Published : 03 Jul 2015 10:24 AM
Last Updated : 03 Jul 2015 10:24 AM
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐரோப்பிய எழுத்தாளர்களில் ஒருவரான பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka) பிறந்த தினம் இன்று (ஜூலை 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஆஸ்திரியா ஹங்கேரி சாம்ராஜ்ஜியத்தின் (தற்போதைய செக் குடியரசு) பிராக் நகரில் 1883-ல் பிறந்தார். தந்தை கட்டாயப்படுத்தியதால் சட்டம் பயின்றார். கலை, இலக்கியமும் பயின்றார்.
l பணக்கார யூத வியாபாரியான தந்தை எதேச்சதிகார மனோபாவம் கொண்டவர். மகனின் படைப்பாற்றல் திறனை அவர் ஊக்குவிக்கவில்லை. இது தன் வாழ்க்கையிலும் எழுத்துகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக காஃப்கா கூறியுள்ளார்.
l பிரபல படைப்பாளிகளான மாக்ஸ் ப்ரோட், ஆஸ்கர் பாம், பிரான்ஸ் வெர்ஃபெல் ஆகியோரை சந்தித்தார். சோஷலிசம், ஜியோனிசம் உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதித்தார். இவருக்குள் பொதிந்து கிடந்த அறிவாற்றலை அவர்கள் புரிந்துகொண்டனர். தன் படைப்பாற்றலை வெளிப்படுத்த போதிய அவகாசம் கிடைக்கும் வேலையைத் தேடினார்.
l ஒரு நிறுவனத்தில் எழுத்தராகவும் பிறகு இன்சூரன்ஸ் கம்பெனியிலும் வேலை பார்த்தார். மாலை நேரங்களில் எழுதினார். எழுத்துப் பணிக்கு இடைஞ்சலாக இருந்ததால், வேலையை ராஜினாமா செய்தார். பெர்லின் புறநகர்ப் பகுதியில் குடியேறியவர், நண்பர்களின் ஊக்கத்தால் முழுநேர எழுத்தாளனாக மாறினார். யூதராக இருந்தாலும் அனைத்து நூல்களையும் ஜெர்மன் மொழியிலேயே எழுதினார்.
l காஃப்கா 1915-ல் எழுதிய மெட்டாமார்ஃபோசிஸ் போன்ற கதைகளும் 1925-ல் வெளிவந்த ‘தி ட்ரயல்’, ‘தி கேஸில்’ ஆகிய புதினங்களும் அதிகாரத்துக்கு ஆட்பட்ட உலகில் துயரங்களுக்கு உள்ளாகும் தனிமனிதர்களைப் பற்றியவை.
l இவருக்கு 1917-ல் காசநோய், இன்ஃப்ளூயன்சா நோய் தாக்கின. சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் ஹீப்ரு மொழியைக் கற்றார். 1922-ல் பெற்றோருடன் வந்து தங்கினார். உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஆனபோதிலும், தொடர்ந்து எழுதினார். ‘தி ஜட்ஜ்மென்ட்’, ‘இன் தி பீனல் காலனி’, ‘எ கன்ட்ரி டாக்டர்’ ஆகிய நூல்களை எழுதினார்.
l வியன்னா அருகில் உள்ள மருத்துவ மையத்தில் சேர்ந்தார். அப்போது ‘எ ஹங்கர் ஆர்ட்டிஸ்ட்’ என்ற நூலை எழுதி முடித்தார். 41 வயதில், சிகிச்சை பெற்று வந்த இடத்திலேயே (1924) காலமானார்.
l இவரது படைப்புகள் கடுமையாக, விசித்திரமாக, தர்க்கவாதங்களுக்கு அப்பாற்பட்டவையாக கருதப்பட்டன. அதே சமயத்தில் எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், சிந்தனையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்ந்தன. ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆனால், உயிரோடு இருந்தபோது இவரது படைப்புகளில் ஒருசில மட்டுமே வெளிவந்தன.
l அழித்துவிடுமாறு கூறி காஃப்கா தந்திருந்த பல கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாத்து வைத்திருந்த நண்பர் மாக்ஸ் ப்ரோட், அவற்றை இவரது மரணத்துக்குப் பிறகு வெளிவரச் செய்தார். அதனால், ஒரு எழுத்தாளர் என்ற அங்கீகாரமும் புகழும் மரணத்துக்குப் பிறகே கிடைத்தன.
l ‘தி ட்ரயல்’ நூலின் கையெழுத்துப் பிரதி 1988-ல் ஏலத்தில் விடப்பட்டது. ஜெர்மனியை சேர்ந்த புத்தக விற்பனையாளர் சுமார் 20 லட்சம் டாலருக்கு வாங்கினார். கையெழுத்துப் பிரதி இந்த அளவுக்கு விலைபோனது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT