Published : 09 Jul 2015 10:30 AM
Last Updated : 09 Jul 2015 10:30 AM
உலகப் புகழ்பெற்ற தலைசிறந்த இந்தித் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட குரு தத் (Guru Datt) பிறந்த தினம் இன்று (ஜூலை 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பெங்களூரில் பிறந்தவர் (1925). தந்தை முதலில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் ஒரு வங்கியில் வேலை செய்தார். தாயார், ஒரு பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.
l மகனின் இயற்பெயர், வசந்தகுமார் சிவசங்கர் படுகோனே. படிப்பதற்காக கொல்கத்தா சென்ற இவர் அங்கேயே வளர்ந்ததால் வங்காளியாகவே அறியப்பட்டார். பின்னர் இவரது பெயர் குரு தத் என மாற்றப்பட்டது. சிறு வயது முதலே, திரைப்படங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
l கொல்கத்தாவில் ஆரம்பக் கல்வி கற்றார். சிறந்த மாணவராகத் திகழ்ந்தாலும் பொருளாதார நிலை காரணமாக கல்லூரி செல்ல முடியவில்லை. 16 வயதில் வருடம் 75 ரூபாய் உதவித் தொகை பெற்று, இசைக் கலைஞர் ரவிசங்கரின் அண்ணன் அல்மோராவில் நடத்தி வந்த இந்தியப் பண்பாட்டு மையத்தில் நடனம், நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றில் 5 வருடங்கள் பயிற்சி பெற்றார்.
l 1944-ல் புனேயில் உள்ள பிரபாத் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தார். சிறிய வேடங்களில் நடித்ததுடன் உதவி இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் பணிபுரிந்தார். அந்த காலகட்டத்தில் தேவ் ஆனந்த், ரஹ்மான் ஆகியோரின் நட்பு இவருக்குக் கிடைத்தது.
l இவர்கள் இருவரின் நட்பு சினிமா உலகில் இவருக்கென்று ஒரு இடத்தை வசப்படுத்துவதற்கு உதவியாக இருந்தது. ‘இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் சிறு கதைகள் எழுதினார். அந்த சமயத்தில்தான் புகழ்பெற்ற ‘ப்யாஸா’ திரைப்படத்தின் கதையை எழுதினார். கஷ்மகஷ் என்ற பெயரில் இவர் எழுதிய இந்தக் கதை திரைப்படத்துக்காக ‘ப்யாஸா’ என்று மாற்றி அமைக்கப்பட்டது.
l 1951-ல் தேவ் ஆனந்த் நடித்த ‘பாஸி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து ‘ஜால்’ படம் வெளிவந்தது. இவரது இயக்கத்தில் அடுத்து வெளிவந்த ‘பாஸ் (Bass)’ படத்தில் நடிகனாக அறிமுகமானார். இவரது ‘ஆர்-பார்’ திரைப்படம் மகத்தான வெற்றி பெற்றது. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தயாரித்தும், இயக்கியும் நடித்தும் புகழ்பெற்றார்.
l ஜானி வாக்கர், வஹீதா ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றவர். 1957-ல் வெளிவந்து அபார வெற்றி பெற்ற ‘ப்யாஸா’ இவரது மாஸ்டர்பீஸ் என்று புகழப்பட்டது. இவரது திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்றன. 50-க்கும் குறைவான திரைப்படங்களையே தயாரித்தாலும் இவை பாலிவுட்டின் பொற்காலத் திரைப்படங்களாகக் கருதப்படுகின்றன.
l இவரது ‘ப்யாஸா’ மற்றும் ‘காகஸ் கே ஃபூல்’ திரைப்படங்கள் அமெரிக்காவின் டைம்ஸ் மற்றும் சைட் அண்ட் சவுண்ட் ஆகிய இதழ்கள் தனித்தனியே வெளியிட்ட சிறந்த 100 படங்கள் பட்டியலிலும் இடம்பெற்றன.
l 1959-ல் வெளிவந்த இவரது ‘காகஸ் கே ஃபூல்’ திரைப்படம் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு படங்களை இயக்கவில்லை. சொந்த வாழ்வில் பல துயரங்களால் அவதியுற்ற இவர் ஒன்றிரண்டு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
l ஒருமுறை இவரை காப்பாற்றியது இவரது நண்பர், தேவ் ஆனந்த். இந்தியாவின் துன்பவியல் சினிமாக்களின் நாயகனாக அறியப்படுபவரான குரு தத், 1964-ல் 39-ம் வயதில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அது தற்கொலை இல்லை என்றும் அதிகமாக மது அருந்தியதாலும் அளவுக்கு மீறி தூக்க மாத்திரை விழுங்கியதாலும் மரணமடைந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இவரது மரணம் இந்திய சினிமாவின் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT