Published : 23 Jul 2015 10:35 AM
Last Updated : 23 Jul 2015 10:35 AM

சந்திரசேகர ஆசாத் 10

இந்திய விடுதலைப் போராட்ட புரட்சி வீரர் சந்திரசேகர ஆசாத் (Chandra Shekhar Azad) பிறந்த தினம் இன்று (ஜூலை 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l உத்தரப் பிரதேச மாநிலத்தின் பதர்க்கா என்ற ஊரில் பிறந்தார் (1906). இவரது இயற்பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி. தந்தை அலிஜார்பூரில் ஒரு எஸ்டேட்டில் பணியாற்றினார். இளமைப் பருவத்தில் பழங்குடியின மக்களிடம் முறையாக வில் வித்தை கற்றார். காசி வித்யா பீடத்தில் சமஸ்கிருதம் கற்றார்.

l 15 வயதில் காந்தியடிகளின் ஒத்துழை யாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இவரிடம் தந்தை பெயர், முகவரி என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்கப்பட்டன. தந்தை பெயர் ஆசாத் (விடுதலை), முகவரி சிறை என்று பதில் கூறினார். கோபம் கொண்ட நீதிபதி ‘இவனை சிறையில் அடையுங்கள்’ என்று உத்தரவிட்டார்.

l உடனே ஆசாத், ‘நான் இவ்வாறு கூறினால்தான் நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன்’ என்று கூற, நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். மேலும் ஆத்திரமடைந்த நீதிபதி, ‘இவனுக்கு 15 பிரம்படி கொடுங்கள்’ என்று உத்தரவிட்டாராம். ஒவ்வொரு அடி விழும்போதும் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என முழங்கினார் இந்த வீர விளைஞர். இதற்குப் பிறகு இவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என்று அழைக்கப்பட்டார்.

l முழுமையான சுதந்திரத்தை அடைய புரட்சிதான் சரியான வழிமுறை என முடிவுசெய்தார். இந்துஸ்தான் குடியரசு அமைப்பைத் தொடங்கிய ராம் பிரசாத் பிஸ்மில்லின் அமைப்பில் இணைந்தார். இந்த அமைப்பின் கொள்கைகள் இவரை மிகவும் கவர்ந்தன.

l சோஷலிச கொள்கைகள் அடிப்படையில்தான் சுதந்திர இந்தியா அமைய வேண்டும் என எண்ணினார். தனது அமைப்புக்குத் தேவைப்படும் நிதிக்காக பிரிட்டிஷ் அரசுப் பொருட்களை இவரும் இவரது கூட்டாளிகளும் கொள்ளையடிக்கத் தொடங்கினர். இவற்றில் 1925-ல் நடைபெற்ற ககோரி ரயில் கொள்ளையும் அடங்கும்.

l பிரிட்டிஷ் அரசு இந்துஸ்தான் குடியரசு அமைப்பை நசுக்கத் தீவிரமாக செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அனைவரும் இணைந்து, இந்த அமைப்பை ‘இந்துஸ்தான் சோஷ லிஸ குடியரசு அமைப்பு’ என்ற பெயருடன் மீண்டும் உயிர்ப்பித்தனர்.

l இதன் ராணுவப் பிரிவின் தலைவராக இவர் செயல்பட்டார். பகத்சிங் உட்பட பல புரட்சியாளர்களுக்கு இவர் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். புரட்சியாளர்களுக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் போர் பயிற்சிகளை அளித்தார்.

l வைஸ்ராய் வந்த ரயிலை குண்டுவைத்து தகர்க்க முயற்சி செய்தனர், லாலா லஜ்பத்ராயின் மரணத்துக்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டனர். இவர் தலைக்கு ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. 1931-ல் துரோகி ஒருவன் துப்பு கொடுத்ததால் இவர் இருந்த இடத்தைப் போலீஸ் சுற்றி வளைத்தது.

l உடனிருந்த சகாவை சாமர்த்தியமாகத் தப்பவைத்த இவர் போலீஸ் படையுடன் நீண்ட நேரம் போராடினார். காலில் குண்டடிப்பட்டதால் அங்கிருந்து தப்பி ஓட முடியவில்லை. இவரது துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மட்டுமே இருந்ததால், எந்த நிலையிலும் பிடிபடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். அப்போது அவருக்கு வயது, 24.

l இவர் தன்னுயிர் ஈந்த இடமான ஆல்ஃபிரெட் பூங்காவுக்கு, ஆசாத் பூங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வீர இளைஞரின் நினைவைப் போற்றும் வகையில், பல பள்ளிகள், கல்லூரிகள், தெருக்கள், மற்றும் ஏராளமான பொது அமைப்புகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x