Published : 29 Oct 2019 05:43 PM
Last Updated : 29 Oct 2019 05:43 PM
திண்டுக்கல்
ஊராட்சிகளுக்கு சொந்தமான பயன்படாத ஆழ்துளை கிணறுகளைக் கண்டறிந்து அவற்றை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற அப்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய் உத்தரவிட்டதையடுத்து இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனற்ற ஆழ்துளைகிணறுகள் மூடப்படாமல் பயனுள்ள மழைநீர்சேகரிப்பு அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கடும் வறட்சி ஏற்பட்டது. குடிநீர் பிரச்சிசனை குறித்து ஆய்வு நடத்தி தேவையான இடத்தில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கியதுடன், அதேநேரத்தில் பயன்படாமல் இருக்கும் ஆழ்துளைகிணறுகளை கணக்கெடுத்து அவற்றை மழை நீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற அப்போதைய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டார் (தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர்).
இதையடுத்து வறட்சியான நிலை என்றும் பார்க்காமல் தொலைநோக்குடன் மழைகாலத்தில் மழைநீரை சேகரிக்க ஏதுவாக அப்போதே பணிகள் தொடங்கப்பட்டது.
இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆழ்துளைகிணறுகள் கணக்கெடுக்கப்பட்டன.
ஆழ்துளைகிணற்றை சுற்றி சிறிய அளவில் சுற்றுச்சுவர்போல் கட்டி அதனுள் தெருக்கள், சாலைகளில் செல்லும் மழை நீர் வந்துசேரும்படி வடிவமைக்கப்பட்டது.
ஆழ்துளைகிணறு தரையோடு தரையாக இல்லாமல் பிளாஸ்டிக் குழாய் மூலம் உயர்த்தி அமைக்கப்பட்டு குழாயில் பெரும் துளைகள் பல இடப்பட்டது. மழை நீர் ஆழ்துளை கிணறுக்குள் செல்லும்போது மண்ணும் சேர்ந்து செல்லாமல் தடுக்க துளையுள்ள பகுதியை சுற்றி வலை அமைக்கப்பட்டது.
தெருக்களில், சாலைகளில் இருந்து ஓடிவரும் மழைநீர் ஆழ்துளைகிணறை சுற்றி தேங்கி வலையால் வடிகப்பட்டு குழாயில் அமைக்கப்பட்ட துளை வழியாக ஆழ்துளை கிணற்றுக்குள் செல்லும்.
இதன்மூலம் மழைநீர் நேரடியாக ஆழ்துளைகிணற்றின் ஆழத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது. இந்த முயற்சியால் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக உயர வாய்ப்பாக அமைந்தது.
இந்த முறையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளில் பயன்படாத ஆழ்துளைகிணறுகளை தேவையின்றி மூடாமல் அதை மழை நீர் சேகரிப்பு அமைப்பாக தொடர்ந்து மாற்றும் பணி நடைபெற்று, தற்போது திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி, பேரூராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனற்ற ஆழ்துளை கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளது.
இதேபோன்று பயன்பாடின்றி தனியார் இடங்களில் உள்ள ஆழ்துளைகிணறுகளையும் மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றினால் நிலத்தடிநீர்மட்டம் உயர அதிக வாய்ப்பாக அமையும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் மழை காலத்தில் நன்கு உதவிவருகிறது.
இந்த மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் சில இடங்களில் தற்போது முறையாக பராமரிக்காமல் விட்டுவைத்துள்ளனர்.முறையாக மழைநீர் ஆழ்துளை கிணற்றை சுற்றி வந்து சேரும் வகையில் மழை காலத்தில் கவனித்து சீர்படுத்த வேண்டும்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றை மழை நீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் பணியில் கடந்த ஓராண்டுக்கு முன்பே ஈடுபட்டுவருகிறோம். தற்போதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றியுள்ளோம்.
இவற்றை முறையாக பராமரித்தும் வருகிறோம். இவ்வாறு செய்வதன் மூலம் மழைநீர் நேரடியாக ஆழத்திற்கு செல்கிறது. அதிகமழை நீரை நிலத்திற்கு அனுப்பமுடிகிறது. ஆழ்துளைகிணறு மழைநீர் சேகரிப்பு அமைப்புக்களைக் கண்காணித்து மழைக்காலத்தில் போதிய மழை நீரை நிலத்திற்குள் சேமிக்க ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT