Published : 18 Oct 2019 06:30 PM
Last Updated : 18 Oct 2019 06:30 PM

குரலால் நடிக்கும் நாயகிகள் நாங்கள்: டப்பிங் கலைஞர்களின் அனுபவப் பகிர்வு

தமிழ் சினிமாவின் முன்னணி டப்பிங் கலைஞர்கள்

'மூன்றாம் பிறை' திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரம் முதல் 'அவசர போலீஸ் 100' மாதிரியான நகைச்சுவையான கதாபாத்திரங்கள் வரை சில்க் ஸ்மிதா என்றவுடன் எல்லாவற்றையும் தாண்டி அவரின் குரல் தான் நம்மை முதலில் வசீகரிக்கும். இன்று வரைக்கும் கூட அந்தக் குரல் சில்க் ஸ்மிதாவினுடையது என நம்புவோரும் உண்டு. ஆனால், அந்தக் குரல் சில்க்கின் குரல் அல்ல. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட சில்க் நடித்த முதல் தமிழ்ப் படமான 'வண்டிச்சக்கரம்' முதல் அனைத்து தமிழ்த் திரைப்படங்களிலும் அவருக்குக் குரலாக இருந்தவர் மூத்த டப்பிங் கலைஞர் ஹேமமாலினி.

"சில்க்குக்கு பெரும்பாலான திரைப்படங்களில் கவர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும் என்பதால், அவருக்கு டப்பிங் பேசுவது மிக கடினமான விஷயமா என பலரும் என்னிடம் கேட்பார்கள். ஆனால், நான் அப்படி நினைத்ததே இல்லை. கிட்டத்தட்ட அவருக்கும் எனக்கும் ஒரே மாதிரியான குரல். அதனால், சில்க்குக்கு டப்பிங் பேசுவது எளிதானது. மெதுவாக, கவர்ச்சியான டோனில் தான் அவரது உண்மையான குரலே இருக்கும். 'என் குரலைக் கிண்டல் செய்வீர்கள் என நினைத்தேன். இப்போது அதனைப் பிரபலப்படுத்தி விட்டீர்கள்,' என சில்க் அடிக்கடி கூறுவார்," என தெரிவிக்கும் ஹேமமாலினி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.

இயக்குநர் பாக்யராஜுடன் ஹேமமாலினி

தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழகத்தைத் தாண்டிய பெரும்பாலும் தமிழ் அல்லாத மொழியைச் சேர்ந்த நடிகைகளே கதாநாயகிகளாக உள்ளனர். நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, எமி ஜாக்சன், ஐஸ்வர்யா ராய், அதிதி ஹைதரி ராவ் உள்ளிட்ட நடிகைகளுக்கு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் யூனியனில் உறுப்பினர்களாக உள்ள தொழில்முறை டப்பிங் கலைஞர்களே குரல் கொடுக்கின்றனர்.

டப்பிங் யூனியனில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். டப்பிங் யூனியனில் உறுப்பினராக ரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டும். நாயகிகளுக்கு டப்பிங் பேசுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000 சம்பளம் வழங்க வேண்டும் என டப்பிங் யூனியன் நிர்ணயித்திருந்தாலும், நடிகைகள், தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து டப்பிங் கலைஞர்களின் சம்பளம் மாறுபடும்.

டப்பிங் யூனியனில் கதாநாயகிகளுக்கு மட்டுமே குரல் கொடுக்கும் கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுள் சினிமா உலகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து அங்கீகாரம் பெற்ற கலைஞர்கள் வெகு சிலரே. 'எந்திரன் 2.0' திரைப்படத்தில் ரோபாவாக பேசிய எமிஜாக்சனுக்குக் குரலாக இருந்தவர் ரவீனா ரவி. 'நேர்கொண்ட பார்வை'யில் 'நோ மீன்ஸ் நோ' என்பதை உரக்கப் பேசிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு போராட்டக் குரலாக இருந்தவர் சவீதா ராதாகிருஷ்ணன். 'பாகுபலி'யின் வீராங்கனையாக இருந்த தமன்னாவுக்கு போர்க்குரலாக ஒலித்தவர் மானஸி. 'கேம் ஓவர்' திரைப்படத்தில் பயந்த கதாபாத்திரமாக நடித்த டாப்ஸிக்கு அந்த பயத்தை குரலாக வெளிக்கொண்டு வந்தவர் தீபா வெங்கட்.

தமிழ் சினிமான் முன்னணிக் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசுபவர்கள் சிலரிடமும், மூத்த டப்பிங் கலைஞரிடமும் அந்தக் கலையின் நுணுக்கங்கள், அவர்கள் எடுக்கும் பயிற்சி உள்ளிட்டவை குறித்துப் பேசினோம்.

"டப்பிங் கலைஞர்களும் நடிக்க வேண்டும், மைக் முன்பு. இதுவொரு கலை. யாருக்கு டப்பிங் பேசுகிறோமோ அந்த நபராகவே மாற வேண்டும். நான் நானாகப் பேசினால் கதாபாத்திரத்திற்கு உயிர் இருக்காது. யார் டப்பிங் பேசியிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கக் கூடாது. அதுதான் வெற்றி, யாராவது கண்டுபிடித்துவிட்டால் அது தோல்வி. யாராவது என்னைப் பாராட்டினால் நான் வருத்தப்படுவேன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஏற்றவாறு குரலில் வித்தியாசம் காட்டாவிட்டால் ஒரேயொரு நடிகைக்குத்தான் வாழ்க்கை முழுவதும் பேச வேண்டும். கதாநாயகி நடித்திருப்பதையும் மேம்படுத்தி டப்பிங் பேசுவதுதான் டப்பிங் கலைஞர்களின் வேலை. இயக்குநருக்கும் டப்பிங் கலைஞருக்கும் புரிந்துணர்வு இல்லை என்றால் மிகவும் சவாலானதாக இருக்கும்," என்கிறார் சவீதா ராதாகிருஷ்ணன்.

சவீதா ராதாகிருஷ்ணன்

'பிதாமகன்' படத்தில் வரும் லைலாவின் மிகவும் பிரபலமான 'லூசாப்பா நீ' என அதிர்ந்து சிரிக்க வைத்ததும், 'குஷி'யின் துறுதுறு ஜோதிகா, 'ஜீன்ஸ்' இரட்டையர் போல ஒரே நடிகைக்கு இரண்டு குரல் பாவம் காட்டியதும் சவீதா ராதாகிருஷ்ணன்தான். ஐஸ்வர்யா ராயின் பல தமிழ்ப் படங்களுக்குக் குரல் கொடுத்தவர் சவீதாதான். சிம்ரனுக்குக் கிட்டத்தட்ட 22 படங்களில் டப்பிங் பேசியுள்ளார். எனினும், குரல் பரிசோதனை செய்த பின்பே 'பேட்ட' திரைப்படத்தில் சிம்ரனுக்குக் குரல் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரையுலகில் 700 படங்களுக்கு மேல் கதாநாயகிகளுக்குக் குரல் கொடுத்த சவீதா ராதாகிருஷ்ணன், டப்பிங் கலைக்காக தமிழில் 3 மாநில விருதுகள், தெலுங்கில் 3 மாநில விருதுகள் பெற்றுள்ளார். இவரது மகள் ஷ்ரிங்கா 'விஸ்வாசம்', 'தெய்வத் திருமகள்' திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களுக்குக் குரல் கொடுத்துள்ளார்.

"நிஜ வாழ்க்கையில் திரும்பிப் பார்ப்பது, யோசிப்பது, வாயைத் திறப்பது, மூடுவது, போன்றவற்றுக்கு நாம் எந்த சத்தமும் கொடுக்க மாட்டோம். ஆனால் திரைப்படத்திற்காக டப்பிங்க் பேசும்போது கதாநாயகி திரும்பிப் பார்ப்பது, யோசிப்பதற்குக் கூட குரல் கொடுக்க வேண்டியிருக்கும். வாயைத் திறந்தால், வாயை மூடினால், மைண்ட் வாய்ஸ் உள்ளிட்டவற்றுக்கும் குரல் கொடுக்க வேண்டும். ஒரு கதாபாத்திரத்தின் பாவம், ஹீரோயினின் தன்மை போன்றவற்றுக்கு ஏற்ப இந்த சிறுசிறு குரல் பாவனைகளில் கூட வித்தியாசம் காட்டவேண்டும்" என்கிறார் சவீதா.

'தேவி', 'பாகுபலி', 'தோழா', 'பெட்ரோமாக்ஸ்' என வரிசையாக தமன்னாவுக்குக் குரல் கொடுத்துள்ளார் பாடகி மானஸி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நாயகிகளுக்கு டப்பிங் பேசுகிறார். "கதாபாத்திரங்களுக்குக் குரல் மூலம் உயிர் கொடுக்க வேண்டும். 'தேவி' திரைப்படத்தில் அப்பாவி கிராமத்துப் பெண்ணாகவும், பேயாகவும் இரு வேடங்களில் நடித்திருப்பார் தமன்னா. இரு கதாபாத்திரங்களுக்கும் ஒன்றுபோல் அல்லாமல் வித்தியாசம் காட்டி குரல் கொடுத்திருப்பார் மானஸி.

''டப்பிங் கலைஞர்கள் தொண்டை மூலமாக நடிக்க வேண்டும். ஒவ்வொரு படத்திலும் தமன்னாவுக்கு வேறு மாதிரியான குரலைத்தான் தருகிறேன்" எனக்கூறும் மானஸி, நடிகை தமன்னாவின் விருப்பமான டப்பிங் கலைஞர். 'நடிகையர் திலகம்' சமந்தா, 'டார்லிங்' நிக்கி கல்ராணி, 'மீகாமன்' ஹன்சிகா, 'மாரி' காஜல் அகர்வால் என கடந்த 2012-ல் இருந்து 60 படங்களுக்கு மேல் டப்பிங் செய்திருக்கிறார் மானஸி.

மானஸி

"மானஸியை வைத்து டப்பிங் முடியுங்கள் என தமன்னாவே பல திரைப்படங்களுக்குக் கூறியிருக்கிறார். தமன்னா இந்தியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளையும் தெளிவாக, நன்றாகப் பேசுவார். ஆனால், இந்தி ஸ்லாங்கும் சேர்ந்து வரும். அவரின் 3-வது படத்திலிருந்து அவருக்கு டப்பிங் பேசுகிறேன். இருவரும் ஒரே மாதிரியாகப் பேசுகிறோம் என தமன்னா பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார்," எனத் தெரிவிக்கிறார் மானஸி.

சில்க் ஸ்மிதாவின் அனைத்து தமிழ்ப்படங்கள், 'ரோஜாப்பூ ரவிக்கைக்காரி' தீபா, 'சிட்டுக்குருவி' மீரா, பானுப்பிரியா, பூர்ணிமா என 70-80களின் கதாநாயகிகளுக்குக் குரலாக ஒலித்தவர் ஹேமமாலினி. பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ், கஸ்தூரி ராஜா, பாலுமகேந்திரா என பல இயக்குநர்கள், கதாநாயகி ஒருவரை அறிமுகப்படுத்தும்போது, ஹேமமாலினியை டப்பிங் பேச வைப்பதை 'சென்டிமென்ட்டாகவே’ வைத்திருந்தனர்.

"1970-களில் நடிகைகள் பலருக்கும் டப்பிங் செய்வதற்கு மிக சில டப்பிங் கலைஞர்களே இருந்தனர். நான், அனுராதா போன்றவர்கள்தான் இருந்தோம். மக்களுக்கு டப்பிங் என்று ஒன்று இருப்பதே தெரியாது. நடிகைகள் அவர்களே பேசுகின்றனர் என நினைத்துக்கொள்வார்கள். கதாபாத்திரத்துடன் பார்வையாளர்கள் ஒன்ற முடியாது எனக்கூறி டப்பிங் கலைஞர்களின் பெயரைத் திரையில் போட மாட்டார்கள். அதற்கே நாங்கள் பல ஆண்டுகள் வாதம் செய்ய வேண்டியிருந்தது. 1979-ல் பாரதிராஜா இயக்கி வெளிவந்த 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தில் நடிகை ரதி அக்னிஹோத்ரிக்கு குரல் கொடுத்திருந்தேன். அந்த திரைப்படத்திற்கு நன்றாக விளம்பரம் செய்திருந்ததால், டப்பிங் கலைஞர்கள் குறித்து மக்களுக்குத் தெரியவந்தது. 'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் டப்பிங் பேசும்போது நானே உணர்வுவயப்பட்டேன். எனக்கு அப்போதுதான் திருமணம் ஆகியிருந்தது. என் அனுபவத்தில் நான் உணர்வுவயப்பட்டு அழுதது 'அந்த 7 நாட்கள்' திரைப்படத்திற்கு மட்டும் தான்” என்று கூறும் ஹேமமாலினி 'ஹேமா டப்பிங் இன்ஸ்டிட்யூட்' மூலம் பலருக்கும் இக்கலை குறித்துப் பயிற்சி அளித்து வருகிறார்.

சில்க், அக்னிஹோத்ரி போன்ற வசீகரிக்கும் நினைவுகள் தரும் குரல்களுக்கு மட்டுமல்ல, 'காதலன்' திரைப்படத்தில் வரும் முரட்டுத்தனமான பெண் போலீஸ் கதாபாத்திரத்தின் குரலும் ஹேமமாலினி உடையதுதான். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப குரல்களை மாற்றுவதைப் பற்றிய தன் அனுபவத்தில், “சிரிப்பில் பலவகையான சிரிப்புகளை குரலில் வெளிப்படுத்த வேண்டும். கதாநாயகிகளுக்கு ஒருமாதிரி வில்லிகளுக்கு வேறு மாதிரி சிரிக்க வேண்டும். ஓடிவந்து மூச்சு வாங்கிக்கொண்டே சில காட்சிகளில் சிரிக்க வேண்டும்" என்கிற ஹேமமாலினி சில்க் போல, இன்னும் சில நடிகைகள் போல பேசியே காட்டினார்.

தமிழ், மலையாள சினிமாவின் மூத்த டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ராவி. சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். சமீபத்தில், 'பெட்ரோமாக்ஸ்’ திரைப்படத்தில் தமன்னாவின் அம்மாவாக நடித்துள்ளார். "அழுகை வசனங்களில் கண்ணீர் விட்டு அழ முடியாது. ஏனென்றால் அடுத்த வசனங்கள் வேறொரு மூடில் இருக்கும். ஆனால், சில சமயங்களில் உணர்ந்து பேசும்போது கண்ணீர் வரும். டப்பிங் பேச ஆரம்பித்த சமயங்களில் எனக்கு சிரிக்கவே வராது. ஆரம்பத்தில் மிகச் சில திரைப்படங்களில் கதாநாயகியின் வசனங்களுக்கு டப்பிங் பேசுவேன். சிரிக்கும் காட்சிகளுக்கு மட்டும் மூத்த டப்பிங் கலைஞர்கள் குரல் கொடுப்பார்கள்.

'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தில் ஷாலினிக்குக் குரல் கொடுத்தேன். இயக்குநர் பாசில், டப்பிங் பேச வேண்டிய காட்சிகளை முன்பே போட்டுக் காண்பிப்பார். இயக்குநர் பாசில் நாம் எப்படிப் பேச வேண்டுமோ அப்படி அவரே பேசி காண்பிப்பார். அதை அப்படியே செய்தாலே போதுமானது. 'காதலுக்கு மரியாதை' கடைசிக் காட்சிகளில் என்னை அறியாமலேயே அழுதேன். நெஞ்சு அடைத்துவிட்டது போல் இருந்தது. அந்தப் படத்தை எப்போது பார்த்தாலும் அழுகை வரும்" என்கிறார் ஸ்ரீஜா ராவி.

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலு மகேந்திரா நேர்த்தியான இயக்குநர் எனவும், அழுகைக் காட்சிகளில் யதார்த்தத்தில் எப்படி அழுவோமோ அப்படிக் குரல் கொடுத்தால் போதும் என நினைப்பார் என்பதும் ஸ்ரீஜா ரவியின் மதிப்பீடு.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழித் திரைப்படங்களுக்கும் குரல் கொடுக்கும் ரவீனா ரவி, ஸ்ரீஜா ரவியின் மகள். ஸ்ரீஜா ரவியின் தாயார் நாராயணி, ஸ்ரீஜா ரவி வரிசையில் டப்பிங் கலையில் உள்ள மூன்றாம் தலைமுறை ரவீனா. எமி ஜாக்சனுக்கு 'ஐ', 'தெறி', 'எந்திரன் 2.0' ஆகிய திரைப்படங்களில் குரல் கொடுத்துள்ளார்.

"எமி ஜாக்சனுக்குக் குரல் கொடுக்கும் போது வெளிநாட்டுப் பெண்ணுக்கு ஏத்த குரலுடன் பேச வேண்டும். அவரைப் பார்த்தாலே அந்த மாதிரிதான் பேசத் தோன்றும்," என்கிறார். ரவீனா ரவியின் டப்பிங்குக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக, 'ஐ' திரைப்படத்தின் முதல் காட்சிக்கு குடும்பத்துடன் அழைத்துச் சென்றிருக்கிறார் எமி ஜாக்சன். ராஷி கண்ணா, மடோனா, சமந்தா உள்ளிட்டவர்களுக்கு டப்பிங் பேசியிருக்கும் ரவீனா, 'கிடாரியின் கருணை மனு' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீஜா ரவி - ரவீனா ரவி

இப்போதைய இயக்குநர்கள், சமூகத்தின் பொதுப்புத்தியால் நடிகைகளுக்குக் குரல் மென்மையாக, இனிமையாக இருக்க வேண்டும் என நினைப்பதில்லை. ஆண்மைத்தனத்துடன் யதார்த்தமாக இருந்தால் போதும் என நினைப்பது ஆரோக்கியமான விஷயம் என்கிறார் ரவீனா ரவி.

நயன்தாரா போன்ற நடிகைகள் தமிழ் மொழியை நன்றாகப் பேசினாலும், பல திரைப்படங்களில் நடிப்பதால் நேரமின்மை காரணமாக அவருக்கு தொடர்ந்து பல படங்களில் குரல் கொடுக்கிறார் தீபா வெங்கட்.

"ராஜா ராணி திரைப்படத்தில் டப்பிங் பேசுவதற்கு நயன்தாராவுக்கு நேரமில்லை. நயன்தாரா பேசியதும் நான் பேசியதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்," என்கிறார் தீபா வெங்கட்.

"கதாநாயகிகள் எப்படியோ பேசி வைத்ததை இயக்குநர்கள் எமோஷனுடன் பேசச் சொல்வார்கள். அந்த மாதிரியான சமயங்களில், நடிகைகள் வசனங்களை மனப்பாடம் செய்வதற்கு கொஞ்ச நேரம் செலவழிக்க முடியாதா எனத் தோன்றும். அவர்கள் உதட்டசைவுடன் சரியாக வசனத்தைப் பேசினால், இன்னும் நல்ல பெயர் அவர்களுக்குக் கூடும். இல்லையென்றால் டப்பிங் கலைஞர்கள் சரியாகப் பேசவில்லை என்றுதான் விமர்சனம் செய்வார்கள்," எனக் கூறுகிறார் தீபா.

தீபா வெங்கட்

எவ்வளவு சீனியர் டப்பிங் கலைஞராக இருந்தாலும், கதாநாயகிக்கு டப்பிங் செய்வதற்கு முன் அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு பேசுகிறார்களா என குரல் பரிசோதனை செய்வது அவசியம். ஆனால், 'நீர்ப்பறவை' படத்தில் சுனைனா மற்றும் நந்திதா தாஸ் என இரு கதாபாத்திரங்களும் குரல் பரிசோதனை செய்யாமலேயே டப்பிங் கொடுத்திருக்கிறார் தீபா வெங்கட். 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படத்தில் கணவரே மனைவியை பாலியல் துன்புறுத்தல் செய்வது போல் காட்சி வரும். "அந்தக் காட்சிக்கு டப்பிங் செய்து முடித்த பின்பும் மனதிலேயே இருந்தது" என்கிறார் தீபா.

சில நேரங்களில் நடிகைகளின் நடிப்பிலிருக்கும் உதட்டசைவு பொருத்தமில்லாததாக இருக்கும் சிக்கல்கள் எழும். அந்த நேரங்களில் இயக்குநர் குழுவுடன் இணைந்து சொற்களைத் திருத்தி, நடிகைகளின் வாயசைப்பிற்கு ஏற்ப அவர்கள் பேசாத புதிய சொற்களை பேசுவதும் டப்பிங் கலைஞர்கள்தான்.

உதட்டசைவுக்கு ஏற்ப செய்யும் மாற்றங்களைப் பற்றி குறிப்பிடும் சவீதா, “உதட்டசைவு ஒத்துவரவில்லை என்றால் 'ராஜா' என்ற கதாபாத்திரத்தை 'ரவி' என மாற்றுவோம். சித்தியை அத்தையாக மாற்றுவோம். லாங் ஷாட் வைக்கும்போது சில நடிகைகள் தமிழிலேயே பேச மாட்டார்கள், இந்தியில் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது சில தந்திரங்கள் செய்து வசனங்களை மாற்றுவோம். இந்த சமயங்களில் சவுண்ட் இன்ஜினியர்கள் பங்கு முக்கியமானது," என்கிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சி சாத்தியமாகியுள்ள இன்றைய காலத்தில், டப்பிங்கின் போது சில மாற்றங்களைச் செய்து கதைக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி குறைவாக இருந்த 70களிலும், 80களிலும் உள்ள சிரமங்களைப் பகிர்ந்த ஹேமமாலினி, "இப்போது ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனியாக டப்பிங் பேசலாம். சிறிய வசனத்தைக் கூட தனியே எடுத்துக்கொள்ளலாம். அப்போது லூப் சிஸ்டம் தான். ஒரு காட்சியில் உள்ள அனைவரும் சேர்ந்து டப்பிங் பேச வேண்டும். மக்கள் கூட்டம் என்றாலும் அவர்களும் ஒன்றாகப் பேச வேண்டும். அதில் ஒருவர் தவறு செய்தாலும் அந்தக் காட்சியை முதலில் இருந்து பேச வேண்டும். அதுமட்டும்தான் அந்த சமயத்தில் டப்பிங் பேசுவதில் இருந்த சிரமம். இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ஆனாலும், தனித்தனியாக பேசுவதால் நேரம் அதிகமாகியிருக்கிறது," என்றார்.

தனியறையில் டப்பிங் பேசினாலும், காதல் காட்சிகளிலும், நெருக்கமான காட்சிகளிலும் டப்பிங் பேசும்போது கொஞ்சம் கூச்சமும், சங்கடமும் இருக்கத்தான் செய்கிறது என்கின்றனர் கலைஞர்கள்.

"நம் வாழ்க்கையில் கொடுக்காத சத்தங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். முத்தக் காட்சிகளுக்கு மைக் முன்பு கையை வைத்துக்கொண்டு முத்தம் கொடுப்போம்," என குரல் ரகசியம் குறித்த சங்கடங்களை நாசுக்காகப் பகிர்ந்துகொண்டா சவீதா.

டப்பிங் கலைஞர்களின் முக்கியத்துவம் அதிகரித்திருந்தாலும், முன்பைவிட அவர்களுக்கான அங்கீகாரம் பெரும்பாலும் அதிகரித்திருந்தாலும் இன்னமும் சிக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது. திரைப்படத்திற்கு உதவிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் முதல் ஓட்டுநர்கள் வரை அனைவரின் பெயர்களும் திரையில் காண்பிக்கப்படும். ஆனால், டப்பிங் கலைஞர்களின் பெயர்களைப் போடுவதில்லை. சில படங்களில் படம் முடிந்த பின்னரே டப்பிங் கலைஞர்களின் பெயர் திரையில் வெளிப்படுகிறது.

'அயோக்யா' திரைப்படத்தில் கதாநாயகிக்கு டப்பிங் பேசிய ரவீனா ரவி, தன் பெயரைத் திரையில் போடாதது குறித்து ட்விட்டரிலேயே பதிவிட்டிருந்தார். அதற்கு கதாநாயகி ராஷி கண்ணா வருத்தமும் தெரிவித்திருந்தார். திரைப்பட நிகழ்ச்சிகளுக்குக் கூட டப்பிங் கலைஞர்களை அழைப்பதில்லை. ஜோதிகா, நயன்தாரா போன்றவர்கள் டப்பிங் கலைஞர்களின் பெயரைக் குறிப்பிடுவார்கள். சில நடிகைகள் பெயரைக் கூட சொல்ல மாட்டார்கள் என்பதே டப்பிங் கலைஞர்களின் வருத்தமாக உள்ளது.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x