Published : 23 May 2015 10:25 AM
Last Updated : 23 May 2015 10:25 AM
அமெரிக்க இயற்பியலாளரும், இயற்பியலுக்காக 2 முறை நோபல் பரிசு பெற்ற ஒரே அறிவியலாளருமான ஜான் பார்டீன் (John Bardeen) பிறந்த தினம் இன்று (1908). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலம் மேடிசன் நகரில் (1908) பிறந்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தாய் மரணமடைந்தார். மேடிசன் சென்ட்ரல் பள்ளியில் பட்டப் படிப்பை முடித்தார்.
l மேடிசன் பல்கலைக்கழகத்தில் 1923-ல் பொறியியல் பயின்றார். விருப்பப் பாடங்களான இயற்பியல், கணிதத்தில் முதுகலை ஆராய்ச்சிப் படிப்பையும் முடித்தார். 1928-ல் எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங்கில் பி.எஸ். பட்டமும், 1929-ல் எம்.எஸ். பட்டமும் பெற்றார்.
l பிட்ஸ்பர்க் கல்ஃப் ஆராய்ச்சி பரிசோதனைக்கூடத்தில் 4 ஆண்டுகள் புவி இயற்பியலாளராகப் பணிபுரிந்தார். காந்த ஈர்ப்பு, ஈர்ப்புவிசை மேம்பாட்டு முறை குறித்த ஆய்வில் ஈடுபட்டார்.
l அதில் ஆர்வம் குறைந்ததால், திடநிலை இயற்பியலில் கவனத்தை திருப்பினார். அதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதினார். ஆராய்ச்சியை முடிக்கும் முன்பே 1935-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ஃபெலோவாக நியமிக்கப்பட்டார்.
l நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்களுடன் அங்கு 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். உலோகங்களில் பிணைப்பு, மின் கடத்தல், அணுக் கருக்களின் அடர்த்தி குறித்து ஆராய்ந்தார். கணிதம், இயற்பியலில் 1936-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
l பெல் ஆய்வுக்கூடத்தில் 1945-ல் புகழ்பெற்ற இயற்பியலாளர் குழுவுடன் பணிபுரிந்தார். இந்த குழு, குறைகடத்தியான டிரான்சிஸ்டரை கண்டுபிடித்தது. இதற்காக 1956-ல் வில்லியம் ஷாக்லி, வால்டர் பிராட்டன் ஆகியோருடன் இணைந்து நோபல் பரிசு பெற்றார். இன்றைய கணினிகள், அலைபேசிகள் முதல் எண்ணற்ற கருவிகள் அனைத்துமே டிரான்சிஸ்டரால் பின்னிப் பிணைக்கப்பட்ட மின்சுற்றுகளால் ஆனவையே.
l நோபல் பரிசு பெறும் விழாவுக்கு தனது ஒரு மகனை மட்டும் அழைத்துச் சென்றார். இவ்வளவு முக்கியமான விழாவுக்கு ஏன் அனைவரையும் அழைத்து வரவில்லை என்றார் ஸ்வீடன் மன்னர். அதற்கு இவர், ‘‘2-வது முறை நோபல் பரிசு வாங்க வருவேன். அப்போது எல்லோரையும் அழைத்து வருகிறேன்’’ என்றார் மிகுந்த நம்பிக்கையுடன்.
l இயற்பியலில் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொண்டார். லியோன் என்.கூப்பர், ஜான் ராபர்ட் ஸ்ரிஃபர் ஆகியோருடன் இணைந்து அதிவேக கடத்துதிறன் பற்றிய கோட்பாட்டை உருவாக்கினார். அது இவர்கள் மூவரின் பெயரையும் இணைத்து பிசிஎஸ் (BCS) தியரி என்று குறிப்பிடப்பட்டது. இந்த மூவருக்கும் 1972-ல் நோபல் பரிசு கிடைத்தது. இந்த கோட்பாடு பின்னாளில் பல்வேறு ஆய்வுகளிலும், மருத்துவத் துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஜான் பார்டீனின் 2-வது நோபல் பரிசு.
l 15 ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டாவது முறையாக நோபல் பரிசு வாங்கச் சென்றபோது, மறக்காமல் தன் இரு மகன்களையும் விழாவுக்கு அழைத்துச் சென்றார்.
l இவரை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்காவில் இவர் பெயரில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளராக விளங்கிய ஜான் பார்டீன் 83 வயதில் (1991) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT