Published : 21 Jun 2015 09:50 AM
Last Updated : 21 Jun 2015 09:50 AM
இப்படி ஓர் அமைதியான மக்களை உலகத்தில் எங்குமே பார்த்திருக்க முடியாது. எதற்கும் வாய் திறக்காத, எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிற, எதையும் வேடிக்கையாக மட்டுமே பார்க்கிற சமூகம் எங்குமே இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தனித் தீவில் வளர்க்கப்பட்ட தனி மனிதன்போல எந்தப் பொறுப்புணர்வும், எந்தக் கடமை உணர்வும் இன்றி, தன் குடும்பம், தான் மட்டுமே வாழ்க்கை என வாழப் பழகிவிட்டான்.
தனது கடமையும், பொறுப்பையும் உணராத சமூகத்தில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிற (விலையில்லாப் பொருட்கள் எனும் பெயரில்) கேள்வி கேட்காத, போராட்ட குணமில்லாத, உழைப்பு மற்றும் உற்பத்தி பற்றி உணராத ஒரு சமூகம் உருவாக்கப்பட்டுவிட்டது. எதற்காக இந்த விலையில்லாப் பொருட்களை பெறுகிறோம்? எதற்காக கொடுக்கிறார் கள்? அன்றாடம் பயன்படுத்தும் இந்தப் பொருட்களை நாம் உழைத்து வாங்கிக் கொள்ள முடியாதா என குழந்தைகளுக் குத் தெரிவதில்லை. அதனை அவர்களுக் குக் கூறுவதற்கு எந்தப் பெற்றோருக்கும் துணிச்சலும் கிடையாது. உழைத்துப் பெறாத பொருட்களைப் பெற்று இங்கு உழைப்பின் மதிப்பை குழிதோண்டிப் புதைத்துவிட்டனர்.
இப்படிப்பட்ட பெற்றோர்கள்தான் குழந்தைகளை உருவாக்குகின்றனர். இவர்களைப் பார்த்துதான் இந்தக் குழந்தைகளும் வளர்கின்றனர். இவர்களைக் கற்பதற்கு அனுப்பப்படுகிற கல்விக்கூடங்களும் வாழும் முறைகளைக் கற்றுத் தருவதில்லை. அங்கிருந்து உருவாகிறவர்கள் பின் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?
ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் தான் ஆசிரியர். அவன் பயிலும் கல்விக் கூடம்தான் பல்கலைக்கழகம் . பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதன் பொறுப்பை உணர்ந்திருக்கிறார்களா? இன்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை எதிர்கால முதலீடாகப் பார்க்கின்றனர். பணம் காய்க்கும் மரமாக மாற்ற ஆசை நீரை ஊற்றி வளர்த்து, அரசாங்கத்தின் அல்லது தான் பணிபுரியும் நிறுவனத்தின் அடிமைகளாக மாற்றுகின்றனர். நிறுவனங்களுக்கு நல்ல ஊழியனாகவும், எதைப் பற்றியும் கண்டுகொள்ளாதவனாக வளர்வதே அடிப்படைத் தகுதி என நினைக்கிறார்கள்.
பெரும்பாலான பெற்றோர் தங்களை ஒரு வேலைக்காரனாகவே நினைத்துக்கொண்டு குழந்தைகளை அன்றாடப் பணிகளைக்கூட செய்யவிடாமல், ஓடி ஓடிச் சென்று செய்து அவர்களைப் பொறுப்பவர்களாகவும், தன்னம்பிக்கை அற்ற சோம்பேறிகளாகவும் மாற்றி விடுகின்றனர். தங்கள் பிள்ளை வீட்டில் எப்படி பின்பற்றுவானோ, அதையே தானே சமூகத்திலும் பின்பற்றுவான் என்பதை மறந்துவிடுகின்றனர். அதுவும் ஒற்றைக் குழந்தையாக வளர்ப்பவர்களின் நிலைமை எல்லாவற்றையும் விடக் கொடுமை. அதிக செல்லம் கொடுத்து அவர்களைத் தங்கள் வாழ்க் கையாகவே பார்க்கின்றனர் பல பெற்றோர்.
அப்படி வளர்கிற பிள்ளைகள் பின்னாளில் தங்களது பெற்றோர்களையே பார்த்துக்கொள்ளாதவர்களாக, சுரண்டுபவர்களாக, மதிக்கத் தெரியாதவர்களாக, ஒட்டுண்ணிகளாகவே வாழ்க்கையை நடத்துகின்றனர்.
எந்தப் பெற்றோரும் குழந்தைகளிடம் தங்களின் வருமானத்தை, செலவுகளை சொல்வதே இல்லை. குடும்ப விவரங்களைப் பகிர்ந்துகொள்வதும் இல்லை. வீட்டை விட்டு இவர்கள் வெளியேறும் வரை குழந்தையாகவே நடத்துகின்றனர்.
பெற்றோர்கள் மற்றவர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறை, நண்பர்கள், உறவினர்களிடத்தில் பேசும்முறை, சமுதாயப் பணிகளில் தங்களை இணைத்துக்கொள்ளும் முறை போன்றவற்றை பார்த்துத்தான் குழந்தைகள் வளர்கிறார்கள். எப்போதுமே குடும்பத்தில் ஒரு சிக்கல் வரும்போது அதை தீர்ப்பதுடன், என்ன வழிவகைகளைக் கையாண்டு அந்தச் சிக்கலைத் தீர்த்தோம் என்பதை குழந்தைகளுக்குக் கற்றும் கொடுப்பதும் முக்கியம்.
வெளிநாடுகளில் ஒவ்வொரு குழந்தையிடமும் தன்னம்பிக்கை வளரும் விதத்தில்தான் வளர்க்கிறார்கள். 18 வயது வரைதான் குழந்தைகளுக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுப்பார்கள். பின்னர் அவரவர் பணிகளை அவரவர்களே செய்துகொண்டு, அவரவரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். 18 வயதுக்குப் பின் ஓய்வு பெறும் வயது வரை ஒருவர்கூட சொந்தமாக சம்பாதிக்காமல் இருக்க முடியாது. மற்றவர்களின் உழைப்பில் உடல் வளர்த்து, வாழ்க்கையைக் கழிக்க முடியாது.
நம் நாட்டில்தான் ஒருவன் உழைப்பில் குடும்பமே உட்கார்ந்து உண்ணுவதெல்லாம். அங்குள்ள அரசாங்கம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து, ஒவ்வொருவரின் கல்வித் தகுதி மற்றும் உடல் தகுதிக்கு ஏற்ற வேலையை வழங்கி, அவர்களை உழைக்கச் செய்து வருமானம் உடையவர்களாக மாற்றும். இங்கிருப்பதைப் போல் வீட்டிலேயே பலரை முடக்கிப்போட்டு, வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி, மாவாட்டும் இயந்திரம் போன்றவற்றை இலவசமாக கொடுத்து, வாக்களிக்க மட்டும் நீங்கள் வந்தால் போதும் என்று சொல்வது இல்லை. வாக்களிக்க வருபவர்களுக்கு பணம் கொடுக்கும் ‘சிறப்புத் திட்டங்களும்’ உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை. அதனால்தான் வாக்குரிமை பெறுவதற்கும் அதனைப் பதிவதற்கும் இங்கே அவ்வளவு போட்டி.
இன்றைய நாளில் குழந்தைகளின் கையில் எப்போதும் கைப்பேசி அல்லது கணினிதான். மனிதர்களைப் பார்ப்பதே இல்லை. அவர்களுடன் பேசுவது இல்லை. இந்நிலையில் எவ்வாறு, எங்கிருந்து மனித உறவுகளை இவர்கள் கற்றுக்கொள்ள முடியும்?
இன்றைய அனைத்து பிரச்சினைகளுக்கும் மக்களின் மவுனமே காரணம். இன்று அரசியல் தொடங்கி, கல்வி, ஊடகங்கள் வரை அனைத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் உண்மை நிலை மறுக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதனையும் சமூக மனித னாக மாற்ற வேண்டிய பொறுப்பு, குடும்பம் மற்றும் கல்விக்கூடங்களுக்கே உண்டு. ஆனால், இவை இரண்டுமே சரியில்லாததால்தான் மனிதர்கள் மனிதத் தன்மையற்றவர்களாக, சமூகப் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குழந்தைகளும் தாங்கள் ஏமாற்றப்படுவதை, நசுக்கப்படுவதை உணராதவர்களாக; விடுதலையை அறியாத அடிமைகளாக; ஆதிக்க ஆசை கொண்ட அடிமைகளாக வளர்க்கப்படுகின்றனர்.
‘உண்மையான சுதந்திர மனிதன் எப்படி இருப்பான்’ என்பது இன்றைய இளைஞனுக்குத் தெரியவே தெரியாது. ஓர் அதிகாரியாக, அரசு ஊழியனாக, முதலாளியாக மாறுவது மட்டும்தான் விடுதலை என நினைக்கிறான். இன்று ஒவ்வொருவரும் இதுபோல் மாறியதால்தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குணமாகவே இந்த மவுனம் உருவாகியுள்ளது.
தனிமனிதர்கள், குடும்பங்கள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் வாழ்க்கை முறையையும், அன்றாட நடவடிக்கை களையும் அறியாத ஒருவன் ஒரு சாதாரண மனிதனாகக்கூட உருவாக முடியாது. இங்கு பெற்றோர்கள் உழைக்கவில்லை அல்லது உழைக்க வழியில்லை. அதற்கான காரணமும் இவர்களுக்குத் தெரியவில்லை. உழைப் பின் அவசியத்தை உணர்த்தாமல் ‘இலவசமாக கிடைக்காதா’ என ஏங்க வைக்கும்போது சமுதாயத்தின் முக்கியத்துவம் உணர்த்தப்படாமல் போகிறது. வெறும் அடிமைகளாகவே பிறந்து, அடிமைகளாகவே வாழ்ந்து, அடிமைகளாகவே மடிந்து ஒருவித மவுன கலாச்சாரத்தை உருவாக்கிவிடுகிறார்கள்.
கூட்டுச் சமூக வாழ்க்கையின் மூலம் சமூகத்துக்கு நாம் திருப்பிச் செய்ய வேண்டிய கடமைகளை, பொறுப்புகளை உணரச் செய்ய வேண்டியது பெற்றோர்களும், ஆசிரியர்களும்தான். நம்மைச் சுற்றி நிகழும் திருட்டு, கூட்டுக் கொள்ளை, ஏமாற்று, பித்தலாட்டம், முறைகேடு, அடாவடித்தனம், அநீதி பற்றியெல்லாம் நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லாமல், 500-க்கு 499 மதிப்பெண்களை 41 பேர் பெறுகிற புத்தகப் பூச்சிகளாக மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறோம்.
எதையும் கேள்வி கேட்காமல் வளர்க்கப்படும் குழந்தைகள், இந்த சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய முயற்சிக்காத மவுன கலாச்சாரத்தையே விதைப்பார்கள். இவர்கள் தான் இன்றும் நாளையும் நம் விளைச்சல்கள். ஆம்… இவர்கள்தான் நம் விதையில்லா விதைகள்!
- இன்னும் சொல்லத் தோணுது!
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT