Last Updated : 06 Jun, 2015 10:42 AM

1  

Published : 06 Jun 2015 10:42 AM
Last Updated : 06 Jun 2015 10:42 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 34- குருவிக்காரர்களின் லோகம்

சிங்காரப்பேட்டையைப் பற்றி அவசியம் சொல்ல வேண்டும்.

திருப்பத்தூர் பக்கம் வந்த போதெல்லாம் ஜெயகாந்தனின் வாகனம் வந்து நின்று போன ஒரு முக்கியமான ‘ஜங்ஷன்’ சிங்காரப்பேட்டை. கிழக்கே புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கியோ, பெங்களூர் நோக்கியோ தரை மார்க்கமாக வரும் வாகனங்கள் எல்லாம் சிங்காரப்பேட்டை யைக் கடந்துதான் போக வேண்டும்.

சிங்காரப்பேட்டையில் எங்கள் நண்பர் வா.சோ.வேங்கடாசலத்தின் குடும்பத்தினருக்கு நிலம் இருந்தது. அது, சிங்காரப்பேட்டையில் இருந்து கால்நடையாக ஜவ்வாது மலைக்குப் போவோரின் வழித் தடத்தில் ஏகாந்தமாக இருந்தது. அந்த நிலத்தில், மங்களூர் ஓடு வேய்ந்ததும் மண் சுவர் கொண்டதுமான மூத்து முதிர்ந்த ஒரு கொட்டகை இருந்தது. அதுதான் எங்கள் வாசஸ்தலம். அந்த நிலத்தில் இருந்து ஐந்து நிமிஷ கார் பயணத் தூரத்தில் ஒரு கானாறும் ஓடுவதை, நாங்கள் ஒரு காணாத அதிசயம் போல் கண்டுபிடித்து வைத்துக்கொண்டோம். எங்கள் காலை நேரக் குளியல்கள் எல்லாம் அந்தக் கானாற்றில்தான் அரங்கேறின.

சிங்காரப்பேட்டையில் இருந்து நாங்கள் புறப்பட்டு, சீக்கிரமாக அந்த நிலத்துக்குப் போய்விட மாட்டோம்.வழியிலே எத்தனையோ வேடிக்கைகள்!

எல்லாவற்றிலும் ருசிகரமான வேடிக்கை, வழியெல்லாம் ஆங்காங்கே இருந்த குருவிக்காரர்களின் முகாம்களை எல்லாம் கண்டுகொண்டு சென்றது.

அதற்கு முன்பே பல்வேறு இடங்களில் நகரங்களின் வெளிப்புறத்தில் நாங்கள் குருவிக்காரர்களின் முகாமைப் பார்த் திருக்கிறோம். ஆனால், இங்கே சிங்காரப்பேட்டையில் இருந்து ஜவ்வாது மலையை நோக்கிச் செல்லும் பாதையில் அந்தக் குருவிக்காரர்கள் தங்கள் பூர்வீக சூழ்நிலைகளுக்குப் பொருந்தி நின்று ஜொலிக்கிற மாதிரி இருக்கும்.

நண்பர் வேங்கடாசலம் அந்தக் குருவிக்காரர்களிடம் இருந்து முயல் கறியும் காடைகளும் வாங்கி வருவார்.

குருவிக்காரர்களின் முகாம் ஒன்று கண்ணில்பட்டால் போதும், ஜெயகாந்தன் அங்கே நின்றுவிடுவார். கொஞ்சம் எட்டத்தில் எதற்கோ நிற்பவர்கள் போல் நின்று நாங்கள் பார்வையிட்டுக் கொண்டிருப்போம்.

குருவிக்காரர்களைப் பற்றி ஜெய காந்தனால் எங்களுக்குக் கூறப்பட்ட அபிப்ராயங்கள், கருத்துகள் எல்லாம் முற்றிலும் விநோதமானவையாகும். அவர்கள் எப்போதும் பல் துலக்காமல் இருப்பதையும், அவர்கள் குளிக்காமல் இருப்பதையும், எச்சிலில் அவர்களுக்கு உள்ள நாட்டத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அவர்கள் வாழ்க்கை மிகவும் விரும்பத்தக்கது என்று சொல்வார் ஜெயகாந்தன்.

‘அவனவன் உழைப்பு; அவனவன் வாழ்வு’ சுரண் டல் அங்கு நிகழவே முடியாது. அவ்வளவு சுத்தமாக அவர்கள் தங்கள் சந்தோஷங்களைப் பங்குப்போட்டுக் கொண்டார் கள் என்பது அவரது பேச்சின் விளக்கத்தில் இருந்து எங்களுக்குத் தெரியவந்தது.

பகலிலே, எங்கள் நண்பரின் நிலத் தையும், அந்தக் கானாற்றையும் தாண்டிச் சென்று வெகுதூரம் வரைக் கும் அந்தக் குருவிக்காரர்கள் சஞ்சரிப் பார்கள். ஆடவர்களின் கைகளில் நாட்டுத் துப்பாக்கிகளும் கண்ணி வலைகளும் இருக்கும். நிலத்தில் இருந்து ஊருக்கும், ஊரில் இருந்து நிலத்துக்கும் ஜெயகாந்தனும் நாங் களும் போக வர இருக்கும்போது, வழியிலே அவர்களைக் காண்பது ரசமாக இருக்கும்.

குருவிக்காரர்களின் உறுதியான கால்களும், சிவப்பு போன்ற நிறங்களில் கோவணமும், குருவிக்காரிகளின் அங்க அழகு பூராவும் வெளிப்படும் கவலையற்ற நடையும், நரைத்த பெரிய மீசையுள்ள கிழவர்களுக்குக் கூட முட்டியில் உள்ள வலுவும் பூர்வீகமான மானுடத்தின் எழிலை புலப்படுத்தின.

இப்போதெல்லாம் அத்தகைய குருவிக்காரர்களைக் காண்பது அரிது. அவர்கள் செல்போனும், டி.வி.எஸ் 50 வாகனமும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் நகரங்களில் உள்ள சேட்டு கடையில் பலவிதமான நவீனப் பொருட் களை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்கின்றனர். பண்டிகைகளிலும் சந்தை களிலும் கடைபரப்பிப் பொருட்களை விற்பனை செய்யும் நவீன யுகத்துக் குள் அந்தப் பழைய குருவிக்காரர்கள் பிரவேசித்திருக்கிறார்கள்.

அப்போது நாங்கள் கண்ட குருவிக் காரர்களின் லோகம் ஒரு கந்தர்வ லோகம்போல்தான் இருந்தது.

வேங்கடாசலத்தின் நிலத் துப் பண்ணைக் கொட்டகை யில் ஓர் அதிகாலைப் பொழுது, எங்களை பொறுத்த வரையில் அமரத்துவம் வாய்ந்ததான ஒரு கவிதை வரியோடுதான் பிறந்தது.

அந்த நாளுக்கு முதல் நாள், அங்கே மழை பெய்திருந்தது போலும். மறுநாள் காலையின் ஆகா யத்தை இளம்பரிதி தன் பொன் வண்ணக் கரங்களினால் தடவியிருந்தான். துல்லியமான நீலநிற ஆகாயத்தின் பின்னணியில், பொன்னிறச் சிறகுகள் கொண்ட தும்பிகள் பல ஜோடி ஜோடியாகப் பறந்து கொண்டிருந்தன.

ஜெயகாந்தன் அந்தத் தும்பிகளை ரசித்துக் கொண்டிருந்தார். அதன் பின் மெதுவாகப் பாடத் தொடங்கினார்.

‘தும்பி பறக்குது தம்பி’ - இந்த மூன்று சொற்களும் அந்நேரம் அங்கு பொருந் தியது போன்று வேறு எக்காலத்திலும் எங்கும் பொருந்தி இருக்காது.

எங்களை அதிகம் காக்க வைக் காமலேயே ஜெயகாந்தன் அடுத்த வரியையும் பாடிவிட்டார்.

‘தும்பி பறக்குது தம்பி - ஒரு

துணையிருப்பதனை நம்பி’ - இந்தத் தும்பி, தம்பி, நம்பி என்கிற சொற்கள் அன்று எங்களை ஒரு சங்கீதக் கச்சேரிக்கே அழைத்துச் சென்றுவிட்டன.

‘‘தும்பித் தும்பித் தும்பித் தும்பித் தும்பித் தும்பித் தும்பிப் பறக்குது தம்பி!’’ - என்று பாடினோம். தும்புதல் என்கிற வினைச் சொல் இங்கே கவனம் கொள்ளத் தக்கது. அதனால்தான் அதற்குத் தும்பி என்றே பெயர் வந்தது.

‘‘தம்பித் தம்பித் தம்பித் தம்பித் தம்பி…’’ - என்று ஒருவனைத் தட்டி எழுப்பிப் பாடினோம்.

‘ஒரு துணையிருப்பதனை நம்பி நம்பி நம்பி நம்பி நம்பித் தும்பிப் பறக்குது தம்பி…’’ - என்று ஒரு நம்பிக்கையின் உச்சகட்டத்துக்கு எங்களை உயர்த்திச் சென்றது அந்த ஒரு சொல்.

அப்புறம் நாங்கள் எல்லாரும், தும்பி என்பதையும், தம்பி என்பதையும், நம்பி என்பதையும் திருப்பித் திருப்பிச் சொல்லி இசைத்து, அந்த ஒரு வரியை நாங்கள் பயணிக்கிற சங்கீதப் பல்லக்கு ஆக்கிக் கொண்டோம்.

சிங்காரப்பேட்டையில் இருந்து சேலம் போகிற வரைக்கும், ஜெயகாந்தன் காரோட்ட, நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை அந்தத் தும்பிப் பாட்டை எங்கள் குரலில் பாடி, அந்த நெடும் வழியைக் கடந்தோம் என்றால், அந்த ஒரு வரியில் நாங்கள் தோய்ந்த ஆழத்தை நீங்கள் தோராயமாக உணரலாம்.

இதே மாதிரி இன்னொரு வரியும் எங்கள் வழியைக் கடக்க எங்களுக்குப் பெரிதும் உதவியது. ‘‘விதி மாலை தனைச் சுழற்றிவிட்டது போல் முத்து மாலைதனைச் சுழற்றிவிட்டாள் அந்த மோகன மாதவியாள்..!’’ என்பதுதான் அந்த வரி.

இந்தப் பாடலையும், ‘‘விதி விதி விதி விதி விதி மாலைதனைச் சுழற்றிச் சுழற்றிச் சுழற்றிச் சுழற்றிவிட்டது போல் விட்டது போல் விட்டது போல் விட்டது போல்’’ என்று திருப்பிப் திருப்பிப் பாடுகிறபோது, அந்த ஒரு வரியே, ஒரு நெடும்பாடல்போல் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்.

இதே மாதிரி அந்தக் காலத்தில் நாங்கள், ‘‘பரமுத்தன் குணங்குடித் தெரு வில் வரும் பவனி பார்த்து வருவோம் வாருங்கள்…” என்கிற குணங்குடி மஸ் தான் பாடல்களையும், தேசிங்குராஜ னைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களை யும் பாடிக்கொண்டு போனோம்.

- தொடர்வோம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamu1943@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x