Published : 19 Oct 2019 02:04 PM
Last Updated : 19 Oct 2019 02:04 PM
தேனி
தீபாவளிக்கான உணவுகளை ஓட்டல்களில் வாங்கும் நிலை அதிகரித்து வருகிறது. இதனால் உணவகங்கள் பேமிலிபேக், ப்ரண்ட்ஸ் பேக் என்று பக்கெட் பிரியாணிகளுக்கு பல்வேறு சலுகைகைளை அறிவித்துள்ளன.
முன்பெல்லாம் தீபாவளிக்காக அதிரசம், முறுக்கு, லட்டு உள்ளிட்ட பல்வேறு இனிப்பு, காரவகைகள் வீடுகளிலே தயாரிப்பது வழக்கம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே மாவு அரைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் பெண்கள் ஈடுபடுவர்.
காலமாற்றத்தில் இவற்றை கடைகளில் வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நிலை மாறி விட்டது. கடந்த தலைமுறையிடம் இருந்து பலகார தயாரிப்புகளை கற்றுக் கொள்ளாதது, வேலைப்பளு போன்றவற்றினால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபகாலமாக உணவகளையும் ஓட்டல்களில் இருந்து மொத்தமாக வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் தேவைக்கு ஏற்ப படி, கிலோ கணக்கில் ஆர்டர் செய்து வருகின்றனர்.
இந்த மாற்றத்தினால் பல்வேறு உணவகங்களும் தீபாவளிக்கான பிரியாணிக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதில் பேமிலிபேக், ஸ்மால் பேக், ப்ரண்ட்ஸ் பேக் என்று பல்வேறு விதங்களில் தரம் பிரித்துள்ளது.
பேமிலிபேக்கில் ஒரு கிலோ மட்டன் அல்லது சிக்கன் பிரியாணி ரூ.ஆயிரத்து 900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு கிலோ சிக்கன் சுக்கா, மீன்போன்லெஸ் 3 பிளேட், தால்சா, தயிர் வெங்காயம் உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது. இந்த அளவு 10பேர்க்கு போதுமானது.
ஸ்மாக் பேக்கில் அரைகிலோ மட்டன் அல்லது சிக்கன் பிரியாணி ரூ.899க்கு அளிக்கப்படுகிறது. இத்துடன் அரைகிலோ சிக்கன் சுக்கா, ஓரு பிளேட் மீன்போன்லெஸ் ஆகியவை இருக்கும்.
அதே போல் ஒரு கிலோ வான்கோழி பிரியாணி ஒரு கிலோ ரூ.1400 என்ற உணவகங்கள் சலுகைகளை அறிவித்துள்ளது.
பிரியாணி மட்டுமல்லாது தனி மட்டன் சுக்கா, சிக்கன்65 போன்றவற்றை தனியாக வாங்கிக் கொள்ளவும் வசதி செய்து தந்துள்ளது. பக்கெட்டுகளில் இவை விற்பனை செய்யப்பட உள்ளன.
(இடமிருந்து வலமாக ராஜலக்ஷ்மி, தாமரைச்செல்வி, சாரதா)
தீபாவளி உணவுகளை ஓட்டல்களில் வாங்கும் காலமாற்றம் குறித்து ராஜலட்சுமி கூறுகையில், "பெண்களும் இன்றைக்கு வேலைக்குச் செல்கின்றனர். குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதால் இது போன்ற நிலை அதிகரித்து வருகிறது" என்றார்.
தேனியைச் சேர்ந்த சாரதா கூறுகையி்ல், "குடும்பத்திற்கான உணவு தயாரிப்புகள் சந்தோஷம் தரக்கூடியது. எங்கள்காலத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கான பொருட்களை வாங்கி சலித்து, உலர்த்தி, அரைத்து ஒவ்வொன்றையும் குடும்பத்திற்காக சந்தோஷமாக செய்வோம். தற்போது நிலை மாறி விட்டது" என்றார்.
பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த தாமரைச்செல்வி கூறுகையில், "சமீபகாலமாக பல்வேறு மாற்றங்களை இந்த சமூகம் சந்தித்து வருகிறது. அந்தவகையில் இதுவும் ஒன்று. சூழ்நிலைகளும், தேவைகளுமே இதுபோன்ற நிலையை அதிகரிக்கிறது. இருப்பினும் ஆரோக்கியம் என்ற கோணத்தில் பார்த்தால் வீட்டு தயாரித்து உண்பதே சிறந்தது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT