Published : 13 Jul 2015 10:34 AM
Last Updated : 13 Jul 2015 10:34 AM
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற நைஜீரிய நாடக ஆசிரியர், கவிஞர் வோலே சொயிங்கா (Wole Soyinka) பிறந்த தினம் இன்று (ஜூலை 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அபியுகுடா என்ற நகரில் (1934) பிறந்தவர். இவரது தந்தை பாதிரியார், தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். அறிவுக்கூர்மை மிக்க சிறுவன் சொயிங்கா சளைக்காமல் கேள்வி கேட்கும் இயல்பு கொண்டவன். சமாளிக்க முடியாத பெரியவர்கள் அவனைக் கண்டாலே ஓட்டம் எடுப்பார்களாம்.
l மதக் கல்வியோடு, தன் தாத்தா வின் பழங்குடியின பழக்க வழக்கங் களையும் கற்றார். இபாடன் நகரில் அரசு கல்லூரியில் பயின்ற பின், லண்டன் சென்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு ‘தி ஈகிள்’ என்ற கல்லூரி இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
l ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ‘பிளாக் ஆர்பியஸ்’ என்ற இலக்கியப் பத்திரிகையில் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். ‘எ டான்ஸ் ஆஃப் தி ஃபாரஸ்ட்ஸ்’ என்ற தனது முதல் நாடகத்தை எழுதினார். இது நைஜீரிய அரசியல் பிரமுகர்களை நக்கலடித்தது.
l மாணவர்களுக்கு இலக்கியம், நாடகம் பயிற்றுவித்தார். நைஜீரியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள நாடகக் குழுக்களுக்குத் தலைமை ஏற்று நடத்தினார். லண்டனில் உள்ள ராயல் கோர்ட் தியேட்டரில் ஓராண்டு காலம் பணிபுரிந்தார்.
l இவர் எழுதிய பல நாடகங்கள் லண்டனிலும் நைஜீரியாவிலும் அரங்கேறின. வானொலியிலும் ஒலிபரப்பாகின. ராக்ஃபெல்லர் ஃபெலோஷிப் பெற்று நைஜீரிய நாடகங்கள் குறித்து ஆராய் வதற்காக நாடு திரும்பினார்.
l நைஜீரிய அரசியலிலும் முக்கியப் பங்காற்றினார். இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெறுவதற்காக நடந்த போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். 1967-ல் நைஜீரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின்போது கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். ‘விமர்சனத்துக்கு இடமில்லாத சூழல் என்பது, சுதந்திரத்துக்கான மாபெரும் அச்சுறுத்தல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
l இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1986-ல் பெற்றார். இந்த கவுரவத்தைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கர் இவர். இவரது படைப்புகள் நையாண்டி பாணியில் இருந்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தின் தீமைகளை அனைவருக்கும் உணர்த்தின.
l ஏராளமான கவிதைத் தொகுப்புகள், இலக்கிய கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். நாடகம், சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை என இதுவரை இவரது நூற்றுக்கணக்கான படைப்புகள் வெளிவந்துள்ளன. தனது சிறை அனுபவங்கள் குறித்த நூல் (தி மேன் டைடு: ப்ரிஸன் நோட்ஸ்), குழந்தைப் பருவ நினைவுகள் குறித்த நினைவுக் குறிப்பு நூல் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
l சிறப்பு அழைப்பின் பேரில் உலகின் பல பகுதிகளிலும் உள்ள கல்லூரி கள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று இலக்கிய உரைகள் நிகழ்த்தி வருகிறார். லண்டன், அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் இலக்கிய அமைப்புகளின் கவுரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
l அமெரிக்காவின் அனிஸ்பீல்டு உல்ப் புத்தக விருது உட்பட பல விருதுகள், பரிசுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். வோலே சொயிங்கா தற்போது 81 வயதிலும் ஆப்பிரிக்க இலக்கியத் தளத்திலும், அரசியல் களத்திலும் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT