Published : 19 Jun 2015 10:31 AM
Last Updated : 19 Jun 2015 10:31 AM

சல்மான் ருஷ்டி 10

உலகப் புகழ்பெற்ற புதின எழுத்தாளர் சர் அகமது சல்மான் ருஷ்டி (Sir Ahmed Salman Rushdie) பிறந்த தினம் இன்று (ஜூன் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# மும்பையில் (1947) பிறந்தவர். தந்தை கேம்பிரிட்ஜில் படித்த வழக்கறிஞர், பிரபல வர்த்தகர். ருஷ்டி முதலில் மும்பையில் தனியார் பள்ளியிலும், பின்னர் இங்கிலாந்தின் வார்விக்-ஷயரில் உள்ள உறைவிடப் பள்ளியிலும் பயின்றார். பின்னர் கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

# இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். எழுத்தாளராக தன் தொழில் வாழ்வை தொடங்கும் முன்பு ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் சிறிது காலமும் பின்னர் ஒரு விளம்பர ஏஜன்சியில் காப்பி ரைட்டராகவும் பணியாற்றினார். 1975-ல் வெளிவந்த இவரது முதல் நாவல் ‘க்ரிமஸ்’ (Grimus)அவ்வளவாக பிரபலம் அடையவில்லை.

# 1981-ல் வெளிவந்த இவரது 2-வது புதினம் ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ உலக அளவில் பிரபலமாகி, அவரை புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. இந்த நாவல் புக்கர் பரிசையும் வென்றது. பிறகு 1983-ல் ‘ஷேம்’ என்ற நாவலை எழுதினார்.

# இந்தியச் சூழலில் தனது படைப்புகளை உருவாக்குபவர். கிழக்கு மேற்கு நாடுகளிடையே உள்ள தொடர்புகள், பரஸ்பர தாக்கங்கள், குடிபெயர்வுகள் மற்றும் அதுசார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதுபவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

# இந்நாவல் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜப்பான் மொழியில் இந்த நாவலை மொழிபெயர்ப்பு செய்த ஒருவர் 1991-ல் கொலை செய்யப்பட்டார்.

# ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று ஈரான் அதிபர் அயதுல்லா கொமேனி ‘ஃபத்வா’ (மத உத்தரவு) பிறப்பித்தார். ருஷ்டியின் தலைக்கு கோடிக்கணக்கில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அரசு இவருக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்தது.

# இலக்கிய சேவைகளுக்காக இவருக்கு 2007-ல் ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. பிரான்ஸின் கலை மற்றும் எழுத்துக்கான கவுரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2008-ல் அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ் அமைப்பின் வெளிநாட்டு கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# 1945-க்குப் பிறகு உள்ள 50 தலைசிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இவருக்கு 13-வது இடத்தை ‘தி டைம்ஸ்’ நாளிதழ் வழங்கியது. 2005-ல் இவரது ‘ஷாலிமார் தி கிளவுன்’ நாவலுக்கு இந்தியாவின் மதிப்புமிக்க ‘ஹட்ச் கிராஸ்வேர்டு புக்’ விருது கிடைத்தது.

# ஐரோப்பிய யூனியன், இத்தாலி, ஜெர்மனி என உலகம் முழுவதும் பல்வேறு கவுரவமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார். ‘ஹாலிவுட் படங்களில் தோன்றுவதாக குழந்தைப் பருவத்திலிருந்தே கனவு காண்பது உண்டு. எழுத்தாளனாக வெற்றி பெறாமல் இருந்திருந்தால் நடிகனாகி இருப்பேன்’ என்பார்.

# அவரது கனவு ஓரளவு நிஜமாகியுள்ளது. இவரது சில படைப்புகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்தன. சில படங்களில் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். 68 வயதாகும் சல்மான் ருஷ்டி தற்போதும் எழுதிவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x