Published : 07 Jul 2015 10:49 AM
Last Updated : 07 Jul 2015 10:49 AM
ருடால்ஃப் உல்ஃப் - சுவிஸ் வானியல் ஆராய்ச்சியாளர்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளரும் கணித வல்லுநருமான ருடால்ஃப் உல்ஃப் (Rudolf Wolf) பிறந்த தினம் இன்று (ஜூலை 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
1. சுவிட்சர்லாந்தின் ஜூரிச் அருகே ஃபாலண்டென் என்ற இடத்தில் (1816) பிறந்தார். தந்தை, பாதிரியார். ஜூரிச், வியன்னா, பெர்லின் பல்கலைக்கழகங்களில் பயின்றார். பெர்ன் பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
2. ஜெர்மானிய அறிஞர் ஹென்றிச் ஷ்வாபேயின் கண்டுபிடிப்பான சூரியப் புள்ளி சுழற்சியை உறுதி செய்தார். அத்துடன், இதன் முந்தைய பதிவுகளையும் பயன்படுத்தி தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். சூரியப் புள்ளி சுழற்சிக் காலம் என்பது 11.1 ஆண்டுகள் என்றும் துல்லியமாக கணித்தார்.
3. முதலில் இவரது கண்டுபிடிப்புகளை சக வானிலையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், தனது கண்டுபிடிப்புகள் மிகத் துல்லியமானவை என்றும் தனது வழிமுறைகள் கச்சிதமானவை என்றும் இவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆராய்ச்சிப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.
4. சூரியப் புள்ளி சுழற்சிக்கும் பூமியின் காந்தசக்தி செயல்பாட்டுக்கும் உள்ள தொடர்பு 1852-ல் கண்டறியப்பட்டது. இதைக் கண்டறிந்த 4 ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர். சூரியப் புள்ளிகள், சூரியப் புள்ளி குழுக்களை எண்ணுவதன் மூலம் சூரியனின் செயல்பாடுகளை அளவிடும் முறையை மேம்படுத்தினார். இந்த அளவீட்டு முறை, தற்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. இது ‘உல்ஃப்ஸ் சன்ஸ்பாட் நம்பர்ஸ்’ என்று குறிப்பிடப்படுகிறது.
5. புள்ளியியலில் தனக்கு இருந்த ஆழமான அறிவு மற்றும் சூரியப் புள்ளிகளின் தரவு ஆய்வுகளில் இவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். அறிவியல் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
6. பிரமிக்கத்தக்க அளவில் பரவலான ஆய்வுகள் மூலமும் வரலாற்றுப் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் அமைந்திருப்பதால், இவரது பணிகள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. தனது ஆராய்ச்சிகள் குறித்து அவ்வப்போது கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தார்.
7. ‘தி நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி’ என்ற பத்திரிகையை 1856-ல் தொடங்கி நடத்தினார். இறுதிவரை அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். கணிதத் துறையிலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பகா எண்கள், வடிவியல் நிகழ்தகவு, புள்ளியியல் குறித்து ஏராளமான தொடர் கட்டுரைகளை வெளியிட்டார்.
8. இவரது தீவிர முயற்சியால் ஜூரிச்சில் 1864-ல் வானியல் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டது. அந்த மையத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.
9. ஜூரிச் பாலிடெக்னிக் தொடங்கப்பட்டபோது, அதன் தலைமை நூலகராக நியமிக்கப்பட்டார். அப்போது வானியல், கணிதம், அறிவியல் துறைகளில் ஏற்கெனவே இருக்கும் சிறந்த நூல்கள் மற்றும் அரிய நூல்களைத் திரட்டி ஒன்றிணைத்தார்.
10. வானியல் தொடர்பான ஆராய்ச்சிகளை தனது இறுதிக்காலம் வரை தொடர்ந்தவர், சூரியப் புள்ளிகளின் ஒப்பீட்டு எண்ணிக்கைகள் குறித்த அரிய தகவல்களையும் வெளியிட்டு வந்தார். சூரியப் புள்ளி தொடர்பான ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கிய ருடால்ஃப் உல்ஃப் 77 வயதில் (1893) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT