Published : 31 Dec 2019 03:15 PM
Last Updated : 31 Dec 2019 03:15 PM
மதுரை அரசரடியைச் சேர்ந்த 74 வயது நிரம்பியவர் ஒருவர் இந்த வயதிலும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
கிரிக்கெட் விளையாடும்போது அவர் இளைஞராகவே மாறிவிடுகிறார். மேலும், கிளப் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராகவும் வலம் வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டில் 30 வயதை கடந்த பல விளையாட்டு வீரர்கள், பை ரன்னர் இல்லாமல் விளையாட முடியாத நிலையில் 74 வயதில் எம்.எஸ்.பீட்டர் என்ற அந்த வழக்கறிஞர் இளைஞர்களுக்கு இணையாக ஓடியாடி விளையாடுகிறார். முதுமை தெரியாதவாறு தோற்றத்தையும் மிடுக்காகவே வைத்துள்ளார்.
அரசரடியைச் சேர்ந்த எம்.எஸ்.பீட்டர். ஃபுல் ஷாட் ஆடி ஸ்கொயர் லெக்கில் சிக்ஸர்கள் அடிக்கிறார், சுழற்பந்து வீச்சாளராக விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். தனது அணியின் வெற்றிக்கு வித்திடுவதால் அணியினர் கொண்டாடும் நபராகிறார் எம்.எஸ்.பீட்டர்.
சுறுசுறுப்புடன் பயிற்சி மேற்கொள்ளும் கிரிக்கெட் காதலர் எம்.எஸ்.பீட்டர் கூறும்போது, "விளையாட்டிற்கு ஒழுக்கம் முக்கியம். கிரிக்கெட் மீதான காதலால் உடலைப் பேண மது அருந்துவதை, புகை பிடிப்பதைக் கைவிட்டேன். இருந்தபோதும் 60-வது வயதில் இதய அறுவை சிகிச்சை செய்தேன்.
அப்போதும்கூட எனது கிரிக்கெட் ஆசை ஓயவில்லை. கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் தற்போது வரை விளையாடி வருகிறேன்.
சச்சினும், தோனியும் எனது கிரிக்கெட் நாயகர்கள். இன்றைய இளைஞர்கள் ஆக்ரோஷம் என்ற பெயரில் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது வேதனையாக இருக்கிறது.
நீண்டநாள் கிரிக்கெட் விளையாட விரும்புவோர் யோகாசனம் செய்தால் நல்ல பலன் கிடைப்பதால், சர்வதேச அணிகளும் யோகாவை கட்டாயமாக்கி வருகின்றன.
கிரிக்கெட் விளையாடுவதால் மனதும், உடலும் புத்துணர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமும் தொடரும். எனவே, வயதைக் காரணம் காட்டி யாரும் கிரிக்கெட்டிலிருந்து கைவிடத் தேவையில்லை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT