Last Updated : 20 Jul, 2015 09:11 AM

 

Published : 20 Jul 2015 09:11 AM
Last Updated : 20 Jul 2015 09:11 AM

இன்று அன்று | 1960 ஜூலை 20: உலகின் முதல் பெண் பிரதமர்

நாற்பது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர்; முதலாளித்துவப் பொருளாதார முறையைப் புறந்தள்ளிவிட்டுத் தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தேசியப் பொருளாதார முறையை அமல்படுத்தி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவர். அரசியல், பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகளுக்காகக் கடுமையான விமர்சனங் களையும் எதிர்கொண்டவர். சோஷலிசவாதி என்றும் சிங்கள வெறியர் என்றும் பலவிதமாக விமர்சிக்கப்பட்டவர்தான் உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே.

1916-ல் இலங்கையில் (அன்று சிலோன்) ரத்தினபுரி நகரில் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார் மாவோ. 1940-ல் சாலமன் டயஸ் பண்டாராநாயகேவை மணந்த பின்னர், சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கினார். 1956-ல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாலமன் 1959-ல் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் போட்டியிட்டு, 20 ஜூலை 1960-ல் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார் ஸ்ரீமாவோ. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் பெண் பிரதமர் எனவும் புகழ்பெற்றார்.

பிரதமராகப் பொறுப்பேற்ற மாவோ, இலங்கையில் அணி சாரா நாடுகள் அமைப்பை உருவாக்கக் அரும்பாடுபட்டார். வங்கி, காப்புறுதி முதலான பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளைத் தேசிய மயமாக்கினார். இதனால் அமெரிக்கா, பிரிட்டனின் நட்பை இழந்தார். மறுபுறம் சீனா, சோவியத் யூனியனின் தோழமையைப் பெற்றார்.

அடுத்து, இலங்கையில் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் இயங்கிவந்த பள்ளிகள் அனைத்தையும் 1961-ல் அரசுடமையாக்கினார். பின்பு, அவற்றைத் தேசியப் பவுத்தப் பாடசாலைகளாக மாற்றிய மைத்தார். அதுவரை ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலத்தைப் புறந்தள்ளிவிட்டு, சிங்களத்தை ஆட்சி மொழியாகப் பிரகடனம் செய்தார். ஆரம்பத்தில் சிறப்பான முடிவாகத் தோன்றினாலும் ஈழத் தமிழர்களும் இலங்கை சிறுபான்மையினரான இஸ்லாமியர் களும் ஒடுக்கப்பட்டனர். இதனால் தீவிரவாதத் தேசிய வாதத்தைக் கடைப்பிடிப்பதாக விமர்சிக்கப்பட்டார்.கடும் நெருக்கடி உண்டாகியதன் விளைவாக 1965-ல் பதவியிழந்தார். 1970-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஸ்ரீமாவோவின் கொள்கை களால் பணவீக்கம், வேலை இல்லாத் திண்டாட்டம், உணவுப் பற்றாக்குறை, மொழி-இனம் சார்ந்த மோதல் எனப் பல பிரச்சினைகள் மீண்டும் மூண்டன. 1980-ல் ஜெயவர்த்தனாவின் ஆட்சியின்போது ஊழல் குற்றச்சாட்டுகளால் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அடுத்து, குடியுரிமையும் பறிக்கப்பட்டது. 1994-ல் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையில் நடந்தேறிய கோரமான இனவாத யுத்தங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவராக ஸ்ரீமாவோ அறியப்படுவது கசப்பான வரலாற்று உண்மை. எனினும், இலங்கையின் தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி, தன்னிறைவு மிக்க நாடாக மாற்ற இடைவிடாது முயற்சித்தவரும் அவரே என்பதும் மறுக்க முடியாத உண்மை. 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு 10 ஆகஸ்ட் 2000-ல் தன் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்ரீமாவோ. சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு 84-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x