Published : 24 Aug 2015 04:32 PM
Last Updated : 24 Aug 2015 04:32 PM
மழை இரவு. தனித்திருக்கிறாள் செனதி என்ற இளம்பெண். தான் விரும்பிய இளைஞன் தன் காதலை நிராகரித்த சோகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்காக அவள் எழுதி வைத்திருக்கும் கடிதமொன்று வீசும் காற்றில் படபடக்கிறது.
அழுது அழுது களைத்துப் போனவள், முடிவாக ஒரு முறை அவனை தொலைபேசியில் அழைக்கிறாள். மறுமுனையில் குரல் கேட்கிறது.
"கோகுல், உன்னை ரொம்ப லவ் பண்றேன்!"
"செனதி, நான் சோமாவை காதலிக்கிறேன்னு எத்தனை தடவை சொல்றது?"
"ப்ளீஸ்.. அப்படி மட்டும் சொல்லாதே.. "
"ப்ச்ச்.. சரி, நாளைக்கு பேசுவோம்.."
"போனை வைக்காதே கோகுல், எனக்கு நாளைன்னு ஒரு நாளே இல்லன்னா? கடைசியா, ஒரே ஒரு தடவை, எனக்காக புல்லாங்குழல் வாசிப்பியா?"
மறுமுனையில் செல்பேசி துண்டிக்கப்படுகிறது.
அழுது முடித்து நிமிர்கிறவள், ஒரு முடிவுடன் வேகமாக கயிற்றை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வருகிறாள். சமையலறையில் தூக்கு மாட்டிக்கொள்ள எத்தனிப்பவளுக்கு, வெளியே எதோ சத்தம் கேட்கிறது. வந்து பார்த்தால் ஓர் ஆள், வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு திகைக்கிறாள்.
அவளைக் கத்த விடாமல் அவன் வாயைப் பொத்த, அதிர்ச்சியில் மயக்கமடைகிறாள். அவள் முகத்தில் நீர் தெளித்து, அந்த ஆளே எழுப்புகிறான்.
தான் திருடனில்லை எனவும், பசித்து, உணவுக்காகவே வீடு புகுந்ததாய் சொல்கிறான். அவள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், அவனுக்கு ஒரு வாய் உணவளித்து விட்டுச் சாகலாம் என்று நினைக்கிறாள்.
வீட்டில் உணவில்லாத காரணத்தால், அவனுக்காக பீட்சா ஆர்டர் செய்கிறாள். பீட்சா வீடு வந்து சேர்கிறது. ஆவலாய் உணவைப் பார்த்தாலும் அதை உண்ண மறுக்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் அவளை உலுக்கியெடுக்கிறது. அந்த ஒற்றைச் சம்பவம்/ கேள்வி/ மெளனம்/ சாபம் அவளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடுகிறது. என்ன அது?
பசிக்கொடுமையால் வீடு புகுந்து உணவு தேடும் கதாபாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் வாழ்ந்திருக்கிறார். காதலால் நிராகரிக்கப்படும் வலியை, உணர்ச்சிகளைக் கொட்டிக் காண்பித்து நம்மையும் அந்த வேதனைக்குள் அமிழ்த்தி விடுகிறார் தேஜஸ்வினி கோஹ்லப்புரி. இக்கதையை எழுதி இயக்கி இருக்கிறார் மொஹிந்தர் பிரதாப் சிங்.
காதல் அழகானது; ஆதலால் காதல் செய்வீர். ஆனால் அது மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை அழகாகச் சொல்கிறது 'சால்ட் அண்ட் பெப்பர்'.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT