Published : 17 Jun 2015 08:48 AM
Last Updated : 17 Jun 2015 08:48 AM
‘ஜான்சியை ஆட்சி செய்யவே தாமோதர் ராவ் என்ற குழந்தையை எனது கணவர் தத்தெடுத்தார். எனவே, வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என நினைத்து ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளத் திட்டமிட வேண்டாம்.’
இது 1857-ல் ஜான்சியின் மன்னர் மற்றும் தன் கணவரான கங்காதர ராவ் இறந்த பின்பு கிழக்கிந்திய கம்பெனியின் ஜெனரல் டல்ஹவுசிக்கு பாரசீக மொழியில் ஜான்சி ராணி லட்சுமிபாய் எழுதிய கடிதம். இன்றும் இக்கடிதம் இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுவருகிறது.
கணவரை இழந்த துயரத்திலிருந்து மீள்வதற்கு முன்பே தன் மண்ணைக் காக்கப் போர்க் களத்தில் குதித்தவர் ஜான்சி ராணி லட்சுமிபாய். இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றிய லட்சுமி பாய் தனது நான்காவது வயதிலேயே தாயை இழந்தவர். குழந்தைப் பருவம் முதலே குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், கத்திச் சண்டை போன்ற போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். ஏழு வயதில் ஜான்சி பகுதியை ஆண்ட கங்காதர ராவ் மன்னரை மணந்தார். இருவருக்கும் பிறந்த குழந்தை நான்கே மாதங்களில் இறந்துபோனது. இதனால் மனம் வாடினாலும் ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற தாமோதர் ராவைத் தத்தெடுத்தனர். லட்சுமி பாய் 20 வயதை எட்டியபோது, கணவர் கங்காதர ராவ் மரணமடைந்தார். ‘நேரடி வாரிசு இல்லாதவர்களின் அரசுகள் ஆங்கிலேயரின் கீழ் வந்துவிடும்’ என்ற சட்டம் அப்போது இருந்தது. அதைக் கண்டிக்கும் விதமாகத்தான் மேலே குறிப்பிடப்பட்ட கடிதத்தை எழுதினார் லட்சுமி பாய்.
உடனடியாக ஜான்சியைக் கைப்பற்ற ஆங்கிலேயப் படை வந்தது. ஆனால், ஜான்சி துணிச்சலாக ஆங்கிலேய அரசை எதிர்த்துப் படை திரட்டிப் போர் தொடுத்தார். ஜான்சியின் படைகளுக்கு உதவ தாந்தியா தோபேயின் தலைமையில் 20,000 பேர் கொண்ட படை அனுப்பப்பட்டது. ஆனால், ஆங்கிலேயரின் என்பீல்ட் ரகத் துப்பாக்கிகளுக்கு முன்னால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஜான்சி ராணிக்கு உதவக் கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் அவருக்கு எதிராகவே ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும், தமது படைகளுடன் இணைந்து மூன்று நாட்கள் கடுமையாகப் போர் புரிந்தார் ஜான்சி ராணி. ஒரு கட்டத்தில் ஜான்சி பகுதியைக் கைப்பற்றி ஜான்சி மக்களையும் அரண்மனையையும் சூறையாடின ஆங்கிலேயப் படைகள். ஆனால், 1858 ஏப்ரல் 4 அன்று மாறுவேடத்தில் தனது மகனுடன் மதிலிலிருந்து பாய்ந்து தப்பினார் ஜான்சி ராணி.
கல்பிக்குச் சென்ற ஜான்சி ராணி தாந்தியா தோபே மற்றும் சில புரட்சிப் படைகளுடன் கைகோத்து மீண்டும் போருக்குத் தயாரானார். இந்தப் புரட்சிப் படை குவாலியரைக் கைப்பற்றியது. அதிரடியாக ஆங்கிலேயப் படை குவாலியரைச் சூழ்ந்தது. இங்கு 1858 ஜூன் 17 அன்று திகிதி கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஆங்கிலேயரோடு ஆக்ரோஷமாகப் போரிட்டபோது ஜான்சி ராணி வீர மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 29தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT