Published : 14 Oct 2019 06:30 PM
Last Updated : 14 Oct 2019 06:30 PM
எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம். கடந்த 6, 7 மாதங்களாகவே இணையத்தின் ட்ரெண்ட் இந்த கானா பாடல்தான்.
பல கோடி ரூபாய் செலவழித்து எடுக்கப்படும் பாப் ஆல்பங்களுக்கு நிகராக இணையத்தில் சென்சேஷனாகியிருக்கும் இந்த கானாவின் படைப்பாளி ஸ்டீபன் 'இந்து தமிழ்' இணையதளத்துக்கு ஒரு பேட்டி கொடுத்தார். கலகலப்பாகவும் அதேவேளையில் உணர்வுப்பூர்வமாகவும் அமைந்தது அந்தப் பேட்டி.
ஸ்டீபன்.. நீங்க இப்போ வெறும் ஸ்டீபன் இல்லை.. புள்ளிங்கோ ஸ்டீபன்.. எப்படி இருக்கு இந்த மாற்றம்?
ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை. அம்மா, அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். ஏரியாவிலும் நல்ல பேர் கிடைச்சிருக்கு.
'பிகில்' ட்ரெய்லர் பார்த்தீர்களா?
ரெண்டு நாளா ஏரியா ஃபுல்லா அதான் பேச்சு. தளபதி வாய்ல இருந்தே 'புள்ளிங்கோ' வார்த்தை பாட்டா வந்தப்ப எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை சும்மா வார்த்தையில சொல்லிட முடியாது. முதல்ல ஏரியா ப்ரெண்ட்ஸ் பார்த்துட்டு சொன்னாங்க. அப்புறம்தான் நான் பார்த்தேன். புள்ளிங்கோ இருக்காங்க வேறென்ன வேணும்னு தளபதி பாடியதைக் கேட்டதுமே தலை கால் புரியலை. புள்ளிங்கோ எவ்வளவு பெரிய ஹிட், ட்ரெண்டாகியிருக்குன்னு அப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். தளபதியால புள்ளிங்கோ இன்னும் வேற லெவல்ல போய் சேர்ந்திருக்கு.
சரி.. புள்ளிங்கோ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
அது எங்க ப்ரெண்ட்ஸ் கூப்பிடுற வார்த்தை. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சூளைமேடு ஜோதியம்மாள் நகர்தான். அங்க அப்படித்தான் என் வயசுப் பசங்களைக் கூப்பிட்டுக்குவோம். பசங்களைக் குறிக்கும் வார்த்தைதான் புள்ளிங்கோ. எங்க ஏரியா புள்ளிங்கோ.. ன்னு சொல்வோம். எங்க ஏரியா புள்ளிங்கோவ விட்டுக் கொடுக்கமாட்டோம்.
ஸ்டீபனோட அடுத்த இலக்கு என்ன?
சினிமாதான். சினிமாவில் நிறைய கானா பாடகர்கள் பிரபலமாகியிருக்காங்க. அவங்க மாதிரி நானும் பிரபலமாகணும். இப்போ 'ஹேப்பி டேஸ்' படத்துல ஒரு பாட்டு பாடினேன். இன்னும் சில பெயர் வைக்காத படங்கள்லயும் கானா பாடியிருக்கேன். மிகப்பெரிய கானா பாடகரா சினிமாவுல பெருசா சாதிக்கணும். இதான் என் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம்.
உங்க கானா குரு யாரு?
எனக்கு சின்ன வயசுல இருந்தே கானா பாடல்னா உசுரு. எங்க ஏரியாவில் அச்சு பாபான்னு (கானா அச்சு) ஒருத்தர் இருந்தார். அவர எனக்கு ரொம்பப் பிடிக்கும். கும்பகோணம் வெத்தல உன் பாசம் எனக்குப் பத்தலுன்னு அவர் ஒரு கானா பாடியிருந்தார். அந்த கானா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பாணியில்தான் நான் கும்பலா நாங்க சுத்துவோம் கானாவைப் பாடினேன். அது நல்லா இருக்குன்னும் புள்ளிங்கோ சொன்னாங்க. அப்படியே டிக் டாக் செய்தோம். அப்புறம் ஒரு ஆல்பமாவே செய்தோம்.
இந்த ஆல்பம் ஹிட்டான பிறகு உங்களுக்கான மரியாதை எப்படியிருக்கிறது?
இரண்டரை வருஷங்களுக்கு முன்னால் ஒரு கானா கச்சேரியில் வெறும் 15 ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கேன். பஸ்ஸுக்கு காசு இல்லாம கச்சேரிக்கு நடந்தே போயிருக்கேன். ஆனால் இப்போ கல்லூரி கலை நிகழ்ச்சிகளுக்கு சீஃப் கெஸ்ட்டா கூப்பிடுறாங்க. இதுக்குக் காரணம் நான் பார்த்து, கேட்டு வளர்ந்த கலையை நான் எனதாக்கிக்கிட்டதுதான்.
ஆனா, ஒருசிலர் எங்களை அவமானப்படுத்துறாங்க. புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்னு பாடினது அவுங்க குற்றவாளின்னு சொல்றதுக்காக இல்லை. ஆனால் சிலர் புள்ளிங்கோன்னா மோசமான பசங்கன்னு சித்தரிக்கும்போது வேதனையா இருக்கு. எங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க.ப்ளீஸ்...
கானாவில் சமூகக் கருத்தை கலந்து சொல்லும் திட்டம் இருக்கா?
நிச்சயமா இருக்கு. ஆனா, அதுக்கு நான் கொஞ்சம் வளரணும். அதுவும் இல்லாம கானா பாடல்கள இன்னும் நிறைய பேர் பொழுதுபோக்காத்தான் பார்க்குறாங்க. அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போகணும். முதல்ல மக்கள் மனங்களில் இடம். அப்புறம்தான் அவுங்க மனசத் தொடுற கருத்து.
உங்கள் படிப்பு?
நான் காலேஜ்ல 3-வது ஆண்டு படிக்கும்போது பாதியில படிப்பை நிறுத்திட்டேன். இப்போ அதை முடிக்கணும்னு வேகம் வந்திருக்கு. நிச்சயமா பாஸ் பண்ணிடுவேன்.
கல்லூரி வயசுப் பையனான நீங்கள் உங்க சக வயசு இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது..
பெருசால்லாம் எதுவும் இல்ல. அடுத்தவுங்க மனசு நோகுற மாதிரி எதையும் செய்யக்கூடாது; எதுவும் பேசக்கூடாது. சின்ன வயசில் எனக்கு இது ரெண்டுமே நடந்திருக்கு. அதனால, நான் யாருக்கும் இதைச் செய்றது இல்லை. மத்தவங்களும் இதை செய்யக்கூடாதுன்னு நினைக்கிறேன்.
உங்கள் ஹிட் ஆல்பத்துக்குப் பிறகு எத்தனை பாடல்கள் பாடியுள்ளீர்கள்?
10 பாடல்கள் பாடிட்டேன். எல்லாமே ஹிட்தான். புள்ளிங்கோ அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் இன்னும் திரும்பக் கொடுக்கலை. அதுக்காக முயற்சி பண்றேன்.
இந்தச் செய்தியைப் பதிவிட்ட நேரத்தில் புள்ளிங்கோ பாடல் 46,715,324 பார்வைகளைக் கடந்தது.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT