Published : 03 Jun 2015 10:20 AM
Last Updated : 03 Jun 2015 10:20 AM
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அமெரிக்க மாநிலங்கள் கூட்டமைப்பின் தலைவராகப் பதவி வகித்தவரும் சிறந்த அரசியல் பேச்சாளருமான ஜெஃபர்சன் டேவிஸ் (Jefferson Davis) பிறந்த தினம் இன்று (ஜூன் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் கென்டகி மாநிலம் ஃபேர்வியூ என்ற இடத்தில் வளமான விவசாயக் குடும்பத்தில் (1808) பிறந்தார். தந்தை மற்றும் இவரது குடும்பத்தினர் பலரும் அமெரிக்கப் புரட்சிப் போர் சிப்பாய்கள். 1812-ல் நடந்த போரில் பங்கேற்றவர்கள்.
l மிசிசிபி மாநிலம் உட்வில் நகரில் உள்ள வில்கின்சன் அகாடமியில் படிப்பைத் தொடங்கினார். பின்னர் கென்டகி மாநிலம் ஸ்பிரிங்ஃபீல்டில் உள்ள செயின்ட் தாமஸ் கத்தோலிக்கப் பள்ளியிலும், அடுத்து மிசிசிபி ஜெஃபர்சன் கல்லூரியிலும் பயின்றார்.
l 16-வது வயதில் தந்தை மறைந்தார். அதன் பின்னர் மிசிசிபியிலும் லூசியானாவிலும் இருந்த தன் சகோதரரின் பண்ணை வீட்டில் வளர்ந்தார். வெஸ்ட் பாயின்ட்டில் உள்ள அமெரிக்க ராணுவ அகாடமியில் அண்ணன் சேர்த்துவிட்டார். பட்டம் பெற்று அமெரிக்க ஐக்கிய ராணுவத்தில் லெப்டினன்டாக 6 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
l ராணுவப் பணியில் இருந்து விலகி, பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டார். அரசியலிலும் ஆர்வம் ஏற்பட்டது. ஜனநாயகக் கட்சி ஆதரவாளராக அரசியலில் நுழைந்தார். 1843-ல் கவர்னருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். ஆற்றல் வாய்ந்த பேச்சு இவரை கட்சியில் படிப்படியாக உயரவைத்தது.
l அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் 1845-ல் வெற்றி பெற்றார். பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இவர் ஆற்றிய உணர்ச்சிமிகு உரைகள், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன.
l 1846-47ல் அமெரிக்க - மெக்சிகன் போரில் மிசிசிபி துப்பாக்கி படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டார். அவரது வீரத்துக்கு கவுரவம் அளிக்கும் விதமாக, செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
l அதிபர் ஃபிராங்க்ளின் பியர்ஸின் கீழ் 1853 முதல் 1857 வரை அமெரிக்க போர்ப் பிரிவு செயலராகப் பணியாற்றினார். உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலக்கட்டம் (1861-1865) முழுவதும் அமெரிக்க மாநிலங்கள் கூட்டமைப்பின் தலைவராகப் பதவி வகித்தார்.
l ஐக்கிய படைகளிடம் 1865-ல் பிடிபட்ட இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர் தண்டிக்கப்படவில்லை. ஆனால், பொதுப் பதவிகளுக்கு போட்டியிடும் உரிமை இவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. தடை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினராக 3-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டும்கூட அந்த பதவியை வகிக்கமுடியவில்லை.
l அதன் பிறகு தொழில் ரீதியாக பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். டெக்சாஸ் பல்கலைக்கழகம் இவருக்கு முதல்வர் பதவி வழங்க முன்வந்தும், அதை ஏற்க மறுத்துவிட்டார்.
l ‘தி ரைஸ் அன் ஃபால் ஆஃப் கான்ஃபெடரேட் கவர்மென்ட்’ என்ற நூலை 1881-ல் எழுதினார். இறுதி மூச்சு வரை, அமெரிக்க மக்களால் பெருமிதத்தின் அடையாளச் சின்னமாகவே மதிக்கப்பட்ட ஜெஃபர்சன் டேவிஸ் 81 வயதில் (1889) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT