Published : 07 Aug 2015 11:53 AM
Last Updated : 07 Aug 2015 11:53 AM

நெட்டெழுத்து: தமிழில் பின்னியெடுக்கும் குறுக்கெழுத்துத் தளம்

நொண்டி, நொங்கு வண்டி, கோலி, உயிர் கொடுத்தல், பம்பரம் விடுவது, மண் குதிரை, கண்ணாமூச்சி போன்ற ஆட்டங்களை விளையாடிய தலைமுறையா நீங்கள்? அப்படியென்றால் குறுக்கெழுத்து பற்றியும் நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

குறுக்கெழுத்துப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவே நாளிதழ்கள், வார இதழ்களை வாங்கிய காலம் ஒன்று இருந்தது. கிடைக்கும் சின்னச்சின்ன நேர இடைவெளிகளிலும் கூட, ஒரு பேனாவையோ, பென்சிலையோ எடுத்துக் கொண்டு 'மூன்றாவது கட்டத்துக்கு என்ன பதிலாக இருக்கும்?' என்ற யோசனையில் அமிழ்ந்து போன காலங்கள் அவை. ஒரு புதிருக்கு விடை கண்டவுடன் நூல் பிடித்து, ஏணி ஏறி அடுத்த புதிருக்கு விடை தேடுவோம்.

அப்போதெல்லாம் தமிழில் குறுக்கெழுத்து வராத பத்திரிகைகளே இல்லை எனலாம். காலவோட்டத்தில் குறைந்துபோன தமிழ்க் குறுக்கெழுத்துப் போட்டியை நவீன வடிவில் தருகிறார் விஜய் ஷங்கர்.

கட்டுரைகள், கவிதைகள், பயணங்கள், அறிவியல், தொழில்நுட்பம், ஆன்மீகம் சார்ந்த வலைப் பதிவுகளுக்கிடையில் குறுக்கெழுத்துக்கென தனியொரு வலைப்பூ, நிச்சயம் வரவேற்கத்தக்க முயற்சி. பரபரத்துத் திரியும் இணைய உலகில், குறுக்கெழுத்துப் போட்டிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறார் ஷங்கர்.

இதோ ஒரு குறுக்கெழுத்துப் போட்டிக்கான இணைப்பு: >தமிழ் குறுக்கெழுத்து 9

மேலே குறிப்பிடப்பட்ட குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடையின் இணைப்பு: >தமிழ் குறுக்கெழுத்து 9 – விடைகள்

ஒவ்வொரு குறுக்கெழுத்துப் போட்டியிலும் கேள்விகளின் விவரங்கள் தரப்படுகின்றன. வாசகர்கள், நிரப்பப்படாத கருப்பு வெள்ளைக் கட்டங்களில், சரியான பதில்களை நிரப்பி விஜய் ஷங்கரின் மெயிலுக்கு தங்கள் பதில்களை அனுப்பலாம். அல்லது கருத்துப் பகுதியிலும் தங்களது பதிவு செய்யலாம்.

கல்கியின் புகழ்பெற்ற புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் மீது தீராத ஆர்வம் கொண்டவர், நாவலில் நடக்கும் சம்பவங்களை வைத்து, தனியொரு குறுக்கெழுத்துப் போட்டியையே தயாரித்திருக்கிறார். காண: >தமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன்

குறுக்கெழுத்துப் போட்டி தாண்டி தனது உணர்வுகள், கனவுகள், கோபங்களையும் கட்டுரைகள் ஆக்குவது விஜய் ஷங்கரின் வழக்கம். நியூட்ரினோ ஆய்வு உள்ளிட்ட சில அறிவியல் கட்டுரைகளையும் தன் வலைப்பூவில் பதிந்திருக்கிறார் விஜய் ஷங்கர். வாசிக்க: >நியூட்ரினோ ஆய்வும் நமது தலையெழுத்தும்

சின்னச்சின்ன அன்றாட விஷயங்களில் பொதிந்து கிடக்கும் அறிவியலின் ஆழத்தை அழகுற, எளிமையாய் விளக்குகிறார். வாசிக்க: >இரண்டு நிமிட அறிவியல் – நீரின்றி அமையாது அலகு

பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருந்தாலும், கண் சிமிட்டும் நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவும், பேசிக்கொள்ளவும் ஏன் பார்த்துக்கொள்ளவுமே வசதிகள் வந்துவிட்டன. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத பழங்காலத்தில் தலைவனைப் பிரிந்துவாடும் தலைவியின் நிலையைப் பசலையின் வழி விளக்குகிறார், ஷங்கர். வாசிக்க: >துன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்

பாரதியார் கவிதைகள், குறுக்கெழுத்து, இளையராஜா இசை, பொன்னியின் செல்வன் நாவல், உருக்கமான திரைப்படங்கள், புண்படுத்தாத நகைச்சுவை, பசுமை எனத் தனது பரந்துபட்ட ரசனைகளைக் குறுக்கெழுத்துகளாய் மாற்றிக்கொண்டிருக்கிறார் ஷங்கர். குறுக்கெழுத்துப் போட்டியைப் பற்றிப் பெரிதாகத் தெரிந்திராத இளம் தலைமுறையினருக்கும், நினைவடுக்குகளில் இருந்து தேடி எடுக்க ஆசைப்படுபவர்களுக்கும் இதயத்திலிருந்து இணையப்பயணம் மேற்கொண்டிருக்கும் இவ்வலைப்பூ ஒரு பொக்கிஷம்.

விஜய் ஷங்கரின் வலைப்பூ முகவரி: >இதயத்திலிருந்து இணைய பயணம்

முந்தைய அத்தியாயம்- >நெட்டெழுத்து: இதயம் பேத்திக்கொண்டே இருக்கிறது!

*

நீங்கள் வாசித்து வரும் நல்ல வலைப்பூ, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களைப் பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு இணைப்புகளை அனுப்பலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x