Published : 24 Jun 2015 05:45 PM
Last Updated : 24 Jun 2015 05:45 PM

நெட்டெழுத்து: கவிதைச் சித்தனின் இணையக் களம்!

தன்னை ஈர்க்கும், ஆக்கிரமிக்கும், எழுதத் தூண்டும் எழுத்துகளை கதை, கவிதை, பத்தி, கட்டுரை வகை எழுத்துக்களாய்த் தொடுப்பவர்கள் பலர். பெரும்பாலானவர்களின் வலைதளங்கள் மேலே குறிப்பிட்ட எல்லா சாராம்சங்களையும் கொண்டிருக்கும். ஆனால் தனது எல்லா வகையான உணர்வுகளையும் கவிதைப் பூக்களாகவே மலர்விப்பவர் ராஜா சந்திரசேகர்.

'கைக்குள் பிரபஞ்சம்', 'என்னோடு நான்' என்னும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மூன்றாம் கவிதைத் தொகுப்பான 'ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும்', 2002-ம் ஆண்டுக்கான 'திருப்பூர் தமிழ்ச்சங்க விருது' பெற்றது.

2003-ம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருதைக் கவிப்பேரரசு வைரமுத்துவின் கைகளால் பெற்றுள்ளார். கடந்த ஒன்பது வருடங்களாக வலைத்தளத்தில் இயங்கி வரும் ராஜா சந்திரசேகர், ட்விட்டர் தளத்திலும் தீவிரமாக இயங்குகிறார். அனுபவச் சித்தனின் குறிப்புகள் என்ற தலைப்பில் தினமும் இடுகைகளைப் பதிவேற்றுகிறார்.

ராஜா சந்திரசேகரின் கவிதைகளை வாசிக்க வாசிக்க, கலவையான உணர்வுகள் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. ஒரே நேரத்தில் நேசமும், பிரிவும், துன்பமும், தாய்மையும் நம்மை உலுக்குகின்றன. ஒற்றை வரியில், உலகத்தைக் காட்டிவிடுகிறார். இதோ அவற்றில் சில:

அன்பு சேர்த்த சொல்லில்

சுவை இருந்தது.

*

விலகிச் செல்ல

உன்னிடம்

காரணம் இருக்கிறது

விடாமல் தொடர

என்னிடம்

அன்பு இருக்கிறது.

*

கண்கள் தரும் முத்தம்

சத்தமிடுவதில்லை.

*

எதற்கு எதையோ

முடிச்சுப் போடுகிறீர்கள்

பிறகு எப்படி அவிழ்ப்பது

என்பது தெரியாமல்

திணறுகிறீர்கள்!

*

முதியவர் முகம் விரித்துச் சொல்கிறார்,

'எல்லோரும் வந்துட்டாங்க. இன்னும் எமன் வரலே!'

*

சந்திக்கப் போகிறோம் என்பதே

சந்தித்த சந்தோஷத்தைத் தருகிறது.

*

"நம் அருகில்

இருக்கும் தூரங்களை

எப்படிக் கடப்பது?" போன்ற அன்பின் வழிக் கவிதைகள், அனுபவச் சித்தனின் குறிப்புகளாய்க் கொட்டிக் கிடக்கின்றன. வாசிக்க: >அனுபவ சித்தனின் குறிப்புகள்

ஒரே போல இருக்கும் இயற்கையை நமது உணர்வுகளின் வசதிக்கேற்பத் திருப்பிக் கொள்கிறோம் என்பதைச் சொல்லுகிறார். வாசிக்க: >எப்போதும் போல்

பால்யத்தின் குதூகலத்தைக் குழந்தை வழிக் காட்சியாய் இவரால் விவரிக்க முடிகிறது. >வாசிக்க: வனம்

கலையின் அழகே அதைக் கவித்துவமாகப் படைத்தலே. இவரின் மெழுகுவர்த்தியும் அப்படித்தான் இருக்கிறது. வாசிக்க: >கதையில் எரிந்த மெழுகுவத்தி

குழந்தைப் பெண், ஓவிய நாற்காலியைப் பரிசளித்து அதிலே அமரச் சொல்கிறாள்; அந்த தேவதைக்கு நன்றி செலுத்தக் காரணங்கள் தேவையா என்ன?! வாசிக்க: >நன்றியின் வண்ணங்கள்

இதைத் தாண்டி, விளம்பரப் பட இயக்குநர் என்கிற முகமும் இவருக்குண்டு. பாரதி ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர், சந்தோஷ் சிவனின் படங்களுக்கும் வசனங்கள் எழுதி இருக்கிறார். ஓவியங்களைச் சேர்த்தோ, காட்சிகளை இணைத்தோ தான் எழுதும் கவிதைகளையே,சிறந்ததொரு காட்சிப் படமாய் மாற்றுகிறார் இவர்.

பட்டாம்பூச்சிக்கும், ஒரு பெண்ணுக்குமான உறவு எப்படிப்பட்டது, அவளின் இறப்பு எங்கனம் அமைந்திருந்தது? மனசைக் கனக்கச் செய்த ஒற்றை நிமிடக் காணொளி. > காண: ரயில்

தற்கொலையை என்றேனும் வரைந்து பார்த்திருக்கிறீர்களா? இதோ காணுங்கள்: > தற்கொலை

வார்த்தையழகை காட்சியாக்க முடிந்த மான்யாவின் ஊஞ்சல் விளையாட்டு! காண: >ஊஞ்சல்

அடுத்தவர்களுக்கு உதவியே உருகிப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டு நேரில் சந்தித்தால் என்ன பேசும்? காண: >இரண்டு மெழுகுவத்திகள்



உயிருடன் இருப்பது வேறு;

உயிர்ப்புடன் இருப்பது வேறு.

*

துயரம் வடிந்தவுடன்

உறங்கலாம் என்றிருந்தேன்,

விடிந்திருந்தது!

*

கண்ணீரில் இறங்கிய வலி

நினைவில் ஏறி உட்கார்ந்து கொண்டது.

*

சுட்டு வீழ்த்திய

பறவையின் வாயிலிருந்தது

குஞ்சுக்கான ஆகாரம்!

*

புன்னகைக்கச் சொல்லி

எடுத்தவரின் புன்னகையும்

இருக்கிறது புகைப்படத்தில்..



மழை நாளில் கவிதை எழுதிடப் பிடிக்கும். கவிதையைப் பெற்றெடுக்க? கெளரிக்குப் பிடிக்கும்! வாசிக்க: >மழை நாளில்

வாழ்வில் எப்பொழுதாவது, கணைகளாய்த் தொடுக்கும் கேள்விகளைக் கொல்ல முயற்சித்து இருக்கிறீர்களா? >வாசிக்க: மீதிக் கேள்விகள்

பெண் என்றாலே அழகு; அதையும் தாண்டியோர் ஆர்வம். பார்த்தலும் ரசித்தலுமே பேரின்பம். விதிவிலக்கு இருக்கிறதா என்ன? >வாசிக்க: நூலகத்தை எடுத்துப்போகும் பெண்

வளர வளர நமக்குள்ளிருக்கும் குழந்தைமையைத் தொலைத்துக் கொண்டே இருக்கிறோம். தொலைந்த குழந்தையைத் தேட முற்படும்போது வாழ்க்கை வளர்ந்து, வாழ்ந்து முடித்து விடுகிறது. முதுமைக்குள் தொலைந்த இளமையாய், இளமைக்குள் தொலைந்த குழந்தையாய்! >வாசிக்க: தொலைந்த குழந்தை

கவிதைகளின் ஊடாகவே வாழ்க்கையைப் பார்க்கும் வல்லமை ராஜா சந்திர சேகருக்கு வாய்த்திருக்கிறது.

எப்போதும் கவிதைகளின் வழியாகவே பிரவாகிக்கும் மனம், கலைக் கண் கொண்டே எல்லாவற்றையும் பார்க்காமல், நடைமுறை வாழ்க்கையை, அதன் சாகசங்களை, வாழ்வின் வழிப் புரிந்துகொள்ள முற்படும் போதுதான் முழுமை அடைகிறது. இதனைத் தெளிவாய்ப் புரிந்து கவியும், காட்சிகளும் உரைக்கிறார் ராஜா சந்திரசேகர்.

ராஜா சந்திரசேகரின் வலைப்பூ முகவரி: >http://raajaachandrasekar.blogspot.in/

முந்தைய அத்தியாயம்- >நெட்டெழுத்து: முகநூலில் முகம் நூறு காட்டும் வித்யா!

நீங்கள் வாசித்து வரும் நல்ல வலைப்பூ, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களைப் பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு இணைப்புகளை அனுப்பலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x