Published : 14 Jun 2015 01:04 PM
Last Updated : 14 Jun 2015 01:04 PM

ஸ்டெஃபி கிராஃப் 10

டென்னிஸ் விளையாட்டில் சாதனை படைத்த ஜெர்மனி வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் (Steffi Graf) பிறந்த நாள் இன்று (ஜூன் 14). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து.

* மேற்கு ஜெர்மனியின் மன்ஹேய்ம் (Mannheim) நகரில் (1969) பிறந்தார். தந்தை பழைய கார் விற்பனையாளர். அவர் வீட்டிலேயே தன் 3 வயது மகள் ஸ்டெஃபிக்கு டென்னிஸ் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். 4 வயதில் டென்னிஸ் மைதானத்தில் பயிற்சி பெறத் தொடங்கிய சிறுமி, 5 வயதுமுதல் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டாள்.

* டென்னிஸ்தான் அவள் சாதிப்பதற்கு ஏற்ற துறை என்பதை ஊகித்த பெற்றோர் 13 வயதில் பள்ளியில் இருந்து நிறுத்தினர். வீட்டில் ஒரு ஆசிரியர் மூலம் உயர்நிலைக் கல்வி கற்றாள்.

* முழுமையான தொழில்முறை வீராங்கனையாக 1983-ல் விளையாடத் தொடங்கினார். அப்போது, உலக டென்னிஸ் தரவரிசையில் அவரது இடம் 124. அதே ஆண்டு இறுதியில் 98, அடுத்த ஆண்டில் 22 என அதிரடியாக முன்னேறி, 1985-ல் 6-வது ரேங்க் என்ற நிலைக்கு உயர்ந்தார்.

* பிரபல சாம்பியன்கள் மார்ட்டினா நவரத்திலோவா, கிறிஸ் எவர்ட்டுக்கு சவாலாக முன்னேறினார் கிராஃப். அவர்களுடன் மோதி வெற்றி பெறவில்லை என்றாலும், அரையிறுதி, இறுதிப் போட்டிகள் வரை முன்னேறினார்.

* உலக மகளிர் டென்னிஸ் போட்டியில் 1986-ல் முதன்முதலாக கலந்துகொண்டபோது, கிறிஸ் எவர்ட்டை தோற்கடித்தார். அதன் பிறகு, எவர்ட்டிடம் இவர் ஒருமுறைகூட தோற்றதில்லை.

* இவரது டென்னிஸ் ஆட்டம் 1987-ல் மேலும் வலுப்பெற்றது. ஆரம்பத்திலேயே பிரெஞ்ச் ஓபன் போட்டிக்கு முன்னால் 6 போட்டிகளில் வென்றார். மியாமி போட்டியில் நவரத்திலோவாவை அரையிறுதியிலும், கிறிஸ் எவர்ட்டை இறுதிப் போட்டியிலும் வென்றது இவரது சாதனை வெற்றிகள். பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் செபாட்டினியையும், இறுதியாட்டத்தில் மார்ட்டினாவையும் தோற்கடித்தார்.

* ஆஸ்திரேலியன் ஓபன், டெக்சாஸ், சான் ஆன்டோனியோ போட்டிகளில் வென்றதோடு, மியாமி போட்டி பட்டத்தையும் 1988-ல் தக்கவைத்துக்கொண்டார். அந்த ஆண்டு நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் போட்டி பட்டங்களையும் அத்துடன் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றார். இதன்மூலம் ‘காலண்டர் இயர் கோல்டன் ஸ்லாம்’ அந்தஸ்தைப் பெற்ற முதல் மற்றும் ஒரே டென்னிஸ் நட்சத்திரம் என்ற பெருமையையும் பெற்றார்.

* மொத்தம் 7 விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்கள், 6 பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர் பட்டங்கள், 5 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி பட்டங்கள், 4 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டி பட்டங்களை வென்றுள்ளார்.

* தொடர்ந்து 186 வாரங்களுக்கு முதலிடத்தில் இருந்தவர். 11 இரட்டையர் போட்டிகளில் வென்றுள்ளார். 1999-ல் ஓய்வு பெறும்போது உலகத் தரவரிசையில் 3-ம் இடத்தில் இருந்தார். பிரபல டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே அகாசியை 2001-ல் திருமணம் செய்துகொண்டார்.

* பல விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர், ‘சில்ரன் ஃபார் டுமாரோ’ என்ற தொண்டு அமைப்பை நிறுவி போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x