Last Updated : 05 Oct, 2019 02:39 PM

 

Published : 05 Oct 2019 02:39 PM
Last Updated : 05 Oct 2019 02:39 PM

கருத்தைத் தெறிக்கவிடுவது மட்டுமே சினிமா அல்ல: குறும்பட இயக்குநர் அருண் பகத் பேட்டி

எந்த ஒரு மனிதனும் தற்சார்புடையவர் அல்ல (No man is Independent) என்றொரு ஆங்கில சொலவடை உண்டு. அதை நம்மில் பலரும் பல நேரங்களில் உணர்வதே இல்லை. அந்த நிதர்சனத்தை நாம் உணர மறுத்ததாலோ என்னவோ இந்த வாக்கியம் பரிணாம வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே வியாபாரம் செய்துகொள்ளும் விற்பனைப் பிரதிநிதி (Every man is a Marketing Executive) என்ற நிலையை அடைந்துள்ளது.

ஆம், சமூகம் இன்று அப்படித்தான் மாறியிருக்கிறது. ரோட்டோர வியாபாரி, பள்ளிக்கூட முதல்வர், பானி பூரி விற்பனையாளர், அரசியல் பிரமுகர், ஆட்டோக்காரர், ஆட்டோமொபைல் முதலாளி என எல்லோருமே தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்டால்தான் பிழைக்க முடியும் என்றொரு பலம் நிரூபிக்கும் களமாக உலகம் இருக்கிறது.

இப்படிப்பட்ட உலகில் நம் அலைபேசிக்கு அன்றாடம் ஐந்தாறு மார்க்கெட்டிங் அழைப்புகளாவது வராமல் இருப்பதைத் தவிர்க்க முடியாது. அதில் பல அழைப்புகள், சார் ரெண்டு நிமிஷம் பேசலாமா? என்பதை ஏதாவது ஒரு மொழியில் வரும் கெஞ்சலுடன்தான் உரையாடலை ஆரம்பிப்பார்கள்.

ஒரு நாள் நான் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது அப்படியொரு அழைப்பை ஏற்றாரோ என்னவோ என் அருகில் நின்றிருந்த நபர்! அவரின் பதிலளிக்கு தொனி அப்படித்தான் இருந்தது. "ஆங்... சொல்லுங்க.. நானா.. நான் நைட் 11 மணிக்குப்புறம்தான் ஃப்ரீ.. பேசுறீங்களா" என்று சொல்லி சிரித்தார்.. அருகில் இருந்தவர் என்னவென்று கேட்க ஏதோ ஆஃபராம். பொண்ணு குரல் நல்லாரிந்துச்சு. அதான் அப்படிச் சொன்னேன் என்றார். இருவரும் சிரித்துக் கொள்ள நான் நகர்ந்து சென்றேன்.

சமுதாயத்தில் ஒருவரைப் புறக்கணிக்கும் நிலையில் இருப்பவர்கள் இன்னோர் இடத்தில் புறக்கணிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். இதைத்தான் பேசுகிறது Sir 2 mins என்ற குறும்படம்.

குறும்பட இயக்குநர் அருண்பகத் ஓர் இளைஞர். கல்லூரியில் இயற்பியல் படிப்பைப் படித்தவர். சினிமா மீதான காதலாலும் மக்களுக்கான அரசியலைப் பேச சினிமா வலுவான ஊடகம் என்பதை உணர்ந்ததாலும் தனது திரைப்பயணத்தை குறும்படங்கள் மூலம் தொடங்கியுள்ளார்.

Sir 2 mins அவருடைய 4-வது குறும்படம். இதுவரை இப்படம் பியாண்ட் எர்த் ஃபிலிம் ஃபெஸ்டிவல், குளோபல் இன் டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆகிய சர்வதேச குறும்படத் திருவிழாக்களில் விருதுகளை வென்றுள்ளது. அதுதவிர இத்தாலியில் நடைபெற்ற செஃபாலு ஃபிலிம் ஃபெஸ்டிவலில் காலிறுதிவரை வந்திருக்கிறது. புனே 9-வது குறும்படத் திருவிழா மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற திங்கிங் ஹேட் ஃபிக்‌ஷன் சேலஞ்சில் அதிகாரபூர்வ அறிவிப்பு அந்தஸ்தைப் பெற்றது. இன்னும் பல விருதுகளை எதிர்நோக்கியிருக்கும் குறும்படத்தைப் பார்த்துவிடலாம்.

குறும்படம் பார்த்த உடன், நானும் அருண் பகத்திடம், 'சார் ரெண்டு நிமிஷம் பேசலாமா' என்றே ஆரம்பித்தேன். தன் படத்திற்கான வெற்றி அது என்றே ஏற்றுக்கொண்ட அருண் சிரிப்புக்குப் பின்னரே பேசினார்.

நீங்கள் இயற்பியல் மாணவர் எப்படி சினிமா மீது ஆர்வம்?

சிறுவயதிலிருந்தே என் அம்மா, அப்பா, அத்தை, மாமா எல்லோருடனும் சினிமா பார்ப்பேன். அப்படித்தான் சினிமா மோகம் வந்தது. ஆனால், கல்லூரி இறுதி ஆண்டு வந்தபோது சினிமாதான் எல்லாம் என்றாகிவிட்டது. சினிமாவில் இயங்க வேண்டும் ஆவல் வந்தது.

இந்தப் படத்தை நான் பார்த்தேன். இதற்கான கருவை எப்படி நிர்ணயித்தீர்கள்?

இது ஓர் அபத்த நகைச்சுவைப் பாணியில் எடுக்கப்பட்ட குறும்படம். என்னுடைய இணையர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவரை அலுவலகத்தில் இறக்கிவிட அவருடைய அலுவலகம் செல்வேன். அங்கு எப்போதுமே மார்க்கெட்டிங் மக்கள் இருப்பார்கள். பெரும்பாலும் வங்கி மார்க்கெட்டிங் பிரதிநிதிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கிருந்துதான் இந்த ப்ளாட் எனக்குக் கிடைத்தது. எல்லோருமே ஒருவகையில் தினம் தினம் மார்க்கெட்டிங் செய்துகொண்டுதான் இருக்கிறோம். என் படத்தைப் பார்க்குமாறு ஃபேஸ்புக்கில் நான் பதியும் இடுகைகூட ஒருவித மார்க்கெட்டிங்தான். நாம் புறக்கணிப்பவர்களாக இருக்கிறோம், புறக்கணிக்கப்படுபவர்களாகவும் இருக்கிறோம். இதை வாழ்க்கையின் எல்லா நிலையிலும் பொருத்திப் பார்க்கலாம். இந்தக் கோணத்தில்தான் இந்த குறும்படத்துக்கான ஸ்க்ரிப்ட்டை எழுதினேன்.

தற்கால சமூகம் எப்படி இருக்கிறது. ஓர் இளைஞரின் பார்வையில்... குறிப்பாக இந்தப் படத்தின் இயக்குநர் என்ற பார்வையில்...

நான் நானாக சாதாரணமாக இருக்க முடியாத, வெளிப்பட முடியாத சூழலே இருக்கிறது. ஏதாவது ஓர் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. செல்ஃப் மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய சூழல் எழுந்துள்ளது. ஆனால், அந்த அடையாளப்படுத்துதல் என்பது யதார்த்தத்தைத் தாண்டியும் எந்த அளவுக்கு தீவிரம் பெறுகிறது என்பது விவாதிக்கப்பட வேண்டியது. இந்த முதலாளித்துவ சூழல் நம் அனைவரையும் தனித்தனியாக அடையாளப்படுத்தும் சூழலில் வைத்திருக்கிறது. அப்படி நாம் தனித்தனியாக பிரிந்திருப்பதன் விளைவே செல்ஃப் மார்க்கெட்டிங் சூழல்.

படத்துக்குக் கிடைத்த வரவேற்பு பற்றி..

கேமரா, எடிட்டிங் பற்றி இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனம் கிட்டியது. குறிப்பாக இந்தக் குறும்படத்தில் புறக்கணிக்கும் நிலையில் இருப்பவரை லோ ஆங்கிளிலும்.. புறக்கணிப்பவர்களை டாப் ஆங்கிளிலும் காட்டியிருக்கும் விதம் பாராட்டைப் பெற்றது.

நீங்கள் மக்கள் அரசியல் பேசும் சினிமாவே இலக்கு என்றீர்கள்? உங்களுக்குப் பிடித்த அப்படிப்பட்ட படங்களைத் தரும் இயக்குநர் யார்?

கடந்த 15 ஆண்டுகளாகவே என்னைக் கவர்ந்து வைத்திருப்பவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். 'காதல்' தொடங்கி 'வழக்கு எண் 18' வரை அவரைப் போல் என்னை ஈர்த்த மக்கள் அரசியல் பேசும் சினிமாக்காரர் இல்லை.
சமூக அக்கறை பேசும் இயக்குநர் ரஞ்சித்தும், மக்கள் அரசியலை சினிமாவுக்கான மொழியில் வடிவத்தில் கச்சிதமாகக் கொடுக்கும் இயக்குநர் வெற்றிமாறனும் என்னை பிரம்மிக்க வைக்கிறார்கள். அவரின் படங்கள் சினிமா கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கான வழிகாட்டி குறிப்பேடு.

இயக்குநர் கனவுக்கு இன்று தொலைக்காட்சிகளில் களங்கள் நிறையவே இருக்கின்றன. ஃபேஸ்புக், யூடியூப் கூட தளம்தான். இவை சரியான வாய்ப்பா அல்லது பொழுதுபோக்குக்காகக் கூட எதையாவது காட்சிப் படுத்தும் வாய்ப்பு தந்து தரத்தை கேள்விக்குறியாக்கும் இடமா?

தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. அது எல்லோர் கைகளிலும் கிடைத்திருக்கிறது. இது சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு. இப்படிப்பட்ட தளங்களால்தான் எழுத்து, சினிமா எல்லாமே ஜனநாயக வடிவத்தைப் பெற்றிருக்கிறது. இந்த வளர்ச்சியைக் குறைகூற முடியாது.

ஃபேஸ்புக் வருவதற்கு முந்தைய கட்டங்கள் வரை இலக்கியக் கூட்டங்கள், பத்திரிகைகள் மட்டுமே எழுத்தாளர்களை அடையாளப்படுத்தியது. ஆனால், ஃபேஸ்புக் நிறைய அற்புதமான எழுத்தாளர்களை எளிதில் வெளிக் கொண்டுவந்திருக்கிறது.

சமூக வலைதளங்கள் நம் கையில் நமக்கான ஓர் ஊடகமாகவும் இருக்கிறது. அதேவேளையில் சிலர் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று போக்குக்கும் வித்திடுகிறது. ஒருசிலரின் கவன ஈர்ப்பு உத்திகளைக் கொண்டு இப்படிப்பட்ட தளங்களைக் குறை கூற முடியாது. என்னைப் போன்றோர்க்கு இவை சிறப்பான தளம். 7, 8 வருடங்களுக்கு முன்னால் குறும்படம் என்ற ஒரு ஜானர் யாருக்கும் பரிச்சயம் இல்லை. இன்று தொலைக்காட்சி சீரியலுக்கு நிகராக, வெள்ளித்திரையை எட்டிப் பிடிப்பதற்கு குறையாமலும் குறும்படங்கள் மக்கள் அபிமானத்தைப் பெற்றுள்ளன.

உலக சினிமா குறித்த உங்கள் பார்வை?

சினிமா என்றால் என்னவென்ற உரையாடலில் உலக சினிமா என்ற டேக் லைனை விளக்கிவிடலாம் என்று நினைக்கிறேன். சினிமா என்பது கேமரா முன்னால் வெறும் ஒரு கதையை மட்டுமே சொல்லிச் செல்வதும், கருத்தைத் தெறிக்கவிடுவது மட்டும் அல்ல. சினிமா என்று நான் உறுதியாக நம்புவது.. அனுபவம். கதை என்பது ஒரு சிறிய சாக்குதான். அதற்குள் விஸ்தரிக்கும் அனுபவம், வாழ்வியல்.. ஒரு மனிதனின், ஒரு சமூகத்தின், ஒரு மண்ணின் வாழ்வியல்தான் சினிமா. ஓர் அற்புதமான அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தி அனுப்புவதுதான் உலக சினிமா. எடுத்துக் கொண்ட கதைக்களத்தை நல்ல அனுபவமாக மக்களுக்குத் தருவதை உலக சினிமா அழகாகச் செய்துகொண்டிருக்கிறது. அதனால்தான் அது உலக சினிமா.

சினிமாவுக்கென்று தனி மொழி இருக்கிறது. அதனால்தான் அறிமுகம் இல்லாத ஒரு மொழியில் உருவாகும் படைப்பை நாம் ரசிக்க முடிகிறது. அறிவியலும் - கலையும் இணைந்து உருவாக்கிய குழந்தைதான் சினிமா. சினிமாவின் சாத்தியங்கள் வெறும் கதைகளை காதுகளில் சொல்வதல்ல.

காக்கா - நரி கதையைக் கூட சினிமாவுக்கு மொழிபெயர்க்கும்போது சினிமா மொழியில் சிறந்த அனுபவமாக விஸ்தரிக்க முடியும். வடையை எடுக்கலாமா வேண்டாமா என்ற காக்காவின் போராட்டம், வடை களவாடப்பட்டவுடன் பாட்டியின் மனநிலை, நரியின் ப்ளானிங், காக்கா வடையைப் பறிகொடுக்கும் இடம் ஆகியனவற்றை வைத்து ஓர் அனுபவத்தைக் கடத்த முடியும் என்றால் வாழ்க்கையின் எத்தனையோ அனுபவங்கள் கடத்தப்படும்போது அற்புதமான சினிமாக்களைப் படைக்க முடியும்.

கவிதைக்கு ஒரு மொழி இருப்பதுபோல் சினிமாவுக்கு ஒரு காட்சி மொழி இருக்கிறது. சினிமாக்காரர்கள் அந்த மொழியை டிஃபைன் செய்கிறோம் (ஷாட்ஸ், எடிட்டிங் என்றெல்லாம் டிஃபைன் செய்கிறோம்). பார்வையாளர்களுக்கு அந்த அனுபவங்கள் ஒட்டுமொத்தமாக கடத்தப்படுகின்றன. கலை ரசனை, கலை உணர்வு எல்லோருக்கும் ஒன்றுதான். எங்களுக்கு இது பிழைப்பு என்பதால் நுணுக்கங்களை ஆராய்ந்து படைக்கிறோம். பார்வையாளர்கள் ரசிக்குமிடத்தில் இருக்கிறார்கள்.

மக்களுக்கான அரசியலைப் பேசும் சினிமா காதலரான உங்களிடம் சமகாலப் படைப்புகள் மூன்றை சொல்கிறேன்.. உங்களின் கருத்துகளைப் பகிருங்கள்..

ஒத்த செருப்பு சைஸ் 7...

ஒரே ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டு பார்த்திபன் சார், தனது வசனம் மூலம் இரண்டரை மணி நேரம் ரசிகர்களைக் கட்டிவைத்திருக்கிறார். ஆனால், நிறைய கதாபாத்திரங்கள் ஒலிவடிவத்தில் கதையில் இருக்கின்றன. அவற்றின் அவசியம் இருக்கும்போது ஏன் ஹைட் செய்ய வேண்டும் என்ற கேள்வி மட்டும் எழுந்தது.

சூப்பர் டீலக்ஸ்...

சமீபத்தில் நான் ரொம்ப ரொம்ப ரசித்த திரைப்படம். தியாகராஜ குமார ராஜாவின் காட்சிகளில் இருக்கும் ரானெஸ் வேறு எந்த படைப்பாளியிடமும் பார்த்ததில்லை. சில நேரங்களில் அது விமர்சனத்துக்கு உள்ளானாலும்கூட அவர் ஒரு சிறந்த ஃபிலிம் மேக்கர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

காக்காமுட்டை...

மிகுந்த காதலுக்குரிய படம்.. மனிதம் நிரம்பிய குழந்தைகளின் பார்வையில் இந்த சமூக அமைப்பைப் பகடி செய்யும்விதம் அற்புதம்.

உங்களின் அடுத்த இலக்கு?

முழு நீள சினிமாவுக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். கதை தயாராகிக் கொண்டிருக்கிறது.

- தொடர்புக்கு: bharathi.p@hidutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x