Published : 17 Jun 2015 10:19 AM
Last Updated : 17 Jun 2015 10:19 AM

லியாண்டர் பயஸ் 10

புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரரும் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான லியாண்டர் பயஸ் (Leander Paes) பிறந்த தினம் இன்று (ஜூன் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கோவாவில் பிறந்தவர் (1973). கொல்கத்தாவில் வளர்ந்தவர். தாய் ஒரு முன்னாள் தேசிய கூடைப்பந்து அணி வீரர். 1982-ல் இந்திய கூடைப்பந்து அணிக்குத் தலைமை தாங்கியவர். தந்தை 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர்.

l 5 வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார் பயஸ். இவரின் திறமை, ஆர்வத்தைக் கண்ட பிரிட்டானிகா டென்னிஸ் அகாடமி, இவரை சேர்த்துக்கொண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இவரது ஆரம்பகால வளர்ச்சியில் இந்த அகாடமிக்கு முக்கியப் பங்கு உண்டு.

l 1990-ல் ஜூனியர் விம்பிள்டன் பட்டம் வென்று, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஒரு வெற்றி வீரராக டென்னிஸ் உலகில் காலடி எடுத்தார். டேவிஸ் கோப்பை போட்டிகளில் இவரது வெற்றி சாதனைகள் மகத்தானவை. டென்னிஸ் தரவரிசையில் தன்னைவிட முன்னணி ரேங்கில் இருக்கும் பலரை இவர் வீழ்த்தியுள்ளார்.

l மகேஷ் பூபதியுடன் இணைந்து சர்வதேச டென்னிஸ் அரங்கில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் உட்பட ஏராளமான கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். பல்வேறு சர்வதேச கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்கன் ஓபன், பிரெஞ்ச் ஓபன் போட்டி உள்ளிட்ட அனைத்திலும் பட்டங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர்.

l முன்னாள் டென்னிஸ் உலக நம்பர் ஒன் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவாவுடன் நிறைய போட்டிகளில் இணைந்து விளையாடி வெற்றிபெற்றுள்ளார். டேவிஸ் கோப்பை மற்றும் அட்லாண்டா ஒலிம்பிக்கில் இவர் பெற்ற வெண்கலப் பதக்கமும் இவரது குறிப்பிடத்தக்க வெற்றிகள்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் கனடா நாட்டைச் சேர்ந்த மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து பட்டம் வென்றார். அந்த சமயத்தில் இவரது வயது 41. கிராண்ட் ஸ்லாம் வரலாற்றிலேயே அதிக வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை லியாண்டர் ஏற்படுத்தினார்.

l l இது இவரது 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம். சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இது இரட்டையர் போட்டிகளில் இவரது 700-வது வெற்றி. உலகிலேயே இதுவரை இதைவிட அதிகமான இரட்டையர் போட்டிகளில் வென்றவர்கள் வெறும் 7 பேர்தான் உள்ளனர்.

l இவரது 20 ஆண்டுகால டென்னிஸ் விளையாட்டு வரலாற்றில் மொத்தம் 55 பட்டங்கள், 8 ஆண்கள் இரட்டையர் பட்டங்கள், 7 கலப்பு இரட்டையர் பட்டங்கள், அதிக வயதில் கிராண்ட் ஸ்லாம் வென்றவர் என்ற கவுரவம், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம், 2004 ஒலிம்பிக்கில் அரை இறுதி வரை முன்னேறியது என பல சாதனைகளை படைத்துள்ளார்.

l ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மேற்கு வங்கத்தின் மிகவும் கவுரவம் மிக்க விருதான வங்க விபூஷண் பட்டம் வழங்கி அம்மாநில அரசு சிறப்பித்தது.

l 2016-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பின்னரே டென்னிஸிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இவர் பதக்கம் வென்றால், ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே அதிக வயதில் பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையையும் படைப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x