Published : 24 May 2014 10:00 AM
Last Updated : 24 May 2014 10:00 AM
நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.
‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.
சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.
மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.
‘சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே’ என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.
நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் ‘மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்’ என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.
இப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.
“என்னங்க.... சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல”
“மழை வேற... கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்”
“அதாங்க.... வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?”
“இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே”
“நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல....”
“இல்ல... நீ போன் போடவே இல்ல... நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்.”
“இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ... எதுக்கும்... நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்.”
“அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்” என்றான் அவன் மகன்.
“எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்."
போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment