Published : 19 Nov 2019 05:35 PM
Last Updated : 19 Nov 2019 05:35 PM
தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பதால் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி மிக முக்கியமான பதவியாகக் கருதப்படுகிறது. சென்னை மேயர் பதவியில் திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், சிட்டிபாபு உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இருந்துள்ளனர். கடைசியாக 2011-2016 வரையிலான காலத்தில் அதிமுகவின் சைதை துரைசாமி இப்பொறுப்பில் இருந்துள்ளார்.
1933-ல் இருந்து இருக்கும் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு நீதிக்கட்சி முதல் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மேயர்கள் பதவி வகித்துள்ளனர். நீதிக்கட்சியின் மு.அ.முத்தையா செட்டியார் சென்னை மாநகராட்சியின் முதல் மேயர். காங்கிரஸின் சிவசண்முகம் (1937), ந.சிவராஜ் (1945), திமுகவின் குசேலர் (1961), வை.பாலசுந்தரம் (1969) என, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மாநகராட்சி மேயர்களாகப் பதவி வகித்துள்ளனர். 1969 வரை, சுழற்சி முறையில் இப்பதவி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலித் சமூகத்தினரும், தலித் அல்லாதவர்களும் மாறிமாறி இப்பதவியில் அமர்ந்துள்ளனர். ஆனால், நகர்ப்புற திருத்தச் சட்டம் 1974-க்குப் பிறகு, சென்னை மாநகராட்சி சுழற்சி முறையில் தனித்தொகுதியாக அறிவிக்கப்படவில்லை. முன்பு அமலில் இருந்த மாநகராட்சி சட்டத்தை பஞ்சாயத் ராஜ் சட்டத்துடன் இணைத்து இதனைக் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில்தான், சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என விசிக வலியுறுத்தியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இதற்காக கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அம்மனுவில், "தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள் தற்போது உள்ளன. பஞ்சாயத் ராஜ் சட்டப்படி, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் பட்டியலினத்தவர் அதிகம் வசிக்கும் சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும்," என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே கோரிக்கை விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக சார்பாக சென்னை மேயர் பதவிக்கு அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நிறுத்த வேண்டும் என திமுக நிர்வாகிகள் விருப்ப மனு அளித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினும், "கட்சித் தலைமை முடிவெடுத்தால் மேயர் பதவிக்குப் போட்டியிடத் தயார்" என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், திமுகவின் கூட்டணியில் உள்ள விசிகவின் கோரிக்கை கூட்டணி சர்ச்சையையும், கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்கக் கோருவது, உதயநிதியை அப்பதவியில் போட்டியிட வைப்பதில் இடைஞ்சல் உத்தி என சமூக வலைதளங்களில் திமுகவினர் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில், சென்னை மேயர் பதவியில் தனிக் கோரிக்கையை விசிக வைப்பதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்ற கேள்வியை அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் எழுப்பினோம்.
"இந்தக் கோரிக்கையை நாங்கள் திடீரென வலியுறுத்தவில்லை. கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போதே வலியுறுத்தியிருக்கிறோம். மக்கள்தொகை அடிப்படையிலும், பஞ்சாயத் ராஜ் சட்டத்தின் அடிப்படையிலும் சுழற்சி முறையில் தனித்தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்துகிறோம். தொகுதிகளை மறுசுழற்சி செய்யும் போது, சில தொகுதிகளைத் தனித்தொகுதிகளாக மாற்றுகின்றனர்.
ஆனால், சென்னை மாநகராட்சி தலித் சமூகத்தினர் அதிகம் வாழும் மாநகராட்சி. தலித்துகள் இங்கு பூர்வகுடிகளாக இருந்தனர். அதனால், ஏன் சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக மாற்றக்கூடாது? ஏன் இதனை நிறைவேற்ற அரசு மறுக்கிறது? தமிழகத்தில் உள்ள 15 தொகுதிகளில் வேலூர், நெல்லை என 2 மாநகராட்சிகள் மட்டும்தான் தனித்தொகுதிகள். அம்பத்தூர், ஆவடி என சென்னை மாநகராட்சியின் பரப்பு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் சென்னையை இரு மாநகராட்சிகளாகப் பிரித்து, அதில் ஒரு மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்கலாம்" என்கிறார்.
பெருநகரத் திட்டமும், தலித்துகள் வசிப்பிடமும்:
விசிக முன்வைக்கும் வாதங்களில் பிரதானமானது 'சிங்காரச் சென்னை' என்ற பெயரில் தலித் மக்கள் நகரத்திற்கு வெளியே அப்புறப்படுத்தும் நிலைமை, சென்னை மாநகராட்சிக்கு தலித் ஒருவர் மேயராக வந்தால் மாறும் என்பதுதான்.
"தலித் மக்கள் நகரத்திற்கு வெளியே அப்புறப்படுத்தப்படுவது திமுக, அதிமுக என இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைதான். தலைநகரத்தை தனித்தொகுதியாக அறிவிக்கும்போது இத்தொகுதி கவனம் பெறும். அதனால், இதனை சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையிலும் வலியுறுத்துகிறோம். திமுகவுக்கு இந்த கோரிக்கைக்கான நியாயம் தெரியும். இடதுசாரிகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்" என்கிறார் வன்னியரசு.
சென்னை மாநகராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டால், அந்த இடத்தை விசிகவுக்கு ஒதுக்க திமுகவிடம் கேட்கப்படுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த வன்னியரசு, "தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக தலைவர்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் இத்தொகுதியில் நிற்க வேண்டும் என்பதற்காக இதனை வலியுறுத்தவில்லை. திமுக சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதியை நிறுத்துவதாக வந்த செய்தியால், விசிக இம்மாதிரியான கோரிக்கையை வைப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்த வாதம் அபத்தமானது. கடந்த காலங்களிலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறோம். அப்படி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டால் திமுகவில் உள்ள தலித்தும் நிற்கலாம். எந்த உள்நோக்கத்துடனும் இந்தக் கோரிக்கையை எழுப்பவில்லை," என முடித்தார்.
சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்கக் கோருவதில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து, சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பினோம்.
"தனித்தொகுதியாக அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் திமுகவுக்குப் பிரச்சினையில்லை. இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் முன்மாதிரியான அரசியல் இயக்கம் திமுக. சமூக விகிதாச்சாரம் அடிப்படையில் சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்தால் அதனை யாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால், முதலில் அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்துமா என்பதிலேயே சந்தேகம் நிலவுகிறது. ஆனால், திமுக எந்த நிலையிலும் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
உதயநிதியை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு நிறுத்த உள்ளதாக வரும் செய்தி குறித்துக் கேட்டபோது, "உதயநிதியை அப்பதவிக்கு நிறுத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். விருப்ப மனுக்களும் கொடுத்திருக்கின்றனர். தொண்டர்களின் விருப்பமும் அதுதான். உதயநிதி போன்ற வசீகரமானவர் நின்று ஓட்டு வாங்கிவிடுவார் என்ற காரணத்தால், மறைமுகத் தேர்தல் நடத்த அதிமுக முயற்சிக்கிறது" என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.
திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'சிங்காரச் சென்னை' திட்டத்தைத் தொடர்ந்து இன்றும், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பொருளாதார வசதி குறைவானவர்கள் போரூர், பெரும்பாக்கம் என சென்னை நகரத்திற்கு வெளியே குடியமர்த்தப்படுவது குறித்து கூட்டணிக் கட்சியான விசிக விமர்சிப்பது குறித்து கேள்வியெழுப்பினோம். அதற்கு, "அம்மக்களை நேரடியாகச் சென்று பார்த்தால் தான் தெரியும். கூவம் ஆற்றில் இருந்தவர்கள் நாகரிகமான இடத்தில் வசிக்கின்றனர். அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. அவர்களுக்கான புதிய வாழ்வாதாரங்களும் அப்பகுதிகளில் உள்ளன" என்று மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கூட்டணி கணக்கா?
விசிகவின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா? என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் செம்மலையிடம் கேட்டபோது, "உள்ளாட்சித் தேர்தலில் சமூக விகிதாச்சாரப்படி 1-2 தொகுதிகள் சுழற்சி முறையில் தனித்தொகுதிகளாக ஒதுக்கப்பட்டிருக்கும். இம்முறை இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தொகுதி மறுவரையறையும் முடிந்துவிட்டது. மாநிலத் தேர்தல் ஆணையத்தால் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கு சென்னை மாநகராட்சி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு வரலாம்.
உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் குழப்பமும் இல்லை. திமுகவுக்கு இதில் என்ன சந்தேகம்? மீண்டும் ஒரு காரணத்தைக் காட்டி தேர்தலுக்குத் தடை வாங்க எண்ணுகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது
முதல்வரைச் சந்திக்க யார் வேண்டுமானாலும், எந்தத் தலைவராக இருந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் சந்திக்கலாம். முதல்வர் பழனிசாமி எல்லோராலும் எளிதில் அணுகக்கூடிய முதல்வராக இருக்கிறார். திருமாவளவன் மக்கள் பிரச்சினைக்காக சந்தித்திருக்கிறார். நான் அறிந்தவரை திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் உறவில் விரிசல் இருப்பதாக நம்பகமாகத் தெரிகிறது. இப்போதைக்கு அதை மட்டும்தான் சொல்ல முடியும்" என்று செம்மலை தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் விசிக இணையலாம் என்று சமூக வலைதளங்களில் எழும் ஊகங்கள் குறித்து விசிகவின் வன்னி அரசுவிடம் கேட்டபோது, "இந்த ஊகமே தவறானது. இதுவரை 3 முறை முதல்வரைச் சந்தித்துள்ளோம். 3 முறையும் மக்கள் பிரச்சினைகளுக்காகத்தான் சந்தித்தோம். சாதியவாத பாமகவும், மதவாத பாஜகவும் இருக்கும் கூட்டணியில் நாங்கள் சேர மாட்டோம். பாஜகவின் துணை அமைப்புதான் அதிமுக என குற்றம் சாட்டுகிறோம். அந்தக் கூட்டணியில் நாங்கள் இணைவதாக எழும் ஊகம், எங்கள் கூட்டணியில் முரண்பாட்டை உருவாக்கி தனிமைப்படுத்துவதற்கான முயற்சி. நாங்கள் திமுக அணியில் தான் இருக்க வேண்டும், இருக்கிறோம் என எங்கள் தலைவர் திருமாவளவன் தெளிவாக அறிவித்திருக்கிறார்,” என்றார்.
கூட்டணி சர்ச்சைகளுக்கும், உள்ளாட்சி இட ஒதுக்கீட்டுக் கேள்விகளுக்கும் இடையில் காத்துக்கொண்டிருக்கிறது உள்ளாட்சிக்கான தேர்தல் தேதி.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT