Published : 10 Jun 2015 10:28 AM
Last Updated : 10 Jun 2015 10:28 AM
தமிழக நூலகத் துறையின் முன்னோடியும், பொதுக் கல்வித் துறை இயக்க முதல் நூலகருமான வே.தில்லைநாயகம் (Ve.Thillainayagam) பிறந்த நாள் இன்று (ஜூன் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l தேனி மாவட்டம் சின்னமனூரில் (1925) பிறந்தவர். தந்தை ஆசிரியர். கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளி, உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை, இளங்கலைக் கல்வி பயின்றார்.
l சென்னை பல்கலையில் நூலக அறிவியல், நாக்பூர் பல்கலையில் பொருளியல் முதுகலை, மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளங்கலை, டெல்லி பல்கலையில் நூலகவியல் முதுகலை முடித்தார். அண்ணாமலைப் பல்கலையில் பிரான்ஸ், ஜெர்மனி மொழிகளையும், மதுரை காமராசர் பல்கலையில் ஜோதிடமும் பயின்றார்.
l மாணவப் பருவத்திலேயே நூலகத் துறை மீது அதிக நாட்டம் கொண்டவர். 1949-ல் அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்ற இவர், பொதுக் கல்வித் துறை இயக்க முதல் நூலகராக நியமிக்கப்பட்டார். 1962-ல் கன்னிமாரா பொது நூலகத்தின் நூலகரானார். 1972-ல் தமிழக அரசு பொது நூலகத் துறையின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
l நூலகத் துறை இவரது தலைமையில் மிகச் சிறப்பாக இயங்கியது. மாபெரும் வளர்ச்சி கண்டது. நூற்றொகைகள், குழந்தை நூற்றொகைகள், நூல்கள், அறிமுக விழா மலர்களைப் பதிப்பித்தார்.
l எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ‘இந்திய நூலக இயக்கம்’ என்னும் இவரது நூல், 40 ஆண்டுகளாக இவர் ஆராய்ந்து சேகரித்த தகவல்களுடன் 400 பக்கங்கள் கொண்டது. 4 ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கியது. இவர் வெளியிட்ட ஆய்வறிக்கைகள் நூலக வளர்ச்சித் திட்ட ஆய்வேடுகளாகும்.
l நூலகத் துறை இயக்குநர் பதவியை தொடர்ந்து 10 ஆண்டுகள் வகித்தார். அந்த 10 ஆண்டு காலமும் தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்கின்றனர் வல்லுநர்கள். 1982-ல் ஓய்வு பெற்றார்.
l தமிழில் ‘வேதியம் 1008’ உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார். விரிவாக ஆராய்ந்தறிந்து எழுதக்கூடியவர். இந்திய நூலகத் துறை முன்னோடியான இரா.அரங்கநாதனின் எழுத்துகளால் கவரப்பட்டவர் என்பதால், இவரது எழுத்துகளில் அவரது தாக்கம் தென்படும். ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியுள்ளார்.
l ‘நூலக உணர்வு’, ‘வள்ளல்கள் வரலாறு’, ‘இந்திய நூலக இயக்கம்’ ஆகிய இவரது நூல்கள் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றவை. இவரது ‘இந்திய நூலக இயக்கம்’ நூலைப் பாராட்டி உலகப் பல்கலைக்கழகம் 1982-ல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
l ‘இந்திய அரசமைப்பு’ நூல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பரிசைப் பெற்றது. இவரது ‘குறிப்பேடு’ என்ற நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ‘ஆண்டு நூல்’ (இயர் புக்). வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நூலகத்தின் பெருமையை எடுத்துக்கூறியுள்ளார்.
l இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளத்தில் இவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டன. பல பல்கலைக்கழகங்களில் நிர்வாக உறுப்பினராக இருந்துள்ளார். தமிழகப் பொது நூலக இயக்கத்தின் தந்தை எனப் புகழப்படும் வே.தில்லைநாயகம் 88 வயதில் (2013) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT