Published : 25 Jul 2015 10:33 AM
Last Updated : 25 Jul 2015 10:33 AM

செம்மங்குடி சீனிவாச ஐயர் 10

தலைசிறந்த கர்னாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் (Semmangudi Srinivasa Iyer) பிறந்த தினம் இன்று (ஜூலை 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் (1908) பிறந்தார். பிரபல வயலின் கலைஞர் திருக்கோடிக்காவல் கிருஷ்ணன் இவரது தாய்மாமா. 4 வயது வரை அவரிடம் வளர்ந்தார். பிறகு, பெற்றோர் ஊரான திருவாரூர் மாவட்டம் செம்மங்குடிக்கு சென்றார். பெரியப்பா மகன் செம்மங்குடி நாராயணசுவாமியிடம் 8 வயது முதல் இசை கற்றார்.

l திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். தினமும் 8 மணிநேரம் பயிற்சி செய்வார்.

l கும்பகோணத்தில் 18 வயதில் இவரது இசைக் கச்சேரி அரங்கேற்றம் நடந்தது. சென்னையில் 1927-ல் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பிறகு, பிரபலமானார்.

l இளமைப் பருவத்தில் இவரது குரலில் பிரச்சினை ஏற்பட்டு, பாடமுடியாமல் போனது. ‘இவன் குரல் தேங்காய் ஓட்டை பாறையில் உடைப்பதுபோல இருக்கிறது. இவன் பாடுவதை நிறுத்திவிட்டு, வயலின் கற்றுக்கொள்ளட்டுமே’ என்றாராம் ஒரு கஞ்சிரா கலைஞர். பாடுவதில் இருந்த ஆர்வம் காரணமாக, அதில் இருந்து விலக இவருக்கு மனம் வரவில்லை. அசுர சாதகம் செய்து, அசாதாரண குரல் வளத்தை மீண்டும் வசப்படுத்திக்கொண்டார்.

l ஒரு வெற்றிகரமான பாடகராகவும், கர்னாடக இசை உலகில் சிறப்பாக குறிப்பிடப்படும் கலைஞராகவும் மறுவடிவம் பெற்றார். மாணவர்களாலும், பிற இசைக் கலைஞர்களாலும் ‘செம்மங்குடி மாமா’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

l இவரது இசைத் திறனால் கவரப்பட்ட திருவாங்கூர் மகாராணி சேது பார்வதி பாய், திருவனந்தபுரம் வந்து சுவாதித் திருநாள் கீர்த்தனைகளை ஒழுங்குபடுத்தி பிரபலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மன்னர் குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்த இவர், திருவாங்கூர் ஆஸ்தானக் கலைஞராக நியமிக்கப்பட்டார்.

l திருவனந்தபுரம் சுவாதித் திருநாள் இசைக் கல்லூரி முதல்வராக 23 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது, தமிழகத்தின் பிரபல இசைக் கலைஞர்களை அங்கு வரவழைத்து கச்சேரிகள் நடத்தி, அவர்களுக்கு சன்மானம், மரியாதைகளை பெற்றுத் தந்து கவுரவித்தார்.

l சென்னை அகில இந்திய வானொலியில் கர்னாடக இசைப் பிரிவின் தலைமை தயாரிப்பாளராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர், மேடைக் கச்சேரிகளிலும், இளம் கலைஞர்களுக்குக் கற்றுக்கொடுப்பதிலும் முழு கவனம் செலுத்தினார். மகாகவி பாரதியாரின் பல பாடல்களைக் கச்சேரிகளில் பாடி பெருமை சேர்த்தார். கைராட்டையில் நூல் நூற்று கதர் ஆடைகளை அணிந்த சுதேசி இவர்.

l இவரது கச்சேரிகளில் எப்போதும் அரங்கம் நிறைந்திருக்கும். 38 வயதிலேயே சங்கீத கலாநிதி விருதைப் பெற்றார். சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண், பத்மவிபூஷண், இசைப் பேரறிஞர், காளிதாஸ் சம்மான் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

l குருபக்தி, தெய்வபக்தி, தேசபக்தி மிக்கவர். 92 வயதுவரை மேடைகளில் பாடினார். சங்கீத மகாவித்வான் என்று போற்றப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் 95 வயதில் (2003) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x