Published : 14 Jul 2015 10:00 AM
Last Updated : 14 Jul 2015 10:00 AM
ஒரு பியானோ இசைக் கலைஞரின் விரல்கள் பியானோ கட்டைகளில் உருண்டோடி அற்புதமான இசைக் கோவையைப் பிரசவிப்பதுபோல, கேமராவை இங்மார் பெர்க்மெனின் விரல்கள் தொட்டதும் காட்சிக் கலை அநாயாசமாகப் பிறக்கும். 1957-ல் பெர்க்மென் இயக்கிய ‘தி செவன்த் சீல்’ திரைப்படம் அவரது சிறந்த படைப்புகளுள் ஒன்று.
வாழ்க்கையின் அர்த்தத்தை மரணத்துடன் விளையாடித் தெரிந்துகொள்ளும் மனிதர் களைப் பற்றிய படம் அது. அதில் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட மனிதனாகக் காலன் வருவார். கண்ணில் பட்டவர்களையெல்லாம் தன்னுடன் சதுரங்க ஆட்டம் விளையாட அழைப்பார். கறுப்பு, வெள்ளைப் படமாக இருந்தாலும் ஒவ்வொரு சட்டகமும் அச்சு அசலாக மனதில் பதிந்துவிடும். சில காட்சிகள் நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும். அத்தனை அழுத்தமான காட்சிப் படிமங்களுக்குச் சொந்தக்காரர் இங்மார் பெர்க்மென்.
அபூர்வமான கேமரா கோணங்கள், அழுத்தமான கதைக் களம், ஆழமான தர்க்கங்கள், அதைவிடவும் ஆழமான மவுனங்கள், சிதறடிக்கப்பட்ட புனைவு ஆகிய வற்றைக் கொண்ட சிறந்த படைப்புகள் அவருடையவை.
ஸ்வீடனில் உள்ள உப்பசாலா நகரில் 1918 ஜூலை 14-ல் கிறித்துவப் போதகரின் மகனாகப் பிறந்தார் இங்மார் பெர்க்மென். அவர் குடும்பச் சூழல்தான் பின்னாளில் மத நம்பிக்கைகளைக் குறுக்குவிசாரணை செய்யவும், அதே சமயம் நீதி நெறிகள்குறித்து ஆழமாக அலசவும் பெர்க்மெனைத் தூண்டியது எனலாம்.
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் கலை, வரலாறு, இலக்கியம் பட்டப் படிப்பில் சேர்ந்தபின் பெர்க்மெனின் தேடல் மேடை நாடகம் நோக்கி நகர்ந்தது. அங்கு மாணவர்கள் தயாரித்த மேடை நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கவும் செய்தார். திரைத் துறையில் அவர் காலடி எடுத்துவைத்தபோது, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்திருந்தது. இது உலக வரலாற்றில் மட்டுமல்ல, சினிமா வரலாற்றிலும் மிக முக்கியமான காலகட்டம். அப்போது போரின் தாக்கத்தைத் திரைப்படங்கள் பிரதிபலிக்கத் தொடங்கின. அவரது
‘தி செவன்த் சீல்’(1957), ‘வைல்ட் ஸ்ட்ராபெரீஸ்’(1957), ‘பெர்சோனா’(1966), ‘கிரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’ (1972), ’ஃபேன்னி அண்டு அலெக்சாண்டர்’ (1982) ஆகிய திரைப்படங்கள் புகழ்பெற்றவை.
60-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் தொலைக்காட்சிப் படங்கள், 170 மேடை நாடகங்களை இயக்கினார் பெர்க்மென். இறை நம்பிக்கையின் அடி ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் முரண்களை, மத நம்பிக்கையில் புதைந்துள்ள அபத்தங்களை, தனி மனிதனின் பாலியல் சுதந்திரத்தை, மனிதநேயத்தின் அற்புதத்தைக் காட்சி மொழியாக மொழிபெயர்த்த கலைஞரான பெர்க்மென், 2007 ஜூலை 30-ல் தனது 89-வது வயதில் காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT