Published : 20 Aug 2015 04:27 PM
Last Updated : 20 Aug 2015 04:27 PM
அப்பா அலுவலகம் கிளம்பும்போது புன்னகை பூத்து டாடா சொல்லி, "வரும் போது அதை மறக்காமல் வாங்கிட்டு வந்திடு... அப்புறம், ஈவினிங் என்னை அங்கே கட்டாயம் கூட்டிட்டுப் போகணும்" என்று நம் குழந்தைகள் சொல்வதை கேட்டிருக்கிறோம்.
ஆனால், நாம் வாழும் இதே திருநாட்டில் நம் வயிற்றுக்கு சோறு அளிக்கும் விவசாயின் மகளோ/மகனோ ஒவ்வோர் நாளும் தன் அப்பா வயலுக்குச் சென்றுவிட்டு உயிருடன் திரும்புவாரா என்ற அச்சத்துடன் தவிக்கும் சூழலும் இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?
பெருமிதத்தோடு 69-வது சுதந்திர தினம் கொண்டாடி முடித்திருக்கிறோம். ஆனால் ஆண்டுகள் வளர்வதைப் போல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதை உணர்ந்திருக்கிறோமா?
விவசாயிகளின் தற்கொலை தலைப்புச் செய்தியில் இருந்து சிங்கிள் காலம் செய்தியாகிவிட்டிருக்கிறது.
சுதந்திர தின பேருரையில் பிரதமர் மோடி, "வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதேவேளையில் விவசாயிகள் நலனை புறந்தள்ளிவிட முடியாது. எனவே, வேளாண் அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும்" என்றார்.
பெயர் மாற்றத்தால் பெரும் மாற்றம் வந்துவிடுமா? கேள்விக் கணைகள் சூழ்ந்து கொள்கின்றன.
இது துனியாவின் கதை. துனியாவுக்கு துள்ளிக்குதிக்கும் வயது. ஏனோ அவள் புன்னகை களவாடப்பட்டிருந்தது. பொய்த்துப் போன பருவ மழையால் விவசாயி தற்கொலை, கடன் சுமையால் விவசாயி தற்கொலை, கடன் சுமையால் விவசாயி தற்கொலை நாளும், பொழுதும் இப்படிப்பட்ட செய்திகள் அவள் புன்னகையை களவாடியிருந்தன. அப்பா வயற்காட்டுக்கு கிளம்பும்போதெல்லாம் அவள் மனதில் ஜிவ்வென படர்கிறது ஒரு வித அச்ச உணர்வு.
ஒவ்வொரு நாளும் அவரைப் பின் தொடர்கிறாள்... இரவு நேரத்தில் அப்பாவின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொள்கிறார். எதற்காக என்பதையே இந்த 4 நிமிட குறும்பட வீடியோ விளக்குகிறது.
கயிறுகள் தற்கொலைக்கானது மட்டுமல்ல ஊஞ்சல் விளையாடவும்தான். துனியாக்கள் புன்னகை பூக்க உதவுவதே இந்தப் படத்தை ஆவணப்படுத்திய ஸ்கைமெட் அமைப்பின் இலக்கு. அதற்காகவே தொடங்கப்பட்டிருக்கிறது #HelpTheFarmer விழிப்புணர்வு பிரச்சாரம்.
நாம் 'மேக் இன் இந்தியா' எனப் பேசினாலும், இந்தியா சேவை துறையில் சிறப்பானதொரு இலக்கை எட்டி வந்தாலும் நம் பொருளாதாரம் இன்றளவும் வேளாண் பொருளாதாரமாகவே அறியப்படுகிறது. நம் வேளாண் உற்பத்திக்கு உயிர்நாடியாக பருவ மழை இருக்கிறது.
பருவ மழை பொய்த்ததால் மட்டுமே விவசாயிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பருவ மழையை கணிப்பது உண்மையிலேயே அவ்வளவு கடினமானதா? இந்த சவாலை ஏற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு துல்லிய வானிலை அறிவிப்புகளை தந்து வருகிறது > 'ஸ்கைமெட்' எனும் நிறுவனம். அந்த நிறுவனமே இந்த வீடியோவை தயாரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT