Published : 09 Nov 2019 05:01 PM
Last Updated : 09 Nov 2019 05:01 PM
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டை மாவட்ட கண்காணிப்பு குழுவின் பரிந்துரையை ஏற்காமல் காப்பீட்டு நிறுவனமே தன்னிச்சையாக அறிவித்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து 153 வருவாய் கிராமங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு ஆட்சியர் ஜெயகாந்தன் பரிந்துரை செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டு 85 ஆயிரத்து 624 விவசாயிகள் நெல் பயிரை காப்பீடு செய்தனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்து போனதால் மாவட்டம் முழுவதும் பயிர்கள் கருகின. இதையடுத்து இழப்பீடு கேட்டு விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர்.
மேலும் கடந்த ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதமே பயிர் காப்பீடு இழப்பீடு அறிவிக்கப்பட்டு வந்தநிலையில் இந்தாண்டு தற்போது தான் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. அதிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 520 வருவாய் கிராமங்களில் 180 வருவாய் கிராமங்களுக்கு 100 சதவீதம் இழப்பீடு அறிவிக்க ஆட்சியர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்பு குழு காப்பீட்டு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது.
ஆனால் அந்த பரிந்துரையை ஏற்காமல் செயற்கோள் மூலம் கணக்கிட்டதாக கூறி 124 வருவாய் கிராமங்களுக்கு மட்டுமே 100 சதவீத இழப்பீடு அறிவிக்கப்பட்டது. மேலும் 80 முதல் 99 சதவீதம் வரை கிடைக்க வேண்டிய 153 வருவாய் கிராமங்களுக்கு 25 சதவீதம் மட்டுமே அறிவிக்கப்பட்டது. மற்ற வருவாய் கிராமங்களுக்கு 25 சதவீதத்திற்கு குறைவாகவே அறிவிக்கப்பட்டது.
இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மாவட்ட கண்காணிப்பு குழு கூறியபடி 153 வருவாய் கிராமங்களுக்கு கூடுதல் இழப்பீடு அறிவிக்க வேண்டுமென, ஆட்சியர் ஜெயகாந்தன் காப்பீட்டு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ மாவட்ட கண்காணிப்பு குழு பரிந்துரையை விட குறைவாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களுக்கு கூடுதல் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 93 வருவாய் கிராமங்களுக்கு கூடுதல் இழப்பீடு தர காப்பீடு நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT