Published : 14 Aug 2015 09:00 AM
Last Updated : 14 Aug 2015 09:00 AM
1930-களுக்கு முன்புவரை ஒட்டுமொத்த இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலையை எதிர்நோக்கித்தான் சுதந்திரப் போராட்டம் நடந்தது. மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தாலும், சகோதரப் பாசத்துடன் ஒற்றுமையாகவே வாழ்ந்துவந்தனர். ஆனால், 1857-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் விடுதலைப் போர் தொடுக்கப்பட்ட பின்னர், பிரித்தாளும் சூழ்ச்சியை இந்தியாவில் பிரயோகித்தது ஆங்கில அரசு.
திட்டமிட்டு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் கலாச்சார முரண்களையும் மோதல் களையும் தூண்டிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வகுப்பு வாதத்தால் இந்தியா நொறுங்கிப்போனது. இந்நிலையில், 1930 டிசம்பர்29-ல் அலகாபாதில் கூடிய அனைத்திந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில் இஸ்லாமிய மக்களுக்குத் தனித் தேசம் வேண்டும் என முதன்முதலில் குரல்கொடுத் தார் கவிஞர் இக்பால். அன்று இஸ்லாமியர் அதிக எண்ணிக் கையில் வசித்த பஞ்சாப், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், சிந்து, பலுஜிஸ்தான், வங்காளம் ஆகிய பகுதிகள் உள்ளடக்கிய தேசம் பிரிக்கப்படுவதாக முடிவெடுத்தனர். ஆகவே, அவற்றின் ஆங்கிலப் பெயர்களில் உள்ள முதல் எழுத்துகளைச் சேர்த்துப் பிரிக்கப்படும் பகுதிக்கு பாகிஸ்தான் எனப் பெயர் வைத்தார் சவுத்ரி ரகமத் அலி. அதன் பிறகு, தனி பாகிஸ்தான் கோரிக்கையை 1940-ல் லாகூர் மாநாட்டில் வலியுறுத்தினார் முகமது அலி ஜின்னா. “என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” எனப் பிரிவினையை முற்றிலுமாக எதிர்த்தார் காந்தியடிகள். 1944-ல் காந்தியும் முகமது அலி ஜின்னாவும் 14 முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தன் கண்முன்னே அரங்கேறிய மதக் கலவரங்களால் மனமுடைந்து அன்றைய டெல்லி வைஸ்ராயாகப் பதவிவகித்த மவுண்ட் பேட்டனிடம் ‘இந்தியாவைப் பிரிக்கலாம்’ என காந்தியடிகள் ஒப்புதல் தெரிவித்தார். 1947 ஜூன் 3 அன்று இந்திய வானொலியில் இந்தியப் பிரிவினையை மவுண்ட் பேட்டன், ஜின்னா மற்றும் நேரு ஆகியோர் அறிவித்தனர். இறுதியாக 1947 ஆகஸ்ட் 14-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகளாக அறிவிக்கப்பட்டன. அன்றே பாகிஸ்தான் அரசியல் சுதந்திரம் பெற்ற நாடானது.
ஆனால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காரணமாக ஒரு கோடியே 20 லட்சம் மக்கள் புலம்பெயர நேர்ந்தது. அந்தப் பயணத்தின்போதே கிட்டத்தட்ட 10 லட்சம் அப்பாவி மக்கள் மரணமடைந்தனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. கிராமங்கள் சிதைக்கப்பட்டன. வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம்பிடித்துவிட்ட இந்தச் சம்பவங்களைத் தாண்டியும் இரு நாடுகளும் தன்னளவில் வளர்ந்து நிற்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT