Published : 29 Jul 2015 10:24 AM
Last Updated : 29 Jul 2015 10:24 AM
இந்தியாவின் முதன்மையான தொழிலதிபரும், தேசத்தின் கட்டமைப்பில் பெரும் பங்கு வகித்தவருமான ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (Jehangir Ratanji Dadabhoy Tata) பிறந்த தினம் இன்று (ஜூலை 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1904) பிறந்தார். 19-ம் நூற்றாண்டின் பிரபல இந்திய தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் இவரது தந்தை ரத்தன்ஜி. தாய் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்பதால், இவரது இளமைப் பருவம் அங்கு கழிந்தது.
l சிறிது காலம் பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றினார். பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்தில் கல்வி பயின்றார். கேம்பிரிட்ஜில் பொறியியல் படிக்கும் விருப்பத்துடன் லண்டன் சென்றார். ஆனால், டாடா நிறுவனத்தில் வேலைக்கு சேருமாறு அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்ததால், இந்தியா வந்தார். டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சம்பளம் பெறாத தொழில் பழகுநராக சேர்ந்தார். தொழில் நுணுக்கங்களை விரைவாக அறிந்துகொண்டார்.
l விமானத்தில் ஏறி பறக்க வேண்டும் என்று இளம் வயதில் கனவு கண்ட இவர், இந்தியாவின் முதல் விமானியாக உருவெடுத்தார். இந்தியாவில் டாடா ஏர்லைன்ஸ் விமான சேவையை 1932-ல் தொடங்கினார்.
l நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா ஸ்டீல் குழுமத்தின் தலைவராக 34-வது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். திறமையான இளைஞர்களைக் கண்டுபிடித்து அவர்களை தன் நிறுவனத்துக்கு அழைத்துவந்து, முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்தார். இதுவே இந்நிறுவனத்தின் அபார வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக இருந்தது.
l நாடு சுதந்திரம் பெற்றவுடன், பிரதமர் நேருவுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தார். 53 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்து நிறுவனத்தை வழிநடத்தினார். அவர் பொறுப்பேற்றபோது 14 நிறுவனங்களைக் கொண்டிருந்த குழுமம், 50 ஆண்டுகளில் 97 நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்தது.
l தொழில் நிறுவனம் என்றாலே இந்தியர்களுக்கு நினைவு வரும் சொல் ‘டாடா’. அந்த அளவுக்கு முன்னணி நிறுவனமாக டாடா குழுமத்தை உருவாக்கினார். இவர் உருவாக்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம்தான் ‘ஏர் இந்தியா’வாக உருவெடுத்தது.
l எளிமையாக வாழ்ந்தவர். சமூக, தேச நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். உழைப்பு, விடாமுயற்சிக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். சர் தொரப்ஜி டாடா அறக்கட்டளையின் கீழ் பல தொண்டு நிறுவனங்களையும் உருவாக்கி வழிநடத்தினார்.
l ஏர் இந்தியா, ஏர் இந்தியா இன்டர்நேஷனல் நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர். டிசிஎஸ், டைட்டன், டாடா மோட்டார்ஸ் எல்லாமே இவரது கனவில் உதித்தவைதான்.
l இந்தியாவிலும் உலக அளவிலும் பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். 1992-ல் இவருக்கு ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற முதல் தொழிலதிபர் இவர்தான்.
l நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வோடு, தன்னிறைவோடு வாழ்கிற தேசமாக இந்திய பூமி விளங்க வேண்டும் என்று விரும்பியவர். இந்திய தொழில் துறை, பொருளாதாரத்துக்கு அளப்பரிய பங்களிப்பு செய்த சாதனை மனிதர் ஜே.ஆர்.டி. டாடா 89 வயதில் (1993) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT