Published : 16 Jul 2015 04:35 PM
Last Updated : 16 Jul 2015 04:35 PM
முன்பெல்லாம் எந்த சொல்லுக்காவது அர்த்தம் தெரியவில்லை என்றால் அகராதியைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம். இந்த இணைய உலகில் என்ன செய்வது என்று யோசிக்கத் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது விக்கிப்பீடியா. பெரும்பாலான சொற்களுக்கான அர்த்தத்தையும், வரலாற்றையும் தெரிந்துகொள்ள உதவுகிறது விக்கி.
தமிழ்ச் சொற்கள், வாக்கியங்களுக்கான அர்த்தங்கள், தகவல்களை தெரிந்துகொள்ள தமிழ் விக்கிப்பீடியா உதவுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தங்களால் ஆன பங்களிப்பைச் செய்து இணையத் தமிழை வளர்த்து வருகின்றனர். அவர்களின் மற்றொரு மைல்கல் விக்கி மாரத்தான்.
விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கி தன்னார்வலர்களும் ஒன்றுகூடி பல்வேறு தலைப்புகளில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பது, புதிய கட்டுரைகளைத் துவங்குவது, குறுங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்வது, பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்துவது, மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டுவது, கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்வது, கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைப்பது உள்ளிட்ட வழக்கமான விக்கிப்பீடியா தொகுத்தல் பணியை செய்வதாகும்.
தமிழ் விக்கிப்பீடியர்களால், வரும் ஜூலை 19-ம் தேதியன்று (ஞாயிறு) தமிழ் விக்கி மாரத்தான் நடத்தப்படுகிறது. இது உலகம் முழுவதுமுள்ள பழைய விக்கி பயனர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமைகிறது. வரும் 19-ம் தேதியன்று 24 மணிநேரமும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதால், பல்வேறு நாடுகளில் உள்ள பயனர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் இதில் பங்கேற்கலாம்.
இலங்கையைச் சேர்ந்த மயூரநாதன் என்பவரின் முயற்சியில் 2003-ம் ஆண்டில் தமிழில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் விக்கி, துவங்கப்பட்ட 11 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக விக்கி மாரத்தான் நடைபெற இருக்கிறது.
திரு.மயூரநாதனும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து மாரத்தானில் பங்குபெறுகிறார். தமிழ் விக்கியின் நெடுநாள் பயனரும், தற்போதைய விக்கிமீடியா இந்திய இயக்குநருமான ரவி சங்கரும் தமது குழுவினருடன் மெக்சிகோவில் நடைபெறும் விக்கிமேனியா கருத்தரங்கில் இருந்து பங்குபெறுகிறார்.
பள்ளிகள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் புதிய தன்னார்வலர்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களை இணைத்துக்கொண்டு, இந்நிகழ்வை மேற்கொள்ள முயற்சிகள் நடந்து வருகின்றன. வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ அல்லது நண்பர் குழுவாக இணைந்தோ, இணையத்தின் வாயிலாக எல்லோருமே இதில் பங்குபெறலாம்.
தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடிகளில் ஒருவரும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான செல்வ சிவகுருநாதனின் எதிர்பார்ப்பின்படி, விக்கி மாரத்தான் அன்று 1000 தன்னார்வலர்கள் தலா 10 கட்டுரைகளை எழுதினால், ஒரே நாளில் சுமார் 10,000 கட்டுரைகளை உருவாக்கிவிடலாம். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் சுமார் 63,000 கட்டுரைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாத் தமிழ்ச் சமூகத்தினரரும் படித்துப் பயனடையும் வகையில், பாடல்கள், செய்யுள், இலக்கியம், சினிமா, மருத்துவம், வாசிப்பு, கல்வி உள்ளிட்ட நமக்குத் தெரிந்த தகவல்களைத் தொகுத்துக் கட்டுரையாக்க, ஒற்றை நாளையாவது ஒதுக்கலாமே.!
இணைய முகவரி: >விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT