Published : 03 Jul 2015 01:13 PM
Last Updated : 03 Jul 2015 01:13 PM

தாயும் பேயும்: மற்றுமொரு பேய்ப் படம் அல்ல பேபி!

இன்று (ஜூலை 3) வெளியாகியுள்ள 'பேபி' படத்தின் திரை அனுபவம்

பாலாஜி சக்திவேலின் இணை இயக்குநர் எடுத்த படம், படத்தின் டீஸர் மற்றும் போஸ்டரை வெளியிட்டது சமந்தா, ஒரு பேய் படம். இந்த மூன்று காரணங்களுக்காக மட்டுமே போய் 'பேபி' படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன்.

படம் 129 நிமிடங்கள் மட்டுமே என்பது தெரிந்ததும், "2 மணி நேரம் தான். சூப்பர்" என்று தயாரானேன். அடுக்குமாடி குடியிருப்பை வித்தியாசமான கோணங்களில் காட்டி, பணியாற்றியவர்கள் பெயரை வெளியிட்ட விதத்தில் ஏதோ ஒரு புதுமை இப்படத்தில் இருக்கும் போலிருக்கிறதே என உடன்வந்த நண்பரிடம் கூறினேன்.

'அதிதி' என்று யாரே ஒருவர் கூப்பிடுவதைப் பார்த்து குழந்தை பயப்படுவதில் தொடங்கியது 'பேபி'. படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானது தான்.

பிரிந்து வாழும் கணவன் - மனைவி இருவரிடமும் ஆளுக்கொரு குழந்தை வளர்கிறது. தன்னிடம் இருக்கும் குழந்தை தனக்கு பிறந்தது இல்லை என கண்டுபிடிக்கிறார் மனைவி. கணவனிடம் கேட்கும்போது, உண்மையில் நடந்தது என்ன என விவரித்து, தன்னிடம் இருக்கும் குழந்தைதான் நம் இருவருக்கும் பிறந்த குழந்தை என கூறுகிறார்.

இருவரும் இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக வாழ ஆரம்பிக்கிறார்கள். கணவன் - மனைவி இருவருக்கும் பிறக்காத குழந்தை எப்போதுமே ஒரு பேயனுடன் விளையாடுகிறது. இன்னொரு குழந்தை பேயால் பாதிக்கப்படுகிறது. அந்த பேய் யார், குழந்தைகள் என்னவானது என விரிகிறது 'பேபி'யின் திரைக்கதை.

தத்தெடுத்த குழந்தையாக நடித்திருக்கும் ஸ்ரீவர்சினி, பிறந்த குழந்தையாக நடித்திருக்கும் சாதன்யா இருவருமே நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். அதிலும் தன்னை எப்போதும் கவனித்து வந்த அம்மா புதிதாக வந்திருக்கும் சாதன்யாவிடம் பாசம் காட்டும்போது ஏங்கும் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் ஸ்ரீவர்சினி.

பேயைப் பார்த்து பயப்படுவது, போகிற இடங்களில் எல்லாம் பேய் இருக்குமோ என நினைப்பது என தனது நடிப்பால் மிரட்சி அடைய வைத்தார் சாதன்யா. இவ்விரண்டு குழந்தைகளின் நடிப்பு தான் படம் முழுவதுமே.

கணவன் மனைவியாக மனோஜ் மற்றும் சைரா. மனோஜ் சில காட்சிகளே வந்தாலும், இருவருமே இப்படத்தின் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மிகச் சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, மிகவும் குறுகிய பட்ஜெட்டில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.

இப்படத்திற்கு இரண்டு குழந்தைகள் ஒரு பலம் என்றால், ஒளிப்பதிவு மற்றும் இசை ஒரு பலம்.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் இருப்பிடம், அந்த வீட்டில் இருந்து லிப்டிற்கு நடந்து செல்லும் பாதை, மொட்டை மாடி, கார் பார்க்கிங், ஒரு பள்ளியின் வரவேற்பறை, ஒரு சர்ச், மருத்துவமனை, ரோட்டில் வண்டி ஒட்டும் காட்சிகள் இவ்வளவு தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கும் இடங்கள். அதிலும் 50% காட்சிகள் குடியிருப்பில் இருக்கும் வீட்டிற்கு உள்ளேயே எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஒளிப்பதிவில் என்னவெல்லாம் வித்தியாசம் காட்ட முடியுமோ, அவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஜோன்ஸ் ஆனந்த். மொட்டை மாடியில் குழந்தை பயந்து முடித்து அப்பா என்று கத்தும் போது 'இடைவேளை' என்று போடும் காட்சி இவரது ஒளிப்பதிவு நேர்த்திக்கு ஒரு சாட்சி.

சதீஷ் - ஹரிஷ் இரட்டை இசையமைப்பாளர்கள், படத்தில் பேய் வாரத காட்சிகளுக்கு கூட இசையால் பயமுறுத்தி இருக்கிறார்கள். பாடல்கள் எனது மனதிற்கு ஒட்டவில்லை என்றாலும், பின்னணி இசையால் பல காட்சிகள் பேய் வரப் போகிறது என எதிர்பார்ப்பை கொடுத்துக்கொண்டே இருந்தது.

நான் இதுவரை பார்த்த பேய் படங்களில், வழக்கத்திற்கு மாறான பேய் படம் என்றால் 'பிசாசு' மற்றும் 'டிமான்ட்டி காலனி' இரண்டையும் கூறுவேன். அந்த வரிசையில் இடம் பிடிக்கிறது இந்த 'பேபி'.

பேய் படங்களில் வழக்கமாக பார்க்கும் காமெடி காட்சிகள், பேய் ஓட்டும் காட்சிகள் என எதுவுமே இப்படத்தில் கிடையாது. இறுதியில் "சர்ச்சுக்கு போ நான் வர்றேன்" என்று மனோஜ் கூறும் போது, பேய் ஒட்டத்தான் போகிறார்கள் என்று நினைத்தால், நடப்பது அதுவல்ல.

எந்த ஒரு குறையும் இல்லாமல், படமே எடுக்க முடியாது. இப்படத்திலும் குறைகள் இருக்கின்றன. ஆனால் குறைகளை எல்லாம் தாண்டி, இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் இவ்வளவு அருமையாக எடுத்திருக்கிறார்களே என்ற ஆச்சர்யம்தான் ஏற்பட்டது.

படம் பார்த்து முடித்து, வீட்டிற்கு வண்டியில் போகும்போது, "கோடிகளில் நாயகன், நாயகி, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், இயக்குநர் என அனைவருக்கும் சம்பளம் கொடுத்து, அதை மிஞ்சும் வகையில் கோடிகளை கொட்டி படம் விளம்பரம் செய்து, தயாரித்து வெளியாகி நமக்கு தலைவலியை வரவைக்கும் படங்களுக்கு மத்தியில் இந்த சின்ன 'பேபி' எவ்வளவோ பரவாயில்லை" என்று தோன்றியது.

நான் நினைத்தது சரியா? பார்த்துவிட்டு சொல்லுங்கள்.