Published : 13 Jul 2015 02:28 PM
Last Updated : 13 Jul 2015 02:28 PM
உலகத்திலேயே தன் வாயால் கெடும் ஜீவராசிகள் இரண்டு என்றுதான் படம் தொடங்குகிறது. அந்த இரண்டு எவையெவை தெரியுமா?
தவளை ஒன்று; ஹஸ்பண்ட் எனப்படும் ஜீவராசி மற்றொன்று. தவளையை எங்கு பார்க்கிறீர்களோ இல்லையோ, கண்டிப்பாய் இந்த ஜீவராசியை அமேசான் காடுகளில் ஆரம்பித்து அமிஞ்சிக்கரை மார்க்கெட் வரை சகல இடங்களிலும் பார்க்கலாம்.
ஹஸ்பண்ட் ஜீவராசியின் இயல்புகளையும், நடவடிக்கைகளையும் புட்டுப்புட்டு வைத்திருக்கின்றனர். தன் வீட்டுச் சொந்தங்கள் வந்தால் கொடுக்கும் ஆனந்த ரியாக்ஷனையும், மனைவி வீட்டுச் சொந்தங்கள் வந்தால் கொடுக்கும் கேவலமான ரியாக்ஷனையும் பார்க்கும்போது கதாநாயகன் கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பது புரிகிறது.
இந்த ஜீவராசியின் மோசமான நிலைக்கு எதைக் காரணமாகச் சொல்கிறார்கள் தெரியுமா? இதோ காரணங்கள் ஆயிரம்!
ரேடியோ ஜாக்கி, சின்னத்திரைத் தொகுப்பாளர், குணச்சித்திர நடிகர் எனப் பல அவதாரங்களை எடுத்த பாலாஜி வேணுகோபால், இக்குறும்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். பரிதாபக் கணவராக நடித்திருப்பவர் திருவனந்தபுரம் பாலாஜி.
கல்யாணத்துக்கு முன்னால் பெண்களைக் கிண்டல் செய்து மட்டம் தட்டுவதற்கும், கல்யாணம் ஆனதற்குப் பின்னர், மனைவிக்கு அடங்கியவராய்த் தன்னைக் காட்டிக் கொள்ளவும், பெருந்திரளான ஆண்கள் கூட்டம் உண்டு. அவ்வகையில், உறுத்தாமல், ஹஸ்பண்ட் எனப்படும் ஜீவராசியைக் கையாண்டிருப்பது ரசிக்க வைக்கிறது.
கண்டிப்பாய் இந்தக் குறும்படத்தில் வரும் ஹஸ்பண்ட் ஜீவராசியைப் போல, பல ஜீவராசிகள் இந்த அண்டத்தில் உலவிக்கொண்டிருக்கும். இதைப் பார்க்கும்போது உங்களையோ, உங்கள் கணவரையோ, அப்பாவையோ, நண்பரையோ, அக்கா கணவரையோ நினைத்துப் பார்த்தீர்கள் என்றால் அங்கேதான் இக்குறும்படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT