Published : 07 Aug 2019 11:35 AM
Last Updated : 07 Aug 2019 11:35 AM
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானமும், அம்மாநில மறுசீரமைப்பு மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசியல் சட்டம் 370-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றால் காஷ்மீர் சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வந்தது. ஆனால் இச்சட்டச் சிக்கல்களைத் தாண்டி சட்ட நுணுக்கத்தைப் பயன்படுத்தி எளிதாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இது எப்படி சாத்தியம்? எந்த வகையில் இது செய்யப்பட்டுள்ளது என்று பல கேள்விகள் எழுகின்றன. இதற்கான பதில்களாக சட்ட நிபுணர்கள் கூறும் விவரம் இது தான்:
முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்படவில்லை. அது அரசியலமைப்புச் சட்டத்திலே தான் இருக்கிறது. அதில் உள்ள ஷரத்துகளில் தான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தபோது அம்மாநிலத்துக்கு அரசியல் நிர்ணய அவையே முதலில் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியல் நிர்ணய சபை முன்பு உருவாக்கப்பட்டது போலவே இந்த அரசியல் நிர்ணய சபையும் உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக 35ஏ பிரிவு தனியாக சட்டப்பிரிவாகக் கொண்டு வரப்படவில்லை. இதற்கு காஷ்மீரின் அரசியல் நிர்ணய சபையோ அல்லது நாடாளுமன்றமோ ஒப்புதல் கூட தரவில்லை. நேரு- ஷேக் அப்துல்லா ஒப்பந்தத்தின்படி. அப்போதைய குடியரசுத் தலைவர் ஓர் உத்தரவு பிறப்பித்து அது 370-வது பிரிவின் கீழ் பின்னர் சேர்க்கப்பட்டது.
370-வது சட்டப்பிரிவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது இந்த அரசியல் நிர்ணய அவை தான். 1957-ம் ஆண்டு இந்த சபை கலைக்கப்பட்டு சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு விடுகிறது. அப்போது தற்போது இந்தியா வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மட்டும் கணக்கில் கொள்ளாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் சேர்த்து சட்டப்பேரவையில் இடங்கள் உருவாக்கப்பட்டன. அந்த இடங்கள் காலியாக இருக்கும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
அதன்படி, ஜம்முவும் காஷ்மீரும் ஏறக்குறையை ஒரே மக்கள்தொகை கொண்ட பகுதியாக இருந்தாலும் காஷ்மீருக்கு கூடுதலாக 9 இடங்கள் கிடைக்க ஏதுவாயிற்று. மொத்தம் 111 இடங்கள். அதில் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு 24 இடங்கள். மீதமுள்ள 87 இடங்களில் காஷ்மீருக்கு 46 இடங்களும் ஜம்முவுக்கு 37 இடங்களும் அளிக்கப்பட்டன. லடாக் பகுதிக்கு 4 இடங்கள் வழங்கப்பட்டன.
370-வது பிரிவை நீக்க வேண்டும் என்றால் அந்த மாநில சட்டப்பேரவையில் 3-ல் 2 பங்கு ஆதரவுடன் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு நாடாளுமன்றமும் 3-ல் 2 பங்கு ஆதரவுடன் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
370-வது பிரிவை நீக்குவது கடினம்
இதனால் தான் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது மிகவும் கடினமான காரியம் என சட்ட வல்லுநர்களாலும், அரசியல்வாதிகளாலும் அடிக்கடி பேசப்பட்டு வந்தது. தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா அண்மையில் பேசுகையில் கூட, பிரதமர் மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். ஆனால் 370-வது பிரிவின் மீது கை வைக்க முடியாது என உறுதிப்படத் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் தான் காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வேறு வகையில் கையாண்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசியல் சட்ட நிபுணர்களுடன் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு அதனடிப்படையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியுள்ளதாகப் பலரும் கூறுகின்றனர்.
அதன்படி 370-வது பிரிவை நீக்க வேண்டும் எனறால் பெரும் கடினமான காரியம். அதற்கான நடைமுறைச் சாத்தியம் இல்லை. காஷ்மீரில் 3-ல் 2 பங்கு இடங்களில் பாஜக வெற்றி பெற்று தீர்மானத்தை நிறைவேற்றுவதும் சாத்தியமல்ல. ஆனால் 370-வது பிரிவை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் சிறப்பு அந்தஸ்தை எளிமையாக நீக்க முடியும் என சட்டநிபுணர்கள் பிரதமருக்கும், அமித் ஷாவுக்கும் விளக்கியுள்ளனர்.
இதற்கு எளிதாக அரசியல் சட்டப்பிரிவு 367 தெளிவாகக் கூறுகிறது. அதன்படி சட்டங்களை யார் இயற்றினாலும், அதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டாலும், அது நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையாக இருந்தாலும் குடியரசுத் தலைவராக இருந்தாலும், அனைத்தும் சமமான வலிமை கொண்டதாகவே கருதப்படும். அதன்படி தான் அப்போது குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பித்து 35 ஏ உருவாக்கப்பட்டு, 370-வது பிரிவில் சேர்க்கப்பட்டது.
ராம்நாத் கோவிந்த் உத்தரவு
இந்தநிலையில் தான் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தற்போது இல்லாத நிலையில் முன்பு செய்தது போலவே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், அரசமைப்புச் சட்டம் 367-வது பிரிவில் பிரிவு நான்கில் 4 மாற்றங்களைச் செய்துள்ளது அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* இனிமேல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளும், கோட்பாடுகளும், நெறிமுறைகளும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும்.
* ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முதல்வரின் பரிந்துரையின் படி இனிமேல் அங்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் தற்காலிகமாகச் செயல்படுவதற்கு குடியரசுத் தலைவர் அங்கீகரித்துள்ளார்.
* ஜம்மு காஷ்மீரின் ஆளுநர் என்று எடுத்துக்கொள்ளும்போது, ஜம்மு காஷ்மீரின் அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் செயல்படுவார்.
* அரசமைப்புச்சட்டம் 370-வது பிரிவின்படி, ஜம்மு காஷ்மீரில் பிரிவு 2-ன்படி மாநில அரசியல் நிர்ணய சபை என்று அழைக்கப்பட்ட நிலையில் இனி மாநில சட்டப்பேரவையாக அழைக்கப்படும்
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் குடியரசு தலைவரின் உத்தரவு அரசு அறிவிக்கையாகவும் வெளியிடப்பட்டது.
சட்ட நுணுக்கத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு
அடுத்ததாக மற்ற பல மாநிலங்களைப் போல குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அம்மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் பெற வேண்டும். புதிய உத்தரவின்படி இது ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும். ஆனால், காஷ்மீரில் தற்போது சட்டப்பேரவை இல்லை. ஆளுநர் மட்டும் தான் இருக்கிறார்.
எனவே, ஆளுநர் ஒப்புதலைப் பெற்று சட்டப்பேரவை இல்லாத மாநிலங்களுக்கான தீர்மானம் மற்றும் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது வழக்கம். காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திரா பிரிக்கப்பட்டது அப்படித்தான். அதுபோலவே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்தையும், இட ஒதுக்கீட்டுக்கு வழி வகை செய்யும் மசோதாவையும், மாநில மறுசீரமைப்பு செய்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் மசோதாவையும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. தற்போது மாநிலங்களவையும், மக்களவையும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
சுருக்கமாகக் கூறினால் அரசியல் சட்டம் அளித்துள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக காஷ்மீருக்குச் செயல்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றம் ஏற்று நிறைவேற்றியுள்ளது.
உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்புமா?
இதனை உச்ச நீதிமன்றத்தால் கேள்வி எழுப்ப முடியுமா என்ற பார்வையும் முன் வைக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான சட்ட நிபுணர்கள் சொல்வது கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக குடியரசுத் தலைவரின் உத்தரவை பெற்று நாடாளுமன்ற ஒப்புதலுடன் அரசியல் சட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளது.
அதனால் இதே நிலை தான் இதற்கும் இருக்கும் என ஹரிஷ் சால்வே உள்ளிட்ட சில சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர். அதேசமயம் காஷ்மீர் என்பது மற்ற மாநிலங்களவை போல அல்லாமல் தொடக்கம் முதல் தனியான அமைப்பு முறையாகவே அரசியல் சட்டத்தால் பார்க்கப்படுவதால் இதில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.
எனினும், காஷ்மீர் ஆளுநரை முழுமையான அரசியல் பிரதிநிதியாக ஆக்கி, சட்டப்பேரவை இல்லாமல் செய்து, குடியரசுத் தலைவர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சட்டப்பேரவையின் அதிகாரத்தை நாடாளுமன்றம் மூலம் நிறைவேற்றி சாதுர்யமாக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் காய் நகர்த்தி விட்டதாகவே அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT