Published : 24 Jun 2015 10:58 AM
Last Updated : 24 Jun 2015 10:58 AM
கடந்த ஞாயிறன்று சர்வதேச யோகா தினம். மோடி உள்ளிட்ட இந்தியர்கள் கொண்டாடினார்கள். அதே நாளன்று தந்தையர் தினம். குடும்ப வாரிசுகள் வாழ்த்தி மகிழ்ந்தார்கள். மயிலாப்பூரில் சஞ்சய் தினம். இசை ரசிகர்கள் ‘வாவ்’ என்று வியந்தார்கள்!
‘இந்த ஆண்டுக்கான ‘சங்கீத கலாநிதி விருது’ பெறுபவர் 47 வயது நிரம்பிய பாடகர் சஞ்சய் சுப்ரமணியன்’ என்று அறிவித்தது மியூசிக் அகாடமி. இரண்டு வருடங்களுக்கு முன் இதே விருதுக்கு சுதா ரகுநாதன் தேர்வு செய்யப்பட்டபோது ‘பலே’ என்று அகாடமியைப் பாராட்டியவர்கள், இப்போது சஞ்சய் தேர்வை ‘பலே பலே’ என்று சிலாகிக்கிறார்கள். எழுபது களுக்குப் பிறகு 50 வயதுக்கும் குறைவானவர்களை இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யும் முறையை மீண்டும் அமல்படுத்தியிருக்கிறார் அகாடமி தலைவர் என்.முரளி. ஜனவரி முதல் தேதி ’சதஸ்’ நிகழ்வின்போது அகாடமி மேடையில் இனி அடிக்கடி இளமை ஊஞ்சலாடும்!
தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அதிகபட்ச பூரிப்பில் இருந்தார் சஞ்சய்.
“இதுவரை சங்கீதத்துக்கு நீ பண்றது சரியான திசைலதான் போயிட்டிருக்கு. இதே டைரக்ஷன்ல உன் பயணம் தொடரட்டும்னு என்னை உற்சாகப் படுத்துவதாகவே இந்த ‘கலாநிதி’ விருதை நான் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு, தனது வழக்கமான ஸ்டைலில் சிரித்தார் சஞ்சய்.
‘‘மதுரை மணி ஐயரின் தாயே… யசோதா மாதிரி நான் இப்போது காற்றில் மிதந்து கொண்டிருக்கிறேன். என் கால்கள் தரையில் பதிய இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும்...” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிறக்கம் செய்திருக்கிறார்!
சங்கீத உலகில் சஞ்சய் சுப்ரமணிய னின் வளர்ச்சி ஆச்சரியமானது.
கிரிக்கெட்டில் ஆரம்பித்தார். தலை யில் அடிபடவே அதை விட்டுவிட்டு வயலினில் நுழைந்து, விரலில் அடி படவே வாய்ப்பாட்டுக்குத் தாவி, ருக்மிணி ராஜகோபாலனிடம் பாட்டுப் படிக்க ஆரம்பித்து, பின்னர் கல்கத்தா கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் பட்டைத் தீட்டிக்கொண்டு, நாகஸ்வர வித்வான் செம்பனார்கோவில் எஸ்.ஆர்.டி. வைத் தியநாதனிடம் நகாசுகளைக் கற்றுக் தெளிந்து, இன்று வெற்றிகரமான மேடைப் பாடகராக பவனி வந்து கொண் டிருக்கிறார்.
இந்த வெற்றிக்குப் பின்னால் நிறையவே உழைப்பு இருக்கிறது. முக்கியமாக, கச்சேரிகளில் அபூர்வமான ராகங்களைக் கையாள வேண்டும் என்கிற வெறி இவருக்கு உண்டு. கேட்டி ராத தமிழ்ப் பாடல்களைத் தேடித் தேடி கண்டெடுத்து, அவற்றை மனப்பாடம் செய்து, பாடிப் பார்த்துப் பழகி மேடைக்கு எடுத்து வரும் ஆர்வம் கொண் டவர், இன்று கர்னாடக இசை உலகின் ஆளுமைகளின் ஒருவரான சஞ்சய்!
முக்கியமாக, எந்தவித வம்பு தும்புகளிலும் நேரடியாகத் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்வதில்லை இவர். “நான் உண்டு… என் பாட்டு உண்டுன்னு போயிட்டிருக்கேன். என்னை விட்டுடங்களேன்..” என்று ஜோராக நழுவிவிடக் கூடியவர். பத்திரிகை களுக்கு லேசில் பேட்டி கொடுத்துவிட மாட்டார். “அதுக்குத்தான் நிறையப் பேர் இருக்காங்களே...” என்று சிரிப் பார். (அண்மையில், ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில் இவரது பேட்டி நான்கு வாரங்கள் வெளியானது, ஓர் அதிசய ராகம்!) அதேபோல், டெலிவிஷன் ரியாலிட்டி ஷோக்களில் நீதிபதியாக இவர் உட்காருவதும் இல்லை!
கிரிக்கெட்டில் ஈடுபாடு அதிகம் கொண்டவர் சஞ்சய். முக்கிய போட்டி களின்போது தனது நேரடி வர்ணனை களை ட்விட்டரில் பதிவுசெய்து கொண் டிருப்பார். தவிர, புத்தகப் பிரியர்!
இரண்டு வருடங்களுக்கு முன் பிரம்ம கான சபாவில் விருது பெற்றார் சஞ்சய். அன்று, விருது வழங்கிய டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணாவை, எந்த ஈகோவும் பார்க்காமல் மேடையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி, தனது மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சபாவில், ‘உப பக்கவாத்தியக் கலைஞர் ஒருவருக்கும் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்பட வேண்டும்’ என்று சஞ்சய் செய்த சிபாரிசு உடனடியாக ஏற்கப்பட்டு அமலில் உள்ளது.
ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார் என்று சொல்லப்படுவது உண்டு. சஞ்சய் விஷயத்தில் அவரது வெற்றிக்கு முன்னால் இருக்கும் பெண், மனைவி ஆர்த்தி! கணவரின் ஒவ்வொரு கச்சேரியின்போதும் முதல் வரிசையில் உட்கார்ந்து அவர் பாடுவதை ஸ்டாண்ட் போட்டு நிற்க வைத்த வீடியோ கேமராவில் பதிவு செய்வார் இவர். பின்னர், செய்த பிழைகளைப் பாடகர் திருத்திக்கொள்ள மிகச் சிறந்த உத்தி இது.
எதிர்காலத் திட்டம் எதாவது வைத் திருக்கிறாரா சஞ்சய் சுப்ரமணியன்?
சுமார் 10 வருடங்களுக்கு முன் ‘காலச்சுவடு’இதழில் வெளியான விரி வான நேர்காணலில் அவர் சொன்னது:
‘‘இசை நாடகம் என்ற வடிவத்தை மீண்டும் உயிர்த்தெழ செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. 20, 22 வயதான கர்னாடக இசைப் பாடகர்கள் பத்து, பதினைந்து பேரை அழைத்து, ‘சில மாதங்கள் எதுவும் செய்யாதீர்கள்’ என்று சொல்லி, இந்தப் பாடல்களை பாட வைத்து இசை நாடகத்தை உருவாக்க வேண்டும். அதற்கான பொருளாதாரரீதியிலான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். அப்போதுதான் அது நான் எதிர்பார்க்கும் அளவு வரும்…’’
இறுதியாக…
சந்தேகம் 1:
வருடா வருடம் திருவையாறில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவில் சஞ்சய் கலந்து கொள்ளாமல் இருப்பது ஏன்? குறிப்பாக, பஞ்ச ரத்ன கோஷ்டியிலும் பாடாமல் தவிர்ப்பது ஏன்?
சந்தேகம் 2:
கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலின் வாசிக்க பெண் கலைஞர் களை இவர் உட்கார வைத்துக் கொள்வதில்லையே, ஏன்?
மியூசிக் அகாடமி தலைமை உரையில் இதற்கான காரணங்களை சஞ்சய விளக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஆல் த பெஸ்ட்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT