Published : 22 May 2014 10:00 AM
Last Updated : 22 May 2014 10:00 AM

மூத்த குடிமகனின் முத்தான கல்விச் சேவை

சென்னை புறநகர் மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் கையில் ஒரு புத்தகப் பையுடன் நா.சுப்பிரமணியனை நீங்கள் பார்த்திருக்கலாம். தென்னக ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த புத்தகப் பையுடன் அரசு பள்ளிகளுக்கு செல்வதே இவரது முக்கிய வேலையாக இருக்கிறது. கிராமப்புற மாணவர்களுக்கு தேவையான அகராதி, அட்லஸ், திருக்குறள், பொது அறிவுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் ஆகியவை அந்தப் பைக்குள் இருக்கும். கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் புத்தகப் பையுடன் அரசுப் பள்ளிகளுக்கு சென்று வசதிகுறைந்த மாணவர்களுக்கு இவற்றை இலவசமாகத் தருகிறார் நா.சுப்பிரமணியன்.

“வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் கிடைக்கிறது. அதோடு கணினி தொழில்நுட்பம் மூலம் அடிப்படை மொழி மற்றும் பொது அறிவை வளர்த்துக்கொள்கின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமத்து மாணவர்களுக்கு இதெல்லாம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் சிரமப்படுவார்கள் இல்லையா?” என்று, தான் இலவசமாக புத்தகங்கள் கொடுப்பதற்கு காரணம் கூறுகிறார் சுப்பிரமணியன்.

திருவண்ணாமலையில் உள்ள குருவிமலை கிராமம்தான் சுப்பிரமணியனின் சொந்த ஊர். இவர் கடந்த 12 ஆண்டுகளாக தனக்கு வரும் மாத ஓய்வூதியத்தில் இருந்து 4 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி இந்த இலவச புத்தகச் சேவையை செய்து வருகிறார்.இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 120 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

இந்த இலவச புத்தக சேவையோடு நிறுத்திக் கொள்ளாமல், தான் படித்த போளூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆங்கில இலக்கணப் புத்தகங்களை வழங்கியுள்ளார். தவிர சில பள்ளிகளுக்கு அலமாரி, மரப்பலகை ஆகியவற்றையும் செய்து கொடுத்துள்ளார். பெற்றோர்களை இழந்த சில பெண் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டு சத்தமில்லாமல் உதவிசெய்து வருகிறார்.

“பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள் மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தரமான ஆரம்பக் கல்வி அவசியமாகிறது. ஏனெனில் அவர்களே நாட்டின் அடிப்படை வேர். சிறப்பான ஆரம்பக் கல்வி மற்றும் மொழி அறிவு பெற்றவர்கள்தான் உயர் கல்வி படிக்கும்போது புரிதலுடனும் தடுமாறாத ஆங்கிலப் புலமையுடனும் சிறந்து விளங்குகின்றனர். என்னுடைய சேவை என்பது கடல் நீரில் ஒரு துளி போன்றது.

இதேபோல் ஒவ்வொருவரும் முடிந்தவரை தாங்கள் படித்த பள்ளியின் ஏழை மாணவர்களுக்காவது உதவ வேண்டும்” என்று அக்கறையுடன் கூறுகிறார் சுப்பிரமணியன். அவரைப்போல் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் ஒன்றிரண்டு மாணவர்களுக்காவது நாம் உதவி செய்தால் நம் நாடு செழிக்கும்

(மீண்டும் நாளை சந்திப்போம்)​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x