். நானாவதி நேராக அகூஜாவின் அறைக்குள் சென்றான். மூன்று முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. பதறியபடி அங்கே ஓடி வந்தாள் அகூஜாவின் தங்கை. அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்த அகூஜா இடுப்பில் கட்டிய டவலுடன் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். கையில் துப்பாக்கியுடன் நின் றிருந்த நானாவதி எதுவும் பேசாமல் வெளியேறி காவல் நிலையத்துக்கு வந்து சரண டைந்தான்.
9 ஜூரிகளுடன் வழக்கின் விசாரணை தொடங்கியது. (சமூகத்தில் பல துறைகளில் இருந்த கண்ணியமான நபர்கள் நீதிபதியால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அவர்கள் வழக்கின் விசா ரணயைக் கவனித்து இறுதியில் தங்கள் தீர்ப்பை தனித்தனியாக நீதிபதிக்கு தெரிவிப்பார்கள். இந்த ஜூரிகளுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.) நானாவதி வழக்கில் பெரிய சிக்கல் இல்லை. அது திட்டமிட்ட கொலையா அல்லது திட்டமிடாத கொலையா என்பது மட்டுமே தீர்மானிக் கப்பட வேண்டும்.
நானாவதியின் வாக்குமூலம்: “நான் தற்கொலை செய்துகொள்ளவே துப் பாக்கி வாங்கினேன். எனக்குப் பிறகு என் மனைவி, மற்றும் குழந்தைகளின் கதி என்ன என்று நினைத்துப் பார்த்தேன். அகூஜாவைப் பார்க்கப் போனேன்.
அப்போதுதான் குளித்துவிட்டு அறைக்குள் வந்த அவனிடம், “என் மனை வியை நீ திருமணம் செய்து கொண்டு, என் குழந்தை களை ஏற்றுக்கொள்வாயா?’’ என்று கேட்டேன். அதற்கு அவன், “நான் படுத்த எல்லா பெண்களையும் திருமணம் செய்துகொள்ள முடியுமா?’’ என்று கேட்டதோடு, என் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்க வந்தான். அந்தப் போராட்டத்தில் துப்பாக்கி வெடித்தது.
பிராசிகியூஷன் தரப்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியின் வாதம்: “நானாவதி அறைக்குள் இருந்ததே ஒரே ஒரு நிமிடம்தான். மூன்று குண்டுகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெடித் திருக்கின்றன. அங்கே உரையாடலோ, போராட்டமோ நிகழவில்லை.
போராட் டம் நிகழ்ந்திருந்தால் குண்டுகள் தொடர்ச்சி யாக வெடிக்க வாய்ப்பு இல்லை. அகூஜா வின் இடுப்பில் இருந்த டவலும் அவிழ்ந் திருக்கும். நானாவதி கொலைத் திட்டத் துடன் துப்பாக்கி வாங்கிச் சென்றான். அறைக்குள் அகூஜாவைப் பார்த்ததும் மூன்று முறை சுட்டான். வெளியேறினான். இதுதான் நடந்திருக்கிறது.’’
வழக்கு விசாரணையில் பல சாட்சி கள் விசாரிக்கப்பட்டனர். இறுதியாக 9 ஜூரிகளில் 8 பேர், ‘இது திட்டமிட்ட கொலை அல்ல’ என்றும், ஒரே ஒரு ஜூரி ‘இது திட்டமிட்ட கொலைதான்’ என்றும் தீர்ப்பு வழங்கினார்கள். அரசு அப்பீல் செய்ய, வழக்கு உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. அங்கே அது திட்டமிட்ட கொலைதான் என்று முடிவு செய்து நானா வதிக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது கோர்ட்டுக்கு அவன் வரும் போதுதான் பூக்களும், ரூபாய் நோட்டுக் களும் வீசப்பட்டன. சில பெண்கள் ரூபாய் நோட்டுக்களில் லிப்ஸ்டிக் முத்தம் பதித்து வீசினார்கள். நானாவதி பயன்படுத்தியது போன்ற பொம்மைத் துப்பாக்கிகளும் அகூஜா கட்டியிருந்ததைப் போன்ற டவல்களும் விற்பனை செய்யப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணைச் செய்தி களை விடாமல் வெளியிட்டு வந்த ‘பிளிட்ஸ்’ பத்திரிகை அப்போது மட்டும் ரூபாய் இரண்டுக்கு விற்பனையானது (அதன் விலை 25 பைசாதான்). ‘பிளிட்ஸ்’ பத்திரிகை நானாவதியைப் பகிரங்கமாக ஆதரித்தது. “இப்படி உங்கள் குடும்பத் தில் நிகழ்ந்திருந்தால் நீங்கள் என்ன செய் திருப்பீர்கள்?’’ என்று வாசகர்களைக் கேள்வி கேட்டது. கவர்னருக்கு மன்னிப் புக் கோரும் மனுவை பத்திரிகையில் வெளியிட்டு, அதில் கையெழுத்திட்டு அனுப்பச் சொன்னது.
பெரும்பான்மையான மக்கள் நானா வதிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். சில்வியா மட்டுமில்லாமல் பல ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுடன் தொடர்பு வைத்திருந்த அகூஜா கொல்லப் பட வேண்டியவனே என்று மக்கள் வாதிட்டார்கள். ஊர்வலம் சென்றார்கள்.
அப்போது கவர்னராக இருந்த நேரு வின் சகோதரியான விஜயலட்சுமி பண்டிட் நானாவதியை மன்னித்து விடு தலை செய்ய உத்தரவிட்டார். மூன்று வருட சிறைத் தண்டனையோடு வெளியே வந்த நானாவதி, சில்வியா மற்றும் குழந்தைகளுடன் கனடா சென்று, அங் கேயே வாழ்ந்து 2003-ல் இறந்து போனான்.
நானாவதி வழக்கின் அடிப்படையில் சுனில்தத், வினோத்கன்னா நடித்த பல ஹிந்தி திரைப்படங்களும், நாடகங் களும், புத்தகங்களும் வந்தன. 40 வருடங் கள் கழித்து ‘ஹிந்துஸ்தான்’ டைம்ஸ் பத்திரிகை ஒரு சிறப்புக் கட்டுரைக் காக நானாவதியைத் தொடர்புகொண் டது. அவன், “உங்களுக்கு இது சுவாரசிய மான கதை. எனக்கு என் வாழ் வில் மறக்க வேண்டிய அத்தி யாயம். மன்னிக்கவும்!’’ என்று பதில் எழுதினான்.
அன்று நானாவதிக்கு எதிராக தீர்ப் பளித்த ஜூரி பியர்ஸுக்கு 2009-ல் 102 வயது. அவரைக் கேட்டபோது, “நானா வதி நல்லவன். ஆனால், கொலை கொலைதானே? எதிர்த்து தீர்ப்பு சொன் னது நான்தான் என்று தெரிந்திருந்தால், மக்கள் நீதிமன்றத்துக்கு வெளி யிலேயே என்னைக் கொன்றிருப்பார்கள்’’ என்றார்.
இந்த வழக்கு இந்தியாவில் முக்கிய மான வழக்காக மாறியதற்கு மற்றும் ஒரு காரணமும் உண்டு. இந்த வழக்கு தான் ஜூரிகள் கலந்துகொண்ட கடைசி வழக்கு. மீடியா மற்றும் பொதுமக்கள் கருத்துகளின் பிரதிபலிப்பாகவே ஜூரிகளின் தீர்ப்பு அமைந்து வந்ததால் இந்திய அரசு இந்த வழக்கோடு ஜூரி முறையை ஒழித்தது.
கதையில் உத்தி
ஒரு பணக்கார வீட்டுக் குழந்தை கடத்தப்படும். உறவினர்களில் ஒருவனை சந்தேகப்படும் துப்பறியும் நிபுணன் பரத், அவன் வீட்டுக்கு வெளியே நின்று கண்காணிப்பான். அவன் யாருக்கோ போன் செய்து பேச, அதை டேப் செய்வான் பரத். இந்தக் கதை நிகழும் காலத்தில் டயல் செய்து பேசும் லேண்ட் லைன் போன் மட்டும் இருந்தது. ஒவ்வொரு எண்ணையும் டயல் செய்யும்போது அது ’டர்ர்ர்…’ என்கிற சத்தத்துடன் சுழன்று மீண்டும் அதனிடத்துக்கு வரும். அந்த ஓசையின் நீளத்தை வைத்து, தன் போனில் ஒவ்வொரு எண்ணாக டயல் செய்து அந்த ஓசையுடன் ஒப்பிட்டு, அவன் பேசிய போன் எண்ணைக் கண்டுபிடிப்பான். பிறகு அந்த விலாசத்துக்கு போலீஸுடன் சென்று குழந்தையை மீட்பான்!
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in
முந்தைய அத்தியாயம்: >எப்படி? இப்படி?- 6: ஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT